கொழும்பு சிலாபம் பிரதான வீதியின் காக்கப்பள்ளி பம்மல பிரதேசத்தில் வீதியை கடக்க முயன்ற பெண் ஒருவர் வீதியில் வேகமாக வந்துள்ள கனரக பவுசர் லொறியில் மோதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர். 

மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவராவார்.

உயிரிழந்த பெண் மஸ்கெலியாவிலிருந்து ஓரிரு தினங்களுக்கு முன்னர் பம்மல பிரதேசத்தில் அமைந்துள்ள தென்னந் தோட்டம் ஒன்றில் வசிக்கும் தனது மகளைப் பார்ப்பதற்காக வந்திருந்துள்ளார். 

நேற்று இப்பெண் தேவை ஒன்றின் நிமித்தம் வீட்டிலிருந்து வெளியேறி கொழும்பு வீதிக்கு வந்து வீதியைக் கடக்க முயன்ற போதே இப்பெண் மீது கொழும்பு திசையிலிருந்து வேகமாக வந்துள்ள தேங்காய் எண்ணெய் ஏற்றப்பட்ட பவுசர் மோதியுள்ளது.

விபத்தில் பலத்த காயத்திற்குள்ளான பெண் உடனடியாக சிலாபம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு அவர் உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் பவுசர் லொநியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாதம்பை பொலிஸா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.