வளம் கொழிக்கும் இலங்கையில் ஒருவேளை உணவுக்காக வாடிவதங்கும் நிலைமைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றமை கவலை அளிக்கும் விடயமாகும்.

சுதந்திரத்தின் பின்னர் இந்த நாட்டை ஆட்சி செய்த அத்தனை தலைமைகளும் பௌத்த தேரர்களும் தான் தற்போதைய  நிலைமைக்கு காரணமானவர்கள் என்பதோடு பொறுப்புக் கூற வேண்டியவர்களுமாகின்றனர். 

2001ஆம் ஆண்டு சந்திரசேகரன் மூலமாக அரசியலுக்குள் பிரவேசித்த நான் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தலைவர்களுடன் நெருங்கிச் செயற்படுவதற்கு சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தன. 

இதில் குறிப்பாக, போரின் பின்னரான காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் பிரதி அமைச்சுப்பதவியை நான் வகித்திருந்ததோடு, பல விடயங்களை சாத்தியமாக்குவதற்கும் முடிந்திருந்தது.

ஆனால், அப்பிரச்சினைகளின் மூலவேரான இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தனிமனிதான என்னால் கணிசமான தாக்கத்தினை ஏற்படுத்த முடிந்திருக்கவில்லை.

நாட்டின் எதிர்காலம் குறித்து உண்மையான தேசப்பற்றுடன் தலைவர்கள் சிந்திப்பர்களாக இருந்தால் அவர்கள் முதலில் இனங்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு தீர்வினைக் காண்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பார்கள்.

ஆனால், தற்போது வரையில் எந்தவொரு தலைவர்களும் நாட்டின் எதிர்காலத் குறித்து தீர்க்கமான முடிவெடுத்தவர்களாக காணப்படாமை வருந்ததத் தக்க விடயமாகின்றது. 

இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு அரசியல் தலைவர்களிடத்தில் பதவி நிலைமைகளைத் தாண்டி 'அரசியல் பலம்' இருந்திருக்கவில்லை என்பதும் அதற்கு பௌத்த மதத் தலைவர்கள் துணைபோனார்கள் என்பதும் துரதிஷ்டவசமானது.

அந்த வகையில், அனைத்துப் பிரச்சினைகளின் ஆணிவேராக இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாது நாடு மீண்டெழுதல் என்ற விடயத்தினை சிந்தித்துப் பார்க்க முடியாத நிலைமையே தோன்றியுள்ளது.

இந்த விடயத்தில் இனியாவது, அனைத்து இனங்களின் தலைவர்களும் பௌத்த மதத் தலைவர்களும் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும். 

தற்போது காலிமுகத்திடலில் தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டமானது, 'கோட்டா கோ கோம்' என்ற தொனிப்பொருளிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

ஆனால், இந்தப் போராட்டத்தின் அடிநாதம், இலங்கையின் அரசியலில் 'ஒரு முறைமை மாற்றத்தினை'  ஏற்படுத்துவது தான் என்பது வெளிப்படையானது. 

அவ்வாறானதொரு அரசியல் முறைமை மாற்றமானது, நீடித்து நிலைத்திருக்ககூடிய அர்த்தபூர்மானதாக இருக்க வேண்டும். தற்காலிமானதாக இருக்கக் கூடாது என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும். 

இவ்வாறிருக்கையில்,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் ஊடாடிய காலத்தில் நான் முன்மொழிந்த விடயங்கள் சிலவற்றை மீட்டிப்பார்க்க விளைகின்றேன். 

குறிப்பாக, போர் நிறைவுக்கு வந்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடத்தில், முக்கியமானதொரு விடயத்தினை தெரிவித்திருந்தேன். 

அதாவது, உலகப்போர்களில் அதிகளவு இரத்தம் சிந்திய கலிங்கப் போரில் வெற்றிபெற்ற அசோகச்சக்கரவர்த்தி போரே வேண்டாம் என்ற தீர்மானத்திற்கு வந்தார். பௌத்த மதத்தினை தழுவினார். பஞ்சசீலக் கொள்கைகளை பரப்பினார். 

அவ்வாறான முன்னுதாரணத்தினைக் கொண்டு, போரினை முடிவுக்கு கொண்டுவந்த தாங்கள் இனங்களுக்கு இடையில் நீண்டகாலமாக காணப்படும் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று கோரினேன். 

இலங்கை வரலாற்றில் புதிய அரசியல் சரித்திரத்தினை எழுதிய மாபெரும் அரசியல்வாதி என்ற முன்னுதாரணத்திற்கு ஆளாவீர்கள் என்றும் நான் நேரிலேயே எடுத்துரைத்திருந்தேன். 

அச்சமயத்தில், அவர், புன்னகையுடன் நிச்சயமாக மேற்கொள்வோம் என்று கூறினார். ஆனால் அவர் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு நடைமுறைரீதியான தீர்வினைக் காண்பதற்கு தவறிவிட்டார். 

ஈற்றில், பிரதமர் பதவியில் இருந்து அவர் கறைபடிந்த நிலையில் வெளியேறியுள்ளமை தான் நடைமுறையில் சாத்தியமாகியிருக்கின்றது. அதுமட்டுமன்றி முழுநாட்டிற்கும் சுதந்திரம் பெற்றுக்கொடுத்தேன் என்று மார்பு தட்டியவரால் சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமையே ஏற்பட்டிருக்கின்றது. 

இதேவேளை,கடந்த ஏப்ரல் ஒன்பதாம் திகதி முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு குறுந்தகவலொன்றை அனுப்பியிருந்தேன். அதில், பொதுமக்கள் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, அரசாங்கத்திற்கு எதிரான மனோநிலைக்கு சென்று கொண்டிருக்கும் நிலைமைகள் தீவிரமடைந்துள்ளன என்பதை வெளிப்படையாகவே சுட்டிக்காட்டினேன். 

