ழத்தில் கிளிநொச்சியை பிறப்பிடமாக கொண்ட திரு. செல்லையா சதீஸ்குமார் எனும் விவேகானந்தனூர் சதீஸ் தற்போது அரசியல் கைதியாக சிறையில் உள்ளார். இவர் கவிதைகள், சிறுகதைகள் வாயிலாக தமிழர்களது இன்னல்களை தனது படைப்புகளினூடாக வெளிப்படுத்திவரும் படைப்பாளி.

சிறைப்பட்டிருக்கும் இவ்விடுதலை விரும்பியினது உள்ளக்கிடங்கின், விரிந்த சிறகுகளின் சமூக எண்ணப் படைப்பாக 'வேப்ப மரமும் பவளம் ஆச்சியும்' என்ற சிறுகதைத் தொகுப்பு கடந்த 5ஆம் திகதி சுவிற்ஸர்லாந்தில் வெளியிடப்பட்டது. 

இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் திருமதி ஆதிலட்சுமி சிவகுமார், திருமதி சேரலாதன் அமலா, திருமதி மதுகரன் தனவதி, திரு. செல்லையா குலம், திரு. பொன்னம்பலம் முருகவேள் முதலிய முக்கியஸ்தர்கள் கலந்துகொண்‍டிருந்தனர். 

ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கேற்றலை தொடர்ந்து, போர்க்கால சூழலில் வீரமரணம் எய்திய மாவீரர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும், தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த பொது மக்களையும் உலகத்தமிழ் உறவுகளையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அடுத்து வரவேற்புரையினை திரு. தில்லையம்பலம் சிவகீர்த்தி ஆற்றினார். 

இதன்போது அவர் "இலங்கை சிறையில் தடுப்பில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் சட்ட ரீதியான விடுதலைக்கு நாம் பங்களிப்பு ஆற்றவேண்டும். தடுப்புச் சிறையில் இருக்கும் ஒருவர் எண்ணத்தால் அருகில் வந்து, இச்சிறுகதைத் தொகுப்பை எம் கையில் தந்துள்ளார். இதுபோன்ற படைப்புக்கள் தொடர்ந்தும் வெளிவரத் தமிழர் களறி வழிசெய்யும்" என கூறினார். 

வாழ்த்துரை மற்றும் நல்லாசியுரையினை நல்கிய அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர்களில் ஒருவரான திருநிறை. விக்னேஸ்வரன் குழந்தை அவர்கள், 

"நூலாசிரியரின் தாயார் முதற்பக்கத்தில் குறிப்பிட்டபடி, இடர்கள் கடந்து இறைவன் துணையால் சிறையின் இரும்புக்கதவுகள் திறக்கட்டும்! திரு. சதீஸ் போன்று தடுப்பில் உள்ள அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை பெற்று நீண்ட வாழ்நாளோடு திருநிறைந்து வாழ நல்லாசிகள்" என வாழ்த்தினார். 

தொடர்ந்து, வெண்திரையில் சிறு ஒளித்தொகுப்பாக குரல் வடிவில் கருத்துப்படத்துடன் திரு. செல்லையா சதீஸ் அவர்களின் (விவேகானந்தனூர் சதீஸ்) நூலாசிரியர் அறிமுகம் திரையிடப்பட்டது. 

போராளி திரு. செம்பருதி நூலாய்வுச் சிறப்புரை வழங்குகையில், நான்கரை ஆண்டுகால சிறை வாழ்வில் பெற்ற தன் பட்டறிவினையும், போராளிகள், பொதுமக்கள் சிறையில் முகங்கொடுக்கும் கடினங்களையும் விளக்கினார்.

"எழுதுவதற்கு வளங்கள் நிறைந்தது அல்ல ஸ்ரீலங்கா சிறை. எழுதியதற்காக உதை வாங்கிய கைதிகளும் அங்கு உள்ளனர். 

எழுத்தாற்றல் அனைவருக்கும் வாய்க்காது. அப்படி தன் துயரத்தை சொல்லில், எழுத்தில் வெளிக்காட்ட முடியாத சில கைதிகளின் வலிகளையும் நாம் எண்ணத்தில் கொள்ளவேண்டும்.

சிறையின் கதவுகள் இரவு பூட்டப்பட்டு காலையில்தான் திறக்கப்படும். 

கழிவறை இல்லாதமல், போத்தல்களுக்குள் சிறுநீர் கழிப்பதும், காலையில் கதவு திறந்தவுடன் கழிவறைக்கு செல்வதா, காலை உணவுக்கு செல்வதா என தடுமாறும் நிலை..." என உணர்வு பொங்க கூறினார்.  

மேலும் தொடர்கையில், "தமிழர்களறி என்பது உணர்வுகளை, உண்மைகளை, அனுபவங்களை பகிரும் எழுத்தாளர்களை முன்நிறுத்தி, அவர்களது நூல்களை தமிழர்கள் மத்தியில் பரப்புகின்ற மிகப்பெரும் பணியினை மேற்கொள்கின்றது. 

இதற்கு முன்னரும் சிறையில் உள்ள எங்களது ஓர் உறவின் படைப்பு இங்கு வெளியிடப்பட்டிருந்தது. அந்த நிகழ்விலும் நாம் பங்கெடுத்திருந்தோம்..." என்றவர், இந்நூலில் வெளிவரும் கதைகளை விளக்கிப் பேசினார். 

அத்துடன் திரு. சதீஸ் இதுவரை வெளியிட்டுள்ள நூல்களையும் நிரல்படுத்தினார். 

