பங்காளதேஷில் பெய்து வரும் கனமழைக்கு 41 பேர் உயிரிழப்பு

By T. Saranya

20 Jun, 2022 | 11:27 AM
image

பங்காளதேஷ் வடகிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

பங்காளதேஷில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின்போது மழை மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்கம் என்றபோதிலும், கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு தற்போது பேய் மழை கொட்டி வருகிறது. 

இதனால் அந்த நாடு கடந்த 122 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. 

குறிப்பாக சில்ஹெட் மற்றும் சுனம்கஞ்ச் ஆகிய இரு மாவட்டங்களும் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

இரு மாவட்டங்களிலும் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீடுகளை இழந்த மக்கள் பாடசாலைகளில் முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மழை, வெள்ளம் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது. 

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கனமழைக்கு இதுவரை பங்காளதேஷ் மற்றும் இந்தியாவில் சிறுவர்கள் உள்பட 41 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் இந்த கனமழையால் சுமார் 40 இலட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right