( எம்.எப்.எம்.பஸீர்)
சிங்கள தாய்மருக்கு சட்ட விரோதமாக கருத்தடை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட வைத்தியர் ஷாபிக்கு, கட்டாய விடுமுறை காலத்தில் வழங்கப்படவேண்டிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதற்கான காசோலை தனக்கு கிடைக்கப் பெற்றதனை வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் வீரகேசரிக்கு உறுதி செய்தார்.
குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரதம கணக்காளர் கே.சி.எம்.முதனாயக்கவின் கையொப்பத்துடன் 337496 எனும் இலக்கத்தை உடைய காசோலை ஊடாக இந்த சம்பள நிலுவை செலுத்தப்பட்டுள்ளது.
2 மில்லியன் 6 இலட்சத்து 75 ஆயிரத்து 816 ரூபா 48 சதம் ( 2675816.48) இவ்வாறு நிலுவை சம்பளம் கொடுப்பனவாக செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் SEC.MINISTRY OF HEALTHCARE & NUTRITION எனும் பெயரில் மக்கள் வங்கியில் உள்ள 012200139025195 எனும் இலக்கத்தைக் கொண்ட கணக்கிலிருந்து இந்த நிலுவை செலுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதிக்குள் வைத்தியர் ஷாபியின் சம்பள, கொடுப்பனவு நிலுவைகளை பூரணமாக செலுத்தி முடிப்பதாக சுகாதார அமைச்சு மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் ஊடாக கடந்த 07 ஆம் திகதி அறிவித்தது.
சட்ட விரோதமாக கருத் தடை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட தனக்கு, வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவை மற்றும் கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க உத்தரவிடுமாறு கோரி குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த எழுத்தாணை ( ரிட்) 7 ஆம் மேன் முறையீட்டு நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இம்மனு இவ்வாறு பரிசீலிக்கப்ப்ட்டது.
இதற்கு முன்னர் குறித்த மனு பரிசீலிக்கப்பட்ட போது அரச நிர்வாக அமைச்சின் நிறுவங்கள் தொடர்பிலான பணிப்பாளர் நாயகத்தின் கடிதம் ஒன்றினை மன்றில் முன்னிலைப்படுத்தி, சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் பிரசன்னமான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி சுமதி தர்மவர்தன வைத்தியர் ஷாபி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட காலப்பகுதியில், அவருக்கு செலுத்தப்படவேண்டிய அடிப்படை சம்பளம், கொடுப்பணவு, வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு, இடைக்கால கொடுப்பணவுகள் உள்ளிட்டவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக நீதிமன்றுக்கு தெரிவித்திருந்தார்.
இந் நிலையிலேயே, கடந்த 7 ஆம் திகதி மனு பரிசீலனைக்கு வந்த போது, குறித்த அடிப்படை சம்பளம், கொடுப்பனவு, வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு, இடைக்கால கொடுப்பனவுகள் உள்ளிட்டவற்றை ஜூலை 10 ஆம் திகதிக்குள் முழுமையாக செலுத்துவதாக சுகாதார அமைச்சின் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
வைத்தியர் ஷாபியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த எழுத்தாணை மனுவில், குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெந்தன்கமுவ, அவ்வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எம்.எஸ். வீரபண்டார, சுகதர அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் செயலர் மேஜர் ஜெனரல் வைத்தியர் எஸ்.எம். முணசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இம்மனு கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி முதன் முதலாக ஆராயப்பட்ட நிலையில் பிரதிவாதிகளுக்காக ஆஜராகும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் சுமதி தர்மவர்தன கோரிய கால அவகாசத்துக்கு அமைய, பின்னர் பெப்ரவரி 17 ஆம் திகதி பரிசீலிக்கப்பட்டிருந்தது.
இதன்போது போது, மனுதாரரான வைத்தியர் ஷாபி சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி புலஸ்தி ரூபசிங்க, தனது சேவை பெறுநருக்கு எதிராக முன்னெடுக்கபப்படும் அடிப்படை ஒழுக்காற்று விசாரணைகள், தற்போதைய குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெந்தன்கமுவ ஊடாக முன்னெடுக்கப்படுவது தொடர்பில் ஆட்சேபனைகளை முன் வைப்பதாக கூறினார். குறித்த பணிப்பாளர் பக்கச்சார்பான நபர் எனவும், அவர் தொடர்பில் அரச சேவை ஆணைக் குழுவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது சட்டத்தரணி புலஸ்தி ரூபசிங்க குறிப்பிட்டிருந்தார்.
எனினும் 7 ஆம் திகதி பரிசீலனைகளின் போது, வைத்தியர் சந்தன கெந்தன் கமுவ முன்னிலையில் ஒழுக்காற்று விசாரணைகளை எதிர்க்கொள்ள வைத்தியர் ஷாபிக்கு ஆட்சேபனை இல்லை சட்டத்தரணிகள் மன்றுக்கு தெரிவித்தனர்.
அதற்கமைய, மனுவின் ஊடாக கோரப்பட்ட நிவாரணங்கல் கிடைத்துள்ளதன் பின்னணியில், இந்த ரிட் மனுவை மீளப் பெற்றுக்கொள்ள வைத்தியர் சாபி சிஹாப்தீன் தரப்பு கோரிய நிலையில், வழக்கை முடிவுக்கு கொண்டுவர நீதிமன்றம் தீர்மானித்தது.
சட்டத்தரணி சஞ்ஜீவ குல ஆரச்சியின் ஆலோசனைக்கு அமைய இம்மனுவில் மனுதாரர் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்காக சட்டத்தரணிகளான புலஸ்தி ரூபசிங்க, ஹபீல் பாரிஸ் ஆகியோருடன் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆஜரானார்.
பிரதிவாதிகளுக்காக அரச சட்டவாதி மெதக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் சுமதி தர்மவர்தன ஆஜராகின்றார்.
குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியராக தான் சேவையாற்றியதாகவும், இதன்போது சட்ட விரோத கருத்தடை தொடர்பில் ஆதரமற்ற, இன ரீதியிலான வெறுக்கத் தக்க பிரச்சாரங்களை மையப்படுத்திய குற்றச்சாட்டுக்களை முன் வைத்து தான் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மகப்பேற்று துறையில் நிபுணர்கள் பலரும், தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அறிவியல் ரீதியாக சாத்தியமற்றவை எனவும் பொய்யானவை எனவும் ஆதாரபூர்வமாக விளக்கியும், தன் மீதான பொய்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து சுமத்தப்பட்டதாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான நிலையில் தனக்கு கிடைக்க வேண்டிய சம்பள நிலுவை மற்றும் கொடுப்பணவுகள் இதுவரைக் கிடைக்கவில்லை எனவும் தாபன விதிக் கோவையின் 20 (2) ஆம் பிரிவின் படி, கட்டாய விடுமுறையில் உள்ளவருக்கு சம்பளம் வழங்கப்படல் வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள
மனுதரரான வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் அவற்றை செலுத்த உடனடியாக பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், தனக்கு கிடைக்கப் பெற்ற சம்பளம், கொடுப்பணவு நிலுவைகளை அத்தியவசிய மருந்து கொள்வனவுக்காக சுகாதார அமைச்சுக்கே வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM