சதீஷ் கிருஷ்ணபிள்ளை

“உள்நாட்டு அரசியலும், உக்ரேனிய யுத்தமும் தோற்றுவித்த மின்வலு நெருக்கடி”

ஆட்சியாளர் விலகுகிறார். புதியவர் பதவியேற்கிறார். அரசியல் நெருக்கடி தீர்ந்தபாடில்லை. மின்சார நெருக்கடியும் தீவிரம் பெறுகிறது. சில இடங்களில் மின்வெட்டு இன்னும் சில இடங்களில் மின்விநியோகத் தடை. மக்கள் இருளில் மூழ்குகிறார்கள்.

புதிய ஆட்சியாளரின் அரசாங்கம் உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. அரச, தனியார் அலுவலக பணியாளர்கள் வீடுகளில் இருந்து வேலை செய்யலாம். சில அலுவலகங்களுக்கு விடுமுறை.

திருமணச் சடங்கா? இரவு 8.30இற்கு சகல கொண்டாட்டங்களையும் முடித்துக் கொள்ள வேண்டும். அனல் காற்று வீசுவதைப் போல சூடாக இருக்கிறதா? பொறுத்துக் கொள்ள வேண்டும். குளிரூட்டிக் கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது.

இது எந்த நாட்டில் என்கிறீர்களா? தெற்காசிய நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில் தான் இந்த அவலநிலை.  இலங்கைக்கு அடுத்தபடியாக தீவிர மின்வலு, எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ளும் நாடாக பாகிஸ்தான் தற்போது மாறியிருக்கிறது.

சில இடங்களில் 12 மணித்தியாலங்கள் வரை நீடிக்கும் மின்வெட்டு. ஏன் இப்படி? உள்நாட்டு அரசியல் ஒரு காரணம். உக்ரேனுக்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான சண்டையின் விளைவுகள் இன்னொரு காரணம்.

உள்நாட்டு அரசியல் மின்னுற்பத்தித் துறையையும் பாதித்தது. பெயரளவில் ஜனநாயகமும், கறைபடிந்த அரசியல்வாதிகளும் உள்ள நாட்டில் ஒரு ஸ்திரமான கொள்கை ஏது?

எண்ணெயையும், எரிவாயுவையும் இறக்குமதி செய்தது போதும். முpன்வலுவை உற்பத்தி செய்ய நிலக்கரியை எரித்து, அணுவாலைகளை இயக்குவோம் என்பார், நவாஸ் ஷெரீப்.

இம்ரான் கான் ஆட்சிக்கு வந்ததும் நிலக்கரி ஆலைகளை மூடுவார். காற்றாலைகளை அமைத்து புதுப்பிக்கக் கூடிய மன்வலுவிற்கு மாறுவோம் என்று சூளுரைப்பார். நீர் மின்வலுவை கூடுதலாக உற்பத்தி செய்வோம் என்பார்.

மழை பெய்ய வேண்டுமே? வரட்சி நிலவிய சந்தர்ப்பங்கள் ஏராளம். உக்ரேனிய - ரஷ்ய நெருக்கடி பாகிஸ்தானின் மின்வலு, எரிசக்தித் துறையைப் பாதித்த விதம் சற்று நெடிய கதை.

இதனை ஆக்கபூர்வமானதொரு முயற்சிக்குக் கிடைத்த தோல்வியாகப் பார்ககலாம். உலக சந்தையில் எரிபொருள், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை அடிக்கடி ஏறி இறங்குவது வழக்கம்.

இந்தத் தளம்பல் நிலை மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக, பத்து வருடங்களுக்கு முன்னர், பாகிஸ்தான் அரசாங்கம் திரவ இயற்கை வாயுவைக் கொள்வனவு செய்ய அதிக பணத்தை முதலீடு செய்தது.

இயற்கை வாயுவைப் பெறுவதற்காக, இத்தாலி, கட்டார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் நீண்டகால ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டது. இந்;நிறுவனங்கள் தொடர்ச்சியாக பாகிஸ்தானுக்கு திரவ எரிவாயுவை விற்பனை செய்ய வேண்டும்.

எனினும், இந்நிறுவனங்கள் இலாபம் கருதி ஐரோப்பிய சந்தைகளை நாடியதால் பாகிஸ்தான் நட்டாற்றில் விடப்பட்டுள்ளது. நடந்தது இது தான். முதலில் கொரோனா பெருந்தொற்று. அடுத்து, உக்ரேனிய - ரஷ்ய நெருக்கடி.

உக்ரேனுடனான யுத்தத்தைத் தொடர்ந்து, ரஷ்யா ஐரோப்பிய சந்தைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தியிருக்கிறது அல்லது நிறுத்தியிருக்கிறது. இதன் காரணமாக, ஐரோப்பிய சந்தையில் இயற்கை வாயுவின் விலை ஆயிரம் சதவீதத்திற்கு மேலாக அதிகரித்துள்ளது.

இந்த சந்தையில் இயற்கை வாயுவைக்கான கேள்வியும் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய ஜனாதிபதியுடனான உறவை முறித்துக் கொண்டு, வேறு நாடுகளில் இருந்து இயற்கை வாயுவை கொள்வனவு செய்வதற்கு முனைந்திருக்கிறார்கள்.

பாகிஸ்தானுக்கு எரிவாயுவை விநியோகிக்கும் நிறுவனங்கள், பாகிஸ்தானுக்கு இயற்கை வாயுவை விநியோகிக்காமல் ஐரோப்பாவின் பக்கம் திரும்பியுள்ளன. 

இரு தரப்பு ஒப்பந்தங்களின் பிரகாரம், கடந்த ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு பெருமளவு எரிவாயு கப்பல்கள் மூலம் அனுப்பி வைத்திருக்கப்பட வேண்டும். எனினும், ஐரோப்பிய விலையேற்றத்தைத் தொடர்ந்து, இரு கம்பனிகளும் பாகிஸ்தானுக்கான விநியோகத்தை இரத்துச் செய்தன.

இது வியாபார தர்மமா? என்று எவரும் கேட்க முடியாது. ஒப்பந்தப்படி பாகிஸ்தானுக்கான விநியோகத்தை இரத்துச் செய்தால், அபராதம் செலுத்த வேண்டும்.

ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகவிலைக்கு எரிவாயுவை வழங்குவதால் கிடைக்கும் இலாபம், அபராதத்தை விடவும் பல மடங்கு அதிகமென்றால், ஏன் பாகிஸ்தானுக்கு விநியோகித்து நட்டப்பட வேண்டும்? இது தான் தந்திரம்.

இலாபம் கருதி, பாகிஸ்தானிய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட கம்பனிகள், இன்னோரன்ன காரணங்களை சொல்லலாம். தம்மை நியாயப்படுத்திக் கொள்ளலாம். அவையெல்லாம் பாகிஸ்தானின் மின்வலு, எரிசக்திப் பிரச்சனைக்குத் தீர்வாக மாட்டாது. 

தற்போது கையிருப்பில் உள்ள இயற்கை எரிவாயுவை மின்வலுவை உற்பத்தி செய்தற்காக பயன்படுத்துமாறு பிரதம மந்திரி ஷெஹ்பாஸ் ஷெரீவ் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

இதன் காரணமாக, பசளை உற்பத்திக்குத் தேவைப்படக்கூடிய இயற்கை எரிவாயுவும் கிடைக்காமல் போகக்கூடிய நிலை தோன்றியுள்ளது. இதன் காரணமாக, எதிர்காலத்தில் உணவுப் பொருட்களும் விலையேற்றம் காணலாம்.

மின்வெட்டு நேரங்களில் சேவையை வழங்குவதற்காக செல்போன் கோபுரங்கள் தற்காலிக மின்பிறப்பாக்கிகளைப் பயன்படுத்துகின்றன. இவற்றிற்குத் தேவையான எரிபொருளும் தீர்ந்து வருவதால் பாகிஸ்தானில் தொலைத்தொடர்பாடல் சேவைகளும் பாதிக்கப்படக்கூடும்.

பாகிஸ்தானும் வளர்முக நாடு தானே. அங்கும் நிலைபேறான தீர்வுகளைப் பற்றி கவலைப்படாமல், அரசியல் நெருக்கடியில் இருந்து தப்பிப் பிழைக்க ஏதோவொரு துரும்பைப் பற்றிக் கொண்டு கரையேற நினைக்கும் அரசியல்வாதிகள் தானே உள்ளனர்?

எப்படியாவது மின்வெட்டை நிறுத்த வேண்டும். எந்த விலை கொடுத்தாவது எரிபொருளைக் கொள்வனவு செய்யுங்கள் என்று பிரதம மந்திரி ஷெரீவ் உத்தரவு பிறப்பிப்பதில் ஆச்சர்யம் கிடையாது.

ஆனால், அதற்காக ஏற்படும் செலவைச் செய்வதற்கு பாகிஸ்தான் தாக்குப்பிடிக்குமா என்று கேட்டால், விடை சொல்வது கடினம். ஒரு பிரச்சினையை சமாளிக்க இன்னொரு பிரச்சினையை இழுத்துப் போட்டுக் கொள்வதால், அடுக்கடுக்காக பிரச்சினைகளே தோன்றலாம்.

இது பாகிஸ்தானை கடனை மீளச் செலுத்தத் தவறிவிடும் நாடாக மாற்றும் என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த நிலை பாகிஸ்தானுக்கு மாத்திரமல்ல. உலகின் பல வளர்முக நாடுகளுக்கும் பொதுவானது.

ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் சுயநலமாக நடந்து கொள்ளும் பட்சத்தில் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. இன்று வளர்முக நாடுகளில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, சடுதியான விலையேற்றத்தால் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்றால், அதற்கு ஐரோப்பிய நாடுகளின் சுயநலக் கொள்கைகளே பிரதான காரணம்.

வளர்முக நாடுகள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. இலாப நோக்கம் கருதிய பெருவணிக நிறுவனங்கள் தார்மீகத்திற்கு முரணான செயற்பட்டாலும் கவலையில்லை. தமக்கு வேண்டியது கிடைக்க வேண்டும் என்ற ரீதியில் சிந்திக்கும் ஐரோப்பிய நாடுகளால், மின்வலு எரிசக்தி நெருக்கடிகள் மென்மேலும் தீவிரம் பெறலாம்.