மையொன்று தன் பாதுகாப்புக்கவசமான அதன் ஓட்டை கழட்டி ஓரமாய் வைத்துவிட்டு, தன் சுமை நீங்கிவிட்டது... தனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என எண்ணிக்கொண்டதாம். பாவம் தன்னை சுற்றியுள்ள கழுகுகளுக்கு தன்னை பிய்த்துத் தின்னும் உரிமையை தானே கொடுத்துவிட்ட பரிதாபம் புரியாமல்!

இன்று நாம் அனேக பெண்களை இவ்வாறுதான் காண முடிகிறது. சுதந்திரம், சம உரிமை எனும் பெயரில் அங்கங்களை விருந்தாக்கி அலைகிறார்கள்.

ஏதாவது அசம்பாவிதம் நடந்து முடிந்த பின்தான் 'ஐயோ ஐயோ' என அடித்துக்கொண்டு சுதாகரிக்க முற்படுகிறார்கள்.

அண்ணாவாக நினைத்தேனே... தம்பியாக நினைத்தேனே... அப்பாவாக நினைத்தேனே என்று புலம்புகிறார்கள்.... தன்னை ஒரு பெண்ணாக நினைக்க தவறிவிட்டு!

முற்றும் துறந்த முனிவரின் முன் முழு நிர்வாணமாக நின்றுவிட்டு, அவன் என்னை காமக்கண்ணால் பார்க்கிறான் என்றால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

முனிவராகவே இருந்தாலும் உணர்நாளங்கள் படைக்கப்பட்ட அவரும் மனிதர்தானே?

நாம் நடக்கும் விதங்களை பொருத்துதான் மற்றவரின் எண்ணம் எங்களை சேரும்.

நாகரிகமற்ற ஆடைகளை பொதுவெளியில் அணிந்துவிட்டு மொத்த பழியையும் ஆண்கள் மேல் சுமத்தும் பெண்களே, ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்...

எத்தனை பதவி, படிப்பு, பணம், சொத்து, அழகு  இருந்தாலும் பெண் பெண்தான்.

எதுவுமே இல்லாமல் தெருவோரம் பிச்சையெடுத்து வாழ்ந்தாலும் ஆண் ஆண்தான். அவர்களின் கண்களுக்கு நீங்கள் வெறும் சதைப்பிண்டம் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

எந்தவொரு பெண்ணும் இந்த சமூகத்தில் ஓர் ஆணை சார்ந்துதான் வாழ்கிறாள். அது அப்பாவாக, சகோதரனாக, கணவனாக... யாராவது ஒருவராக... ஆனால், ஆணாக!

அப்படிப்பட்ட துணை ஏதுமின்றி ஒரு பெண் வாழ்வாளானால், உண்மையில் அவள் ஓர் அதிசய பிறவிதான்.

ஏமாற்றங்கள் யாருக்குத்தான் இல்லை. மொத்த அன்பையும் கொடுத்து முழு துரோகத்தால் நானும் ஒருவனால் வீழ்த்தப்பட்டவள்தான். அதற்காக என் அப்பாவை என்னால் வெறுக்க முடியுமா?

எனவே, அன்பார்ந்த பெண்களே...

உங்களின் சுதந்திரம் என்பதற்காக அநாகரிக முறையிலிருந்து உங்கள் பழக்கவழக்கங்களை தடுத்துக்கொள்ளுங்கள். பிறர் முகம் சுழிக்கும்படி நடந்து உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

திமிர், ஆணவம், சுயநலம் ஆகியவற்றோடு அன்பு, அடக்கம், ஒழுக்கம் ஆகியனவும் சேரும்போதுதான் ஒரு பெண் முழுமையடைகிறாள்.

நெருப்பாக இருங்கள், அந்நிய ஆண்கள் முன்...

பூவாக இருங்கள், உங்கள் கணவரின் முன்...

வாழ்க்கை இனிதாகும்.

சிலரின் செயல்களை கண்டுகொள்ளாமல் போக என் கண்களை இறைவன் குருடாக்கவில்லை.

ஆடை சுதந்திரம் என்பதற்காக... ஆண்களை போல் நானும் நடப்பேன் என்பதற்காக...

ஓர் ஆணோடு சேர்ந்து வெளியில் போகையில், உடல் உஷ்ணத்தால் தன் மேல்சட்டையை கழட்டி அக்குளில் வைத்துக்கொண்டு அவன் நடக்கிறான்.

நானும் அவ்வாறு நடப்பேன் என கூறமுடியுமா? அந்த இடத்தில் உங்களை தடுப்பது எது? மானம்தானே? அதைப் போற்றி பெண்ணாகவே நடந்துகொள்வோமாக!

இல்லையெனும் ஆணவத் திமிரில், ஆண்களைப் போல் நானும் ஆகவேண்டும் என்றால் நிச்சயமாக இழப்பு என்பது பெண்களுக்குத்தான்.

சில விடயங்கள்...

தொழில் சார்ந்து வியாபார நோக்கில் ஓர் ஆணுடன் சேர்ந்து செய்யும் பணிகள் போன்றவற்றில் வேண்டுமானால் படிப்பு, பொறுப்பு, ஆதிக்கம், அறிவு ஆகியனவற்றால் நாம் இச்சமூகத்தில் ஆண்களை விட உயர் இடங்களை வகிக்கவோ அல்லது அவர்களுக்கு நிகரான பதவிகளில் வகிக்கவோ முடியுமே தவிர, இந்த ஆடை என்று வரும்போது அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு பெண்களை முன்னிறுத்தித்தான் பார்க்கப்படுகிறது.

பெண் என்பவள் ஒரு 'குடும்பத்தின் குத்துவிளக்கு' என்று பண்டைய நாள் தொடங்கி இன்றைய நாள் வரை, அதை ஏன் ஒரு கலாசாரமாக பின்பற்றுகிறார்கள் என்றால்,

இருட்டில் இருக்கும் வீட்டை அல்லது மனிதர்களை வெளிச்சம் மூலம் அடையாளப்படுத்துகிறாள். இன்னார் இன்னார் என்று முகங்களை தெரிந்துகொள்ளும் அளவுக்கு தன்னை தூய்மையாக்கி, தன் ஒளியை பிரகாசித்து, அவ்வீட்டை மகிழ்ச்சியால் நிரப்புகிறாள் என்பதற்காகத்தானே!

அப்படி போற்றப்படும் பெண்கள் அவ்வீட்டின் முன்மாதிரியாக தன்னை நிறுத்திக்கொண்டு தனக்குப் பின்னால் வருபவர்களுக்கும் நல்வழி காட்டுவதுதானே முறை.

மனித அடையாளத்தின் முதல் பாகமே முகம்தான். அந்த முகத்தைகூட வெட்கம் வரும் நேரத்தில் இரு கை கொண்டு மூடி வெட்கம் உணரும் நாம் வெட்கஸ்தலங்களை எவ்வாறு மூடி மறைக்கவேண்டும் என்பதை ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்தல் அவசியமாகிறது.

இன்றைய பொல்லாத உலகில் சிசு படுகொலை, பெண்குழந்தைகள் அநியாய கொலை என பரவும் செய்திகளை பார்க்கும்போது நம் உள்ளம் குமுறுகிறது.

அக்கொலைகளுக்கும் சீரழிப்புகளுக்கும் காரணம் எதுவென விசாரிக்கையில், சம்பந்தப்பட்டவர்கள் முன் வைக்கும் முதல் குற்றச்சாட்டு...

பெண்கள் அணியும் ஆபாச ஆடைகளில் எங்கள் உணர்வுகள் தூண்டப்படுகின்றன... அதனாலேயே இவ்வாறான தவறுகள் இடம்பெறுகின்றன என்பதாகும்.

இதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்கையில், ஓர் உண்மை புலனாகும். அவர்கள் பெண்குழந்தைகளை வன்புணர்வு செய்ய காரணம் குழந்தைகள் இல்லை... அவ்வீட்டில் அல்லது அத்தெருவில் அக்கம்பக்கத்தில் வசிக்கும் பெண்களின் நவநாகரிக உடையாகத்தான் இருக்கும்.

"பூனையை விரட்டி திரிவதை விட

மீனை மூடி வைப்பதே சிறந்தது"

எனும் ஒரு வாசகத்தை நாம் படித்திருப்போம். நிஜமாகவே இக்கூற்று உண்மையானதுதான். நாம் நாகரிகமாகவும் ஒழுக்கமாகவும் ஆடை அணியும் பட்சத்தில் எந்த பூனையும் நம்மை குறை சொல்லாது.

சினிமா மற்றும் மேற்கத்திய ஆடைகளால் கவரப்பட்ட நாம் நமக்கான பாதுகாப்பை உணராமல் அதை அணிவது நமக்குத்தான் பாதிப்பு.

சினிமாக்காரர்களை போன்று வசதி வாய்ப்புகள் நமக்கில்லை. அவர்களுக்கு இருப்பதைப் போல் போகும் இடமெல்லாம் எம்மை பின்தொடர பாதுகாவலர்கள் இல்லை.

ஆக, நமக்கு நாம்தான் பாதுகாப்பு. காலம் விரைவாக ஓட ஓட ஆடைகளின் அளவுகளும் குறைய தொடங்கிவிட்டது. நாகரிகத்தின் மீதான மோகம் கூட கூட இங்கு நாளுக்கு நாள் பெண் வன்முறைகளும் அதிகரிக்கின்றன.

சிப்பிக்குள் இருக்கும் வரைதான்

முத்துக்களுக்கு பெறுமதி

ஒழுக்கத்துடன் இருக்கும் வரைதான்

பெண்களுக்கு மரியாதை.

வாய்ச்சவடாலில் நாம் எதையும் எளிதாக பேசிவிடலாம். ஆனால், சூழ்நிலைகளில் சிக்கிக்கொண்ட பின் எந்த பேச்சுக்களும் எடுபடாது. அவ்விடத்தில் நாமொரு புழுவாக துடித்துப்போவோம்.

ஆகவே, ஆடை சுதந்தரம் என்பதற்காக கண்டதையும் அணிந்து வழி தெரியாமல், நடக்காமல் பெண்ணுக்கேற்ற பெறுமதி போற்றி வாழ பழகிக்கொள்வோம்!

- பெரியசாமி நிர்மலா, மாத்தளை.