சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்த பிரசன்னா- ரெஜினா ஜோடி

Published By: Digital Desk 5

15 Jun, 2022 | 06:38 PM
image

நடிகர் பிரசன்னா - நடிகை ரெஜினா கஸன்ட்ரா ஜோடி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 'ஃபிங்கர்டிப் 2' எனும் புதிய வலைதள தொடரில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

ஜீ 5 எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் தொடர்களுக்கு பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்தத் தளத்தில் அண்மையில் வெளியான 'அனந்தம்', 'விலங்கு' போன்ற தொடர்களுக்கு பாரிய அளவில் பார்வையாளர்களிடம் ஆதரவு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இந்த தளத்தில் 'ஃபிங்கர்டிப் 2' எனும் புதிய தொடர் ஜூன் 17ஆம் தேதி முதல் வெளியாகிறது.

இந்த தொடரில் நடிகர் பிரசன்னா, நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, அபர்ணா பாலமுரளி, திவ்யா துரைசாமி, நடிகர்கள் வினோத் கிஷன், கண்ணா ரவி, சரத் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த தொடருக்கு தீனதயாளன் இசையமைத்திருக்கிறார். ஃபிங்கர்டிப் தொடரின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் சிவாகர் சீனிவாசன் இரண்டாம் பாகத்தையும் இயக்கி இருக்கிறார்.

இந்த தொடர் குறித்து நடிகர் பிரசன்னா பேசுகையில், '' இன்றைய சூழலில் செல்போன் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது.

தொழில்நுட்பங்களால் ஏற்படும் ஆபத்து குறித்த விழிப்புணர்வை இந்த தொடர் ஏற்படுத்துகிறது. கொரோனா இரண்டாவது அலையின் போது வீட்டில் அடுத்து என்ன செய்வது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, இயக்குநர் சிவாகர் சீனிவாசன் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இதன் திரைக்கதையை விவரித்தார்.

தொழில்நுட்பம் குறித்து மக்கள் தெரிந்து கொள்ளவேண்டிய விடயங்கள் இதில் இடம் பெற்றிருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். அத்துடன் இந்தத் தொடரில் 'கண்ட நாள் முதல்' எனும்  படத்தில் எனக்கு ஜோடியாக நடித்த நடிகை ரெஜினா கசாண்ட்ராவுடன் 15 ஆண்டுகால இடைவெளிக்கு பின் மீண்டும் நடித்திருக்கிறேன்.

இதில்  ரெஜினா நடிகையாகவே நடித்திருக்கிறார். இதுவும் ஒரு சுவாரசியமான அனுபவமாக இருந்தது. சிசிடிவி எனப்படும் கண்காணிப்பு கமெரா மூலமாகவும் குற்றச்செயல்களை நிகழ்த்தலாம் என்பது எமக்கு புதிதாக இருந்தது. இதனை திரையில் இயக்குநர் தெளிவுபட உரைத்திருக்கிறார்.

ஆறு கதாபாத்திரங்களை ஒரு புள்ளியில் இணைக்கும் மாயா ஜால வித்தையை இயக்குநர் திவாகர் சீனிவாசன் அழகாக கையாண்டிருக்கிறார்.'' என்றார்.

'ஃபிங்கர்டிப்' தொடரின் முதல் பாகத்தை போல் அல்லாமல் இரண்டாம் பாகம் முழுவதும் தொழில்நுட்ப ரீதியிலான ஜானரில் அமைந்திருப்பதால் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right