'கிராமத்து நாயகன்' என ரசிகர்களாலும், திரையுலக வணிகர்களும் போற்றப்படும் நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படமான 'காரி' படத்தின் முன்னோட்டம் வெளியான 24 மணி நேரத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனையை படைத்திருக்கிறது.

அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'காரி'. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பார்வதி அருண் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜேடி சக்கரவர்த்தி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், 'ஆடுகளம்' நரேன், ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, நாகி நீடு, பிரேம், 'பிக் பொஸ்' சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லக்ஷ்மன் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் முன்னோட்டத்தில் வெற்றிபெறுவது ஜல்லிக்கட்டு காளையா? அல்லது பந்தயக் குதிரையா? என உருவகப்படுத்தி இருப்பது பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

நடிகர் சசிகுமாரின் திரைப்படங்களுக்கு தமிழகத்தின் சிறு நகரம் மற்றும் கிராமங்களில் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாலும், இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் குறுகிய கால அவகாசத்தில் 15 லட்சத்துக்கு மேலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டிருப்பதாலும், திரையுலக வணிகர்கள் 'காரி' திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

இதனிடையே சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு இப்படத்தில் இடம்பெற்ற “கொப்பன்மவனே..” எனத் தொடங்கும் பாடலை வெளியிட்டு, தந்தைமார்களை கௌரவப்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிட்டத்தக்கது.