கடலை டொலராக்கலாமே?

By Presath

13 Jun, 2022 | 08:55 PM
image

எஸ்.ஜே.பிரசாத்

சமுத்திரத்தின் பலன்கள் ஏராளம் என்றாலும், நமக்குக் கிடைப்பது ஒரு கைப்பிடி மட்டுமே.

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என்று தமது வாழ்வியலில் தொடர்ந்து வருகின்றது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியுடன் சேர்ந்து உருவாகும் உணவு நெருக்கடிக்கும் கடலில் தீர்வு காண முடியும். அதற்கு சற்று மாறுபட்ட சிந்தனை அவசியம். அதுமட்டுமல்ல பாரம்பரிய சிந்தனையிலிருந்து சற்று விலகுவதோடு மட்டுமன்றி பழைமையான அணுகுமுறைகளிலிருந்து விடுபட வேண்டும்.

நிலவும் உணவு நெருக்கடிக்கு வெற்றிகரமான தீர்வாக நீலப் பொருளாதாரத்தை நிலையான முறையில் பயன்படுத்துவது முக்கியம்.

இன்றைய மருத்துவ உலகம் நாளாந்த ஆகாரத்திற்கு மீனை சிபாரிசு செய்கின்றது.

நாம் கடலால் சூழப்பட்ட நாடு என்றாலும் ரின்களில் அடைக்கப்பட்ட மீன்களை உண்கின்றோம். அது எப்படி எங்களுக்குள் பழக்கப்பட்டது என்பதற்கான ஆராய்ச்சிக்குள் நாம் போக வேண்டிய அவசியமில்லை.

சமீப ஆண்டுகளில் மீன்பிடித் தொழிலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று மின்வெட்டு காரணமாக மீன் வளங்களை ஐஸ் கட்டியில்   சேமித்து வைக்க முடியாதது. இதனால் ஏராளமான மீன்கள் வீணாகின. அதுமட்டுமல்ல எரிபொருள் இல்லாத காரணத்தினால் கடலுக்குச் செல்வதும் குறைந்துவிட்டது. அதனால் பிடிபடும் தேவைக்கும் குறைந்த மீன்கள் பெரும் தொகைக்கு விற்கப்படுகின்றது.

கடல் உணவுகள் எப்போதுமே நிலையான விலையில் இருப்பதில்லை. அன்றைய நாள்தான் அதன் விலையைத் தீர்மானிக்கும். ஆனால் இப்போதோ கடல் உணவுகளின் விலையைத் தீர்மானிப்பது டீசலும் மண்ணெண்ணெய்யும்தான்.

இது ஒருபுறமிறக்க விவசாயம் போல் அல்லாமல் எவ்வித மூலப்பொருளும் இடாமல், யாருமே எதையுமே செய்யாமல் அள்ளி அள்ளிக் கொடுக்கும் ஒரு பொக்கிஷம்தான் கடல். அந்தக் கடலை நான்காபுறமும் வைத்துக்கொண்டுதான் நாம் ஏனைய நாடுகளில் கையேந்திக்கொண்டிருக்கிறோம்.

நமது கடலை நாம் டொலராக்க தவறிவிட்டோம்.

ஆம் நமது கடல் வளத்தை டொலராக்கலாம்.

முதலில் மீன் பிடியில் நாம் இன்னும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட வேண்டும். கடல் பாசிக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய கேள்வி இருக்கின்றது. மீட் போல்ஸ் போல மீன் உருண்டைகளை உற்பத்தி செய்யலாம். புதிய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு நாட்டில் பெரும் தேவையை உருவாக்க முடியும். சர்வதேச அளவில் அதனைக்கொண்டு செல்வதும் அவசியம்.

ஒரு பொருளை உருவாக்கி அதற்கான தேவையை உருவாக்குவது முட்டாள்தனம். அதுதான் நம் நாட்டில் உள்ள பிரச்சினை.

ஆனால் உலகின் பிற நாடுகளில் பல ஆண்டுகளாக தேவைக்கு ஏற்ப ஒரு பொருள் தயாரிக்கப்படுகிறது. பின்னர் சந்தைப்படுத்தல் வெற்றிகரமாக உள்ளது.

உதாரணத்திற்கு மீனிலிருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணெய். இதை நாம் பெரிதாக பயன்படுத்தா விட்டாலும் பிற நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால் அந்த மீன் எண்ணெய்களின் மதிப்பு பல ஆண்டுகளாக அவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், மக்களின் வேலைப்பளு காரணமாக, விரைவாக சமைக்கக்கூடிய, மிக விரைவாகப் பயன்படுத்தக்கூடிய மற்றும் சேமிக்கக்கூடிய