அதன்போது, எனது சுட்டிக்காட்டல் தொடர்பில் கரிசனை கொள்வதாக பஷில் ராஜபக்ஷ பதிலளித்திருந்தார். ஆனால் அதற்கான முறையான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படாமையால் அவருடைய சகோதரரான மஹிந்த ராஜபக்ஷ மே ஒன்பதாம் திகதி பிரதமர் பதவியிலிருந்து விலகி மறைந்து வாழும் நிலைக்குச் செல்ல வேண்டி ஏற்பட்டது. அத்துடன், பஷில் ராஜபக்ஷ தனது பாராளுமன்ற உறுப்புரிமையை ஜுன் ஒன்பதாம் திகதி இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. 

அடுத்து, கோட்டாபய ராஜபக்ஷ, இவருடன் பல்வேறு கருத்து ரீதியான முரண்பாடுகள் இருந்தாலும், இவர் ஒரு செயல்வீரர் என்ற மனோநிலைமை அடிப்படையில் இருந்தது. 

இதனால், அவ்விதமான ஒருவர் அரசியலில் உச்சபதவியை வகித்தால் பல்வேறு சீர் திருத்தங்களை மேற்கொள்வார் என்ற பலத்த எதிர்பார்ப்பு எனக்குள் இருந்தது. 

அவ்விதமான எதிர்பார்ப்பு ஏற்படுவதற்கு அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் பேச்சுவார்த்தை அடிப்படையில் சாத்தியமான விடயங்கள் அடிப்படைக் காரணமாக இருக்கின்றன.

இந்நிலையில், ஏழு தசாப்தங்களுக்குப் பின்னர் நாட்டுக்கு கிடைத்துள்ள சீர்திருத்தவாதியாக கோட்டாபயவை நோக்கினேன். ஆனால் அவர் பதவியில் அமர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் அதற்கு நேர் எதிரான பிரதிபலிப்பையே செய்திருக்கின்றார். தற்போதும் செய்து கொண்டு இருக்கின்றார். 

அதிகாரத்தினை தக்கவைத்துக்கொள்வதற்காக பலவேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றார். ஆனால், நாட்டின் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதை அவரால் தடுத்து நிறுத்திக் கொள்வதற்கு முடிந்திருக்கவில்லை. 

நிலைமைகளைச் சமாளிப்பதற்காக பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமித்துள்ளார். ஆனால் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று மாதமொன்று கடந்துள்ள போதும் அவரால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிந்திருக்கவில்லை. 

மாறாக, பிரச்சினைகளின் ஆழத்தினையே அவர் வெளிப்படுத்திய வண்ணமுள்ளனர். இது நாட்டை பதற்றத்திற்குள் வைத்திருக்கும் ஒரு செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. 

இந்த நாட்டின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பங்களை திட்டமிட்டு நழுவச் செய்தற்கு திரைமறைவில் காரணமாக இருந்தவர் ரணில் விக்கிரமசிங்க. 

குறிப்பாக, சந்திரிகா காலத்தில் இனப்பிரச்சினைக்காக முன்மொழியப்பட்ட பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற தீர்வுத்திட்டம் தோற்றுப்போவதற்கு திரைமறைவில் காரணமாக இருந்தவர் ரணில் விக்கிரமசிங்க. 

அதன்பின்னர் 2015இல் மீண்டும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டபோதும் அதனை ரணில் விக்கிரமசிங்க முறையாக பயன்படுத்தியிருக்கவில்லை. 

வாய்ப்புக்களை நழுவவிட்ட தலைவர்களில் முக்கியமானர் ரணில் விக்கிமசிங்க. இவ்வாறான ஒருவர் தான் 'நாட்டின் மீட்பர்' என்ற கோதாவில் களமிறக்கப்பட்டுள்ளார். அவ்வாறு களமிறக்கப்பட்ட ரணிலால் எதனைச் சாதித்துவிட முடியும் என்ற கேள்வி அதிகமாகவே உள்ளது.

இவ்விதமான சூழலில் தற்போது 21ஆவது திருத்தச்சட்டம் பற்றிய பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 21ஆவது திருத்தச்சட்டம் குறித்து வாதப்பிரதிவாதங்கள் செய்கின்றார்கள்.  நிறைவேற்று அதிகார ஜனாதிபத முறைமை நீக்கப்பட்டு பாராளுமுன்றத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

ஆனால், அரசியலமைப்பில் திருத்தம் செய்யும்போது, இனப்பிரச்சினைக்கான தீர்வினையும் உள்ளடக்கியதாக தீர்வினை காண வேண்டும் என்பதை எந்தவொரு தரப்பினரும், ஏன் வலியுறுத்தவில்லை என்பதே பிரதான கேள்வியாகின்றது. 

குறிப்பாக, 1956ஆம் ஆண்டிலிருந்து இனப்பிரச்சினை தீர்வுக்காக முன்னெடுக்கப்பட்ட எத்தனையோ ஒப்பந்தங்களும், பேச்சுக்களும் வெற்றியளித்திருக்கவே இல்லை. இதற்கு பௌத்த தேரர்களின் வகிபாகமும் அதிகமாகவே உள்ளது. 

ஆகவே, தற்போது ஏற்பட்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில், அனைவரும் இலங்கையர்கள் என்ற மனோநிலை உருவாக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் தலைமைகளும், பௌத்த தலைமைகளும், ஏனைய சமய, சிவில் தரப்பினரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

பெ.இராதாகிருஷ்ணன்
முன்னாள் பிரதி அமைச்சர்