உலக சாதனை நிலைநாட்டி நெதர்லாந்தை பந்தாடியது இங்கிலாந்து

18 Jun, 2022 | 07:48 AM
image

(என்.வீ.ஏ.)

நெதர்லாந்துக்கு எதிராக ஆம்ஸ்டெல்வின் வீ ஆர் ஏ விளையாட்டரங்கில் சனிக்கிழமை (17) நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிகூடிய மொத்த எண்ணிக்கைக்கான உலக சாதனை படைத்த இங்கிலாந்து அப் போட்டியில் 232 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 50 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 498 ஓட்டங்களைக் குவித்தது.

இதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நொட்டிங்ஹாம், ட்ரென்ட் ப்றிஜ்ஜில் 2018 ஜூன் 19ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குவித்த 9 விக்கெட் இழப்புக்கு 481 ஓட்டங்கள் என்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கைக்கான தனது முந்தைய உலக சாதனையை இங்கிலாந்து புதுப்பித்தது.

இன்றைய போட்டியில் இங்கிலாந்து சார்பாக மூவர் சதம் குவித்தனர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் இங்கிலாந்து சார்பாக மூவர் சதம் குவித்தது இதுவே முதல் தடவையாகும். அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் மூவர் சதம் குவித்த மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டு இரண்டு சந்தர்ப்பங்களில் தென் ஆபிரிக்கா சார்பாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகவும் இந்தியாவுக்கு எதிராகவும் தலா மூவர் சதங்கள் குவித்திருந்தனர்

நெதர்லாந்துடனான போட்டியில் இங்கிலாந்து சார்பாக பில் சோல்ட் 93 பந்துகளில் 14 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 122 ஓட்டங்களையும், டேவிட் மாலன் 109 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 125 ஓட்டங்களையும், ஜொஸ் பட்லர் 70 பந்துகளில் 14 சிக்ஸ்கள், 7 பவுண்டறிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 162 ஓட்டங்களையும் குவித்தனர்.

எனினும் அணித் தலைவர் ஒய்ன் மோர்கன் ஒட்டம் பெறாமல் ஆட்டமிழந்தார். லியாம் லிவிங்ஸ்டோன் ஆட்டம் இழக்காமல் 66 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆரம்ப வீரர் ஜேசன் ரோய் (1) ஆட்டமிழந்த போது இங்கிலாந்து ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்றிருந்தது.

இரண்டாவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த பில் சோல்ட், டேவிட் மாலன் ஆகிய இருவரும் 222 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தொடர்ந்து 3ஆவது விக்கெட்டில் டேவிட் மாலனும் ஜொஸ் பட்லரும் 184 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அத்துடன் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் பட்லரும் லிவிங்ஸ்டோனும் 97 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அதில் லிவிங்ஸ்டோனின் பங்களிப்பு 66 ஓட்டங்களாகும்.

நெதர்லாந்து பந்துவீச்சில் பீட்டர் சீலர் 83 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

499 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 266 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஆரம்ப வீரர் மெக்ஸ் ஓ'டவ்ட் (55), ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (72 ஆ.இ.) ஆகிய இருவரும் அரைச் சதங்கள் பெற்று அணியை கௌரவமான தோல்வி அடையச் செய்தனர்.

அவர்களைவிட பாஸ் டி லீட் (28), பீட்டர் சீலர் (25), டொம் கூப்பர் (23), மூசா அஹ்மத் (21) ஆகியோர் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் மொயீன் அலி 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சாம் கரன் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரீஸ் டொப்லி 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டேவிட் வில்லி 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டேவிட் மாலன் 5 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட்; பிரிதொரு...

2023-03-24 13:46:54
news-image

ஆஸி. ஆரம்பத் துடுப்பாட்டத்திற்கு பஞ்சமில்லை :...

2023-03-24 09:21:18
news-image

டி.எஸ்.எஸ். - மஹாநாம - 17ஆவது...

2023-03-23 16:54:41
news-image

இளையோர் மும்முனை சர்வதேச ஒருநாள் தொடர்:...

2023-03-23 16:21:36
news-image

மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்தை வாங்க கத்தார்...

2023-03-23 12:08:50
news-image

முவர்ஸ் கழக வெற்றியில் அசத்திய யாழ்....

2023-03-23 09:32:37
news-image

உலகக் கிண்ணத்தை வென்ற பின் ஆர்ஜென்டீனா...

2023-03-22 17:24:52
news-image

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மற்றொரு சவால்

2023-03-22 14:55:24
news-image

WPL இறுதிப் போட்டியில் டெல்ஹி :...

2023-03-22 11:40:58
news-image

விளையாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறும்...

2023-03-22 09:40:29
news-image

தரங்க, டில்ஷான் துடுப்பாட்டத்தில் அசத்தல் :...

2023-03-21 17:16:15
news-image

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக...

2023-03-21 14:58:47