இலக்கியப் பதிப்புக்கள், கவிதைகள், படைப்புக்கள் தாண்டி தவிப்புடன் எழுத்தினை வெளிக்கொண்டுவரத் துடிக்கும் இவ்வாறான படைப்பாளிகளுக்கு தமிழர் களறி கைகொடுப்பதற்கு தனது நன்றியினையும் நவின்றார். 

அடுத்து, சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெயரால் திருநிறை. கொலம்பஸ் அவர்கள் உரையாற்றினார்.

1998ஆம் ஆண்டளவில் தான் வாழ்ந்த சிறை வாழ்வினை மீள்மீட்டிப் பேசிய திரு. கொலம்பஸ், 'அப்பா எப்போ வருவார்' எனும் தலைப்பில் அக்காலத்திலும் தான் எழுதிய எழுத்தினை நினைவில் கொண்டுவந்தார். 

"ஓர் எழுத்தாளனாக சிறைக்குள் நுழைந்திருப்பினும் கூட எழுதும் மனநிலையினை அந்த சிறைச்சாலை இழக்கச் செய்யும். இவற்றைத் தாண்டி எழுத வாய்ப்பது இலகுவானதல்ல..." என கூறி, அடைக்கப்பட்ட கதவுகளின் உள்ளிருந்து இப்படைப்பினை எழுதிய திரு. சதீஸ் அவர்கள் திறனை வாழ்த்தினார். 

அடுத்து, திருமதி. ஆதிலட்சுமி சிவகுமார் நயப்புரையினை வழங்கினார். 

"11 சிறுகதைகளைத் தாங்கி 'வேப்ப மரமும் பவளம் ஆச்சியும்' நூல் வெளிவந்துள்ளது. இந்நூலாசிரியர் கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் கைதியாக அடைபட்டுள்ளார். உடலையும் உள்ளத்தையும் ஒருங்கே சிதைக்கின்ற ஓரிடமான சிறைக்குள் இருந்துகொண்டு இந்தப் படைப்புக்களை அவர் படைத்திருப்பது மிகவும் ஆச்சரியமான விடயமாகும்.

'அப்பா எப்போது வருவாரம்மா' என்று கேட்கும் குழந்தைகளின் ஒலிகள் எங்கள் செவிகளில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. 

சிறையில் இருப்பவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களினது குழந்தைகளின் குரல் ஒலிகளிலேதான் எங்கள் தூக்கமின்மையும், பசியின்மையும், எங்கள் வாழ்வின் வெறித்துப்போன நிலைமையும் இயங்கிக்கொண்டிருக்கின்றது" என்றார். 

நிகழ்வின் அடுத்த அம்சமாக நூல் வெளியீடு இடம்பெற்றது.

முதல் பிரதியினை தமிழர் களறியின் பிரதிநிதியான திருமதி. ஆதிலட்சுமி சிவகுமாரிடம் இருந்து சைவநெறிக்கூடத்தின் பெயரால் செந்தமிழ் அருட்சுனையர் திருமதி தனவதி மதுகரன் பெற்றுக்கொண்டார். 

தொடர்ந்து சபையினர் மத்தியில் நிகழ்ந்த வட்டமேசை கலந்துரையாடலில் இரு தலைப்புக்களின் கீழ் வருகையாளர்கள் உரையாடத் தொடங்கினர். 

விடுதலை, தடுப்புச் சிறை எனும் தலைப்புகளில் அமைந்த உரையாடலின் பெறுபேறு சுருக்கமாக சபையினர் முன்னிலையில் ஒவ்வொரு மேசைக்குமாக மீளுரைக்கப்பட்டது. 

நூல் வெளியீட்டுக்கு வருகை தந்தவர்களின்  ஈடுபாட்டையும், எண்ணச் செறிவையும் மீள் எழுப்புவதே இவ்வுரையாடலின் நோக்கமாக இருந்தது. வெறுமனே சடங்காக, நிகழ்ச்சியாக நூல் வெளியீடு அமையாமல், எண்ணத்தை தூண்டும் முயற்சியும் அங்கே நடந்தேறியது. 

இந்நிலையில் கதை வாசிப்பும் இடம்பெற்றது. திரு. பொலிகை ஜெயா 'அப்பா எப்ப வருவாரம்மா' என்ற கதையை நயத்துடன் வாசிக்க, சபையினரும் சேர்ந்து வாசிக்கலாயினர்.

அடுத்து, திரு. செங்கோல் அவர்கள் தான் பெற்ற சிறைவாச அனுபவங்களையும், ஏனைய அரசியல் கைதிகள் இன்று வரை முகங்கொடுத்து வரும் கடின நிலையையும் பகிர்ந்துகொண்டார். 

அத்துடன் தொடர்ந்து இவ்வாறான படைப்புக்களை வெளியிட உதவும் தமிழர் களறிக்கு நன்றி தெரிவித்தார். 

'தோழமைக் கரங்கள்' அமைப்பை சேர்ந்த திரு. சிவசுப்பிரமணியம் பிரபாகரன் தனது சிறப்புரையில், தமிழ் அரசியல் கைதிகளுக்கு உரிய சட்டவள வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 2019ம் ஆண்டில் இவ்வமைப்பு நிறுவப்பட்டதையும், இதுவரை சட்ட உதவிகள் மற்றும் தடுப்பில் உள்ளோர் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளையும் இந்த அமைப்பு செய்து வந்ததாக கூறினார்.

அத்தோடு இலங்கை சிறையில் உள்ள கடைசி அரசியல் கைதிக்கும் விடுதலை எட்டும் வரை தோழமைக் கரங்கள் தமது பணியினைத் தொடரும் என உறுதியளித்தார். 

அதனை தொடர்ந்து நன்றியுரையோடு நூல் வெளியீட்டு நிகழ்வு நிறைவுற்றது.

- து. திலக், சுவிற்ஸர்லாந்து.