(எம்.மனோசித்ரா)
அத்தியாவசிய தேவை தவிர தனிப்பட்ட தேவைகளுக்காக வாகனங்களை வைத்திருப்போர் எதிர்வரும் 3 தினங்களுக்கு (20,21,22) எரிபொருள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்.
23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்கள் வருகை தரும்பட்சத்தில் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
தனியார் வாகனங்களுக்கு இலக்க தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் , தனியார் பேரூந்துகளை அருகிலுள்ள இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருளை பெற்றுக் கொள்ளுமாறும் குறிப்பிட்டார்.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேவையானளவு டீசல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. எனவே டீசல் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. எனினும் ஒரே நாளில் டீசலைப் பெற்றுக் கொள்வதற்கு பதிலாக , கிடைக்கப் பெற்ற டீசல் தொகையை அடுத்து வரும் நாட்களில் முகாமைத்துவம் செய்வதற்கு முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
மட்டுப்பாடுகளுடன் பெற்றோல் விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றமையால் எதிர்வரும் 3 அல்லது 4 நாட்களுக்கு வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்.
எதிர்வரும் 23 ஆம் திகதி பெற்றோல் கப்பலொன்றை நாட்டு வரவழைப்பதற்கான இலக்குடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
எனவே அதுவரையில் அத்தியாவசியமாக பெற்றோலைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை அற்றவர்கள் எதிர்வரும் சில தினங்களுக்கு வரிசைகளில் காத்திருப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
எனவே அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பெற்றோலைப் பெற்றுக் கொள்வதற்கு இடமளிக்க வேண்டும்.
குறிப்பாக அரச உத்தியோகத்தர்களுக்கு இரு வாரங்களுக்கு வீடுகளிலிருந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் இணையவழியூடாக முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட தொழிலை அடிப்படையாகக் கொண்டோருக்கு பெற்றோலைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னுரிமையளிக்குமாறு கோருகின்றோம்.
அதேபோன்று சுகாதாரத்துறையினருக்கும் முன்னுரிமையளிக்குமாறு வலியுறுத்துகின்றோம். 11 எரிபொருள் விநியோகத்தர்களிடம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமையவே முதலாவது முன்பதிவிற்கான கப்பல்கள் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான நிதி தயார் நிலையிலேயே உள்ளது.
இந்த கப்பல்களுக்கு தேவையான 90 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு மத்திய வங்கி பெரும்பங்களித்துள்ளது. இதற்கு தேவையான ரூபாவையும் திறைசேரியின் ஊடாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெற்றுக் கொண்டுள்ளது.
முதன்முறையாக புதிய நிறுவனத்துடன் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது முதலாவது கப்பலை வரவழைப்பது சவால் மிக்க விடயமாகும். எனவே 23, 24 ஆம் திகதிகளில் பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்களை நாட்டுக்கு வரவழைப்பதே எமது இலக்காகும்.
தற்போது கையிருப்பில் உள்ள டீசல் தொகையை எதிர்வரும் 10 நாட்களுக்கு வழமையை விட அதிகளவு சந்தைக்கு விநியோகிக்க முடியும் என்று எதிர்பார்த்தோம்.
அதே போன்று நீண்ட நாட்களாக பெற்றோல் கிடைக்கப் பெறாத நகர்புறப்பகுதிகளுக்கு பெற்றோலை வழங்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஐ.ஓ.சி. நிறுவனத்திடம் திருகோணமலை முனையத்தில் 10 000 மெட்ரிக் தொன் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஐ.ஓ.சி. நிறுவனம் வழமையாக 300 மெட்ரிக் தொன் பெற்றோலை நாளாந்தம் விநியோகிக்கிறது. எனினும் எதிர்வரும் சில தினங்களுக்கு நாளாந்தம் 1000 மெட்ரிக் தொன் பெற்றோலை விநியோகிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஐ.ஓ.சி. நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் எதிர்வரும் சில தினங்களுக்கு பெற்றோல் நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய முடியும் என்று எதிர்பார்த்துள்ளோம்.
தற்போது பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் 40 000 மெட்ரிக் தொன் டீசல் , 4000 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 பெற்றோல், 8300 மெட்ரிக் தொன் ஒக்டேன் 95 பெற்றோல் என்பன கையிருப்பில் உள்ளன.
எவ்வாறிருப்பினும் நாட்டில் நிலவும் இவ் எரிபொருள் நெருக்கடியை முகாமைத்துவம் செயவதற்காக தனியார் துறையிலும் மட்டுப்படுத்தப்பட்டளவில் ஊழியர்களை சேவைக்கு அழைக்குமாறு கோருகின்றோம்.
மேலும் அனைத்து தனியார் பேரூந்துகளுக்கும் அருகிலுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அடுத்த வாரம் முதல் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்தோடு தனிப்பட்ட தேவைக்காக மாத்திரம் பயன்படுத்தப்படும் முச்சக்கரவண்டிகள் , மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றுக்கு இலக்க தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்கும் நடைமுறை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை போதுமானளவு மசகு எண்ணெய் காணப்படுகிறது. எதிர்வரும் 29 ஆம் திகதி மற்றும் ஜூலை 10 மற்றும் 14 ஆம் திகதிகளில் மேலும் 3 மசகு எண்ணெய் கப்பல்கள் நாட்டை வந்தடையும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM