- ஏ. முஹம்மத் பாயிஸ்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசம் மிகவும் சன அடர்த்தி மிக்க பிரதேசமாகும். தெற்காசியாவிலே சன அடர்த்திமிக்க பிரதேசமாக இது கருதப்படுகிறது.

வர்த்தக நிலையங்கள் அதிகரித்துக் காணப்படும் இப்பிரதேசத்தின் வீதியோரங்களில் ஈச்சை மரங்கள் அணிவகுத்து நிற்பதும் நகர முகப்பில் மினரா மற்றும் கூபா வடிவங்களில் வரவேற்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருப்பதும் இப்பிரதேசத்தின் அழகை இன்னும் மெருகூட்டுகின்றன.

அத்தோடு, இப்பிரதேசத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 8 ஆம் திகதி கறைபடிந்த வரலாறு ஞாபகமூட்டப்படுகிறது. அதுதான் யுத்த காலத்தில் 1990.08.03 அன்று வெள்ளிக் கிழமை இரவு இஷாத் தொழுகையை காத்தான்குடி மீரா ஜுமுஆ பள்ளிவாசல் மற்றும் ஹ{சைனியா பள்ளிவாசல் ஆகியவற்றில் தொழுது கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம். இப்பள்ளிவாசல்களில் இன்னும் துப்பாக்கி ரவைகளால் துளைக்கப்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன.

இக்காலப் பகுதியில் அயல் கிராமமான ஆரையம்பதி தமிழ் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாலமுனை, ஒல்லிக்குளம் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் இங்கு குடியேறியதாலும் காத்தான்குடியை விட்டு பாதுகாப்புக் கருதி வெளியேறியவர்கள் யுத்தத்தின் பின்னர் மீளக் குடியேறியதாலும் காத்தான்குடி பிரதேசத்தில் சன அடர்த்தி மேலும்  அதிகரித்துள்ளது. அதனால், தரிசு நிலங்களோ, அரச காணிகளோ இல்லாததால் கழிவுகளைக் கொட்டுவதற்கு காத்தான்குடி நகர சபை பெரும் பிரச்சினையை எதிர்கொள்கிறது.

காத்தான்குடி நகர சபையின் குப்பைகள் இரு வகைப்படுத்தப்பட்டு, உக்கக் கூடிய குப்பைகள் காத்தான்குடி நகர சபையினால் கடற்கரைப் பிரதேசத்தில் நடத்தப்படுகின்ற இயற்கைப் பசளை தயாரிக்கும் நிலையத்திற்கும் உக்காத குப்பைகள் குளக்கரையிலும் கொட்டப்படுகின்றன. காத்தான்குடி நகர சபையில் சேகரிக்கப்படும் கழிவுகளில் 30 வீதம் மாத்திரமே இயற்கைப் பசளை தயாரிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மிகுதி உக்காத 70 வீதமான குப்பைகளும் காத்தான்குடி குளக்கரைப் பக்கமே கொட்டப்படுகின்றன. இதனால், அப்பிரதேசத்திலுள்ள மக்களும் அங்குள்ள பாடசாலையும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

'இப்பிரதேசத்தில் 2005 ஆம் ஆண்டு எமது பாடசாலையின் ஆரம்பப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. காத்தான்குடி பிரதேச கழிவுகளை எமது பாடசாலையை அண்டிய குளக்கரையிலே கொட்டி வருவதால் கொசுத் தொல்லைகள் வருவதுடன் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால், மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள்.

இது சம்பந்தமாக நகர சபை செயலாளரிடமும் முறையிட்டோம். அதனைத் தடுப்பதற்காக மருந்து தெளிப்பதாகவும் குப்பைகளை மண் போட்டு  மூடுவதாகவும் தெரிவித்தற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனினும், தற்காலிகமாக இவை மேற்கொள்ளப்பட்டாலும் இப்பாடசாலை ஒரு வளர்ந்து வரும் பாடசாலை என்பதால் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. அதற்கு சுகாதாரமான சூழல் அவசியமாகும். வேறு வழியின்றி காத்தான்குடி நகர சபை குப்பைகளை இங்கு கொட்டினாலும் மிக விரைவில் இதற்கான தீர்வைக் கண்டு இப்பிரதேசத்தில் கழிவுகளைக் கொட்டுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்" என காத்தான்குடி ஜாமிஉல் லாஹிரீன் ஆரம்பப் பாடசாலை அதிபர் எ.ஏல்.எம் பாரூக் தெரிவித்தார்.

காத்தான்குடி 53,553 சனத்தொகையைக் கொண்ட பிரதேசமாகும். இங்கு 12,653 குடும்பங்கள் வாழ்கின்றன. இப்பிரதேசத்தின் தற்போதுள்ள மொத்த நிலப் பகுதி 3.89 சதுர கிலோ மீற்றராகும். இவ்வளவு சனத்தொகையும் இந்த குறைந்த நிலப் பகுதிக்குள்ளே அடங்குகிறது. இதனால், கழிவு மற்றும் மலசலகூடப் பிரச்சினைகளை இம்மக்கள் எதிர்கொள்கின்றனர்.

'சன நெருக்கடியுள்ள இப்பிரதேசத்தில் கழிவுகளைக் கொட்ட அரச தரிசு நிலங்கள் இல்லை. எமது கழிவுகளை தரிசு நிலங்கள் உள்ள வெளிப் பிரதேசங்களில் கொட்ட முடியாத இறுக்கமான சூழ்நிலை காணப்படுகிறது. இதனால், எங்களுடைய கிராம மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு வீட்டுக்கு 500 ரூபா வீதம் 45 இலட்சம் சேகரித்து காத்தான்குடி கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் தனியார் காணியொன்றைப் பெற்று நகர சபைக்கு வழங்கியிருக்கிறோம். அங்கு உக்கக் கூடிய கழிவுகள் மாத்திரம் சேகரிக்கப்பட்டு தற்போது இயற்கைப் பசளை தயாரிக்கப்படுகிறது.

எனினும், மிகுதியாகும் பெருமளவு உக்காத கழிவுகளைக் கொட்ட முடியாத பிரச்சினையை இப்பிரதேசம் எதிர்கொள்கிறது. இருந்தாலும், ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பாலமுனை கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள், தமது பிரதேசம் பள்ளமாக உள்ளதால் இங்கு குப்பைகளைக் கொட்டி நிலத்தை உயர்த்தித் தருமாறு கேட்கிறார்கள். ஆனால், அதற்கு பிரதேச செயலகம் அனுமதி வழங்காது தடையாக இருக்கிறது" என காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் எ.எம்.எம். தௌபீக் தெரிவித்தார்.

இலங்கையில் பெரும்பாலான உள்ள+ராட்சி மன்றங்கள் எதிர்நோக்கும் பிரச்சினையாக கழிவுகளை முகாமை செய்யும் விடயம் காணப்படுகின்றது. அதுவும் சன அடர்த்தி மிக்க ஒரு பிரதேசத்தில் கழிவுகளைக் கொட்ட அரச காணிகள் இல்லையென்றால் அந்த உள்ளுராட்சி மன்றம் எதிர்நோக்கும் பிரச்சினை இரட்டிப்பாகும் என்பது தவிர்க்க முடியாதது. உண்மையில், தற்பொழுது காத்தான்குடி நகர சபை கழிவுகளைக் கொட்டும் இடமான குளக்கரைப் பிரதேசம் கூட தற்காலிகமாகவே வழங்கப்பட்டுள்ளது. இக்குப்பை கொட்டும் செயற்பாட்டிற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு அது இடைநிறுத்தப்பட்டிருந்தது. பின்னர், மேன்முறையீட்டின் பிரகாரம் தற்காலிகமான அனுமதி நீதிமன்றத்தால் குப்பை கொட்டுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. 

'காத்தான்குடி சன நெருக்கடி மிக்க பிரதேசம் என்பதால் கழிவுகளை முகாமை செய்வதில் பெரும் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றோம். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கழிவுகளைக் கொட்டுவதற்கான இடத்தை ஒதுக்கீடு செய்து தருமாரு கேட்டும் இன்னும் அதற்கான தீர்வு கிடைக்கப் பெறவில்லை. குறிப்பாக, காத்தான்குடி நகர சபையின் வர்த்தமானி அறிவிப்புச் செய்யப்பட்ட நிலப் பரப்பு 6.05 சதுர கிலோ மீற்றராகும். தற்போது 3.89 சதுர கிலோ மீற்றர் நிலப் பரப்பே எம்மிடமுள்ளது. மிகுதி நிலத்தை ஆரையம்பதி பிரதேச சபையும் மட்டக்களப்பு மாநகர சபையும் பிடித்து வைத்துள்ளன. அக்காணிகளை இவர்கள் முதலில் விடுவிக்க வேண்டும். அவ்வாறு அக்காணிகள் கிடைக்கப் பெறுமாக இருந்தால் கழிவுப் பிரச்சினையை ஓரளவு சமாளிக்க முடியும்" என்று காத்தான்குடி நகர சபையின் செயலாளர் எஸ்.எஸ்.எம். ஷாபி தெரிவித்தார். 

காத்தான்குடி நகர சபையினால் தனது எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்தை 6 வலயங்களாகப் பிரித்து, ஒரு வாரத்துக்கு 3 தடவைகள் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு ஒரு நாளைக்கு 27 தொடக்கம் 30 மெட்ரிக் தொன் வரை கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறான கழிவுகளில் உக்கக் கூடிய கழிவுகள் UNOPS நிறுவனத்தினால் வழங்கப்பட்ட இயற்கைப் பசளை தயாரிக்கும் நிலையத்திற்கும் ஏனையவை குளக்கரையில் கொட்டும் நடைமுறை காத்தான்குடி நகர சபையாலும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நாட்டில் யுத்தத்தின் பின்னர் காணிப் பிரச்சினை என்பது ஒரு தீர்க்கப்படாத மிகப் பெரும் பிரச்சினையாகவே உள்ளது. அரச நிர்வாகங்களின் எல்லைகள், தனி நபர் காணி உரிமங்கள் போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படாது கிடப்பில் போடப்பட்டுள்ளன. காத்தான்குடி நகர சபையின் காணிப் பிரச்சினையும் இவ்வாறான ஒரு பிரச்சினையாகவே உள்ளது. 

இலங்கையிலுள்ள பெரும்பாலான உள்ளுராட்சி மன்றங்கள் கழிவு முகாமைத்துவம் என்பதை கழிவுகளை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு கொட்டுவதையே கையாளுகின்றன. இந்த நடைமுறையானது மக்கள் நகரமயமான இடங்களை அண்டிக் குடியேறும் இக்கால கட்டத்தில் மேற்படி பாரம்பரிய நடைமுறை சாத்தியமற்றதாகும். இடப் பற்றாக்குறை நிலவும் உள்ளுராட்சி மன்றங்களில் கழிவுகளை முகாமை செய்வதற்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். கழிவுகளைத் தரம் பிரித்து வழங்குவதற்குப் பெரும் நேர விரயம் மாநகர சபை ஊழியர்களுக்கு ஏற்படுவதால் அதனை ஆரம்பத்திலேயே இலகுவாக மக்களால் செய்து விட முடியும்.

இந்நிலையில் அனைத்து நகரசபைகளுக்கும் நவம்பர் முதலாம் திகதியிலிருந்து உக்கலடையும் குப்பை, உக்கலடையாத குப்பை என்று வெவ்வேறாகப் பிரிக்கப்பட்ட குப்பைகளை மாத்திரம் பொறுப்பெடுக்கும் நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. 

எனினும், சன நெருக்கடியாலும் அரச காணியின்மையால் கழிவுகளைக் கொட்ட முடியாமலும் அதனை முகாமை செய்ய முடியாமலும் காத்தான்குடி நகர சபை சிக்கல்களை எதிர்கொள்கிறது. இதற்கு நகர எல்லைப் பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால் இப்பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கக் கூடியதாக இருக்கும். மேலும், கழிவுப் பிரச்சினை என்பது நாடளாவிய ரீதியில் உள்ளுராட்சி மன்றங்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினையாகவே மாறியுள்ளது. இதனை முகாமை செய்வதற்கு நவீன முறைமைகள் உள்ளுராட்சி மன்றங்களால் கையாளப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.