இன்றைய திகதியில் எம்மில் பெரும்பாலானவர்கள் நின்று கொண்டு பணியாற்றிய வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். நீண்ட நேரம் நிற்பதால் எம்முடைய கால் பகுதியிலிருந்து இதயத்திற்கு ரத்த நாளங்கள் வழியாக செல்ல வேண்டிய அசுத்தமான குருதி ஓரிடத்தில் தேக்கமடைகிறது.

இதன் காரணமாக கால் பகுதியில் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் பாதிப்படைந்து பலவீனமடைகின்றன. இதனையடுத்து அங்கு நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டு வலி உண்டாகிறது.

இதனை தற்போது மருத்துவர்கள் நவீன சிகிச்சை முறையான லேசர் சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்க இயலும் என தெரிவிக்கிறார்கள்.

கால்களில் வலி அல்லது கால்களில் அசௌகரியமான உணர்வு, எரிச்சல், தசை பிடிப்பு, வீக்கம் போன்றவற்றின் காரணமாகவும், கால் பகுதியில் உள்ள நரம்புகள் வீக்கம் அடைவதாலும் அப்பகுதியில் தோலில் நிறமாற்றம் ஏற்படுகிறது. இதனை உரிய தருணத்தில் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெறாவிட்டால், நாளடைவில் ரத்த உறைவு பாதிப்பு அல்லது ரத்தக் கசிவு, புண் போன்றவை ஏற்பட்டு பாரிய அச்சுறுத்தலை உண்டாக்க கூடும்.

மருத்துவர்கள் ரத்த பரிசோதனை மற்றும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்துவார்கள். அதனைத் தொடர்ந்து முதன்மையான நிவாரணமாக பிரத்யேக காலுறையை அணிந்து கொள்ள பரிந்துரைப்பார்கள்.

அதனைத் தொடர்ந்து செலீரோ தெரபி என்ற சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் வழங்குவார்கள். சிலருக்கு இதற்குப் பின்பும் பாதிப்பு நீடித்தால், அவர்களுக்கு பாதிப்பின் தன்மையை அவதானித்து லேசர் பாணியிலான சிகிச்சையை வழங்கி முழுமையான நிவாரணத்தை அளிப்பர்.

டொக்டர் அனந்த கிருஷ்ணன்

தொகுப்பு அனுஷா.