கழகங்களுக்கிடையிலான இருபது 20 கிரிக்கெட் போட்டியில் திசர பெரேரா தலைமையிலான இராணுவ அணி சம்பியன்

By Vishnu

19 Jun, 2022 | 10:42 AM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட பிரதான கழகங்களுக்கு இடையிலான இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் திசர பெரேரா தலைமையிலான இராணுவ அணி சம்பியனானது.

பி. சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் அக்கில தனஞ்சய தலைமையிலான கோல்ட்ஸ் கழகத்தை 45 ஓட்டங்களால் வீழ்த்தி இராணுவக் கழகம் வெற்றியீட்டி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

குறைந்த மொத்த எண்ணிக்கைகளைக் கொண்ட அப் போட்டியில் 37 வயதை அண்மித்து கொண்டிருக்கும் சீக்குகே பிரசன்னவின் சகலதுறை ஆட்டம் இராணுவத்தின் வெற்றியில் பிரதான பங்காற்றியது. துடுப்பாட்டத்தில் அதிகப்பட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்ற சீக்குகே பிரசன்ன, பந்துவீச்சில் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இராணுவக் கழகம் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் சீக்குகே பிரசன்னவை விட, அஷான் ரந்திக்க (22), யசோத மெண்டிஸ் (21), மஹேஷ் குமார (19) ஆகியோர் ஒரளவு சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.

கோல்ட்ஸ் பந்துவீச்சில் தனஞ்சய லக்ஷான் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் முதித்த லக்ஷான் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சமோத் பட்டகே 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல்ட்ஸ் கழகம் 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 94 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஆரம்ப வீரர் சங்கீத் குரே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 38 ஓட்டங்களைப் பெற்று தனி ஒருவராக பிரகாசித்தார். வேறு எவரும் 20 ஓட்டங்களை அண்மிக்கவில்லை.

பந்துவீச்சில் சீக்குகே பிரசன்ன 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லக்ஷான் எதிரிசிங்க 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

சம்பியனான இராணுவக் கழகத்துக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 5 இலட்சம் ரூபா பணப்பரிசும் 2ஆம் இடத்தைப் பெற்ற கோல்ட்ஸ் கழகத்துக்கு 3 இலட்சம் ரூபா பணப்பரிசும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.

இதனை விட இறுதி ஆட்டநாயகன் சீக்குகே பிரசன்னவுக்கு கிண்ணத்துடன் 75,000 ரூபா பணப்பரிசு கிடைத்தது.

சுற்றுப் போட்டியில் சிறந்து துடுப்பாட்ட வீரராகத் தெரிவான சங்கீத் குறே (கோல்ட்ஸ்), சிறந்த பந்துவீச்சாளராகத் தெரிவான அக்கில தனஞ்சய (கோல்ட்ஸ்) ஆகிய இருவருக்கும் கிண்ணங்களுடன் தலா ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசும் சுற்றுப் போட்டியில் சிறந்த வீராகத் தெரிவான அஷான் ரந்திக்கவுக்கு (இராணுவம்) கிண்ணத்துடன் 2 இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right