அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 2015 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி.யின் சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு   சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி இன் கிரிக்கெட் விருதுகளுக்கான விபரம் இன்று வெளியிடப்பட்டது.

இதனடிப்படையில் ஐ.சி.சி.யின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது பெற்ற ஏழாவது வீராக ஸ்மித் தெரிவாகியுள்ளார். 

இதற்கு முன் ராகுல் டிராவிட் (2004), ஜக் கலிஸ் (2005), ரிக்கி பொண்டிங் (2006), குமார் சங்கக்கார (2012), மைக்கல் கிளார்க் (2013) மற்றும்  மிட்செல் ஜோன்சன் (2014) ஆகியோர் இவ்விருதுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் வீரராக தென்னாபிரிக்க அணியின் டி வில்லியர்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் 56 பந்துகளில் 119 ஓட்டங்களைப் பெற்ற  டு பிளசிஸிற்கு சிறந்த  இருபது-20 ஆட்டத்திற்கான விருது  வழங்கப்பட்டது. 

இதேவேளை ஆண்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரருக்கான விருது அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஹசில் வூட்டிற்கு வழங்கப்பட்டதுடன் சிறந்த ஒரு நாள் வீராங்கனைக்கான விருது அவுஸ்திரேலிய மகளிர் அணியின் தலைவர்  மக் லெனிங்கிற்கு மற்றும் சிறந்த டெஸ்ட் வீராங்கனைக்கான விருது மேற்கிந்தியத்தீவுகளின் சகலத்துறை வீராங்கனை ஸ்டெபனி டெய்லருக்கு வழங்கப்பட்டது.

சிறப்பு விருதாக வழங்கப்படும் சிறந்த விழுமியமிக்க வீரருக்கான விருது  பிரண்டன் மெக்கலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.