இன்றைய திகதியில் உலகின் பிரபலமான பொப் இசை பாடகரும், மேலைத்தேய இசை கலைஞருமான ஜஸ்டின் பீபர் என்ற இசைக் கலைஞருக்கு ஏற்பட்டிருக்கும் அரிய பாதிப்பு காரணமாக ராம்ஸே ஹன்ட் சின்ட்ரோம் எனப்படும் முக வாத நரம்பியல் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

முகத்தில் உள்ள இரண்டு காதுகளில் ஏதேனும் ஒரு காதின் பகுதியில் வலிமிகுந்த சிவப்பு வண்ண திட்டுகள் காணப்பட்டாலோ.., இதன் காரணமாக காது வலி, செவி கேட்கும் திறன் இழப்பு, ஒரு கண் இமை மூட முடியாத நிலை, சுவை உணர்வு குன்றுதல், கண்கள் மற்றும் வாய் வறண்டு போதல்.. இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உங்களுக்கும் ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் எனப்படும் முகவாத நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும். 

இதனை மருத்துவ மொழியில் ஹெர்பஸ் ஜோஸ்டர் ஓடிகஸ் என்றும் குறிப்பிடுவர். இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள நரம்பியல் மருத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

சின்னம்மை பாதிப்பை உருவாக்கும் வைரஸ்கள் எம்முடைய உடலில் நீண்ட நாட்களாக வாழ்வதால் இத்தகைய நரம்பியல் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கு உரிய தருணத்தில் முறையான சிகிச்சையை பெறாவிட்டால், முக வாதம் ஏற்பட்டு உங்களுடைய முகத்தில் உள்ள நரம்புகள் பாரிய அளவில் பாதிக்கப்படக்கூடும்.

காது மற்றும் முகத்தில் உள்ள நரம்புகளில் ஏற்படும் பாதிப்பு காரணமாக இத்தகைய குறைபாடு உண்டாகிறது. மருத்துவர்கள் இதற்கு மருந்தின் மூலமும், சிலருக்கு பிரத்யேக ஸ்டீராய்டு மருந்துகள் மூலமாகவும் முதன்மையான நிவாரணம் வழங்கப்படுகிறது. பிறகு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறை மாற்றத்தை முழுமையாகவும், உறுதியாகவும் பின்பற்ற தொடங்கினால் இதிலிருந்து நிவாரணம் பெறலாம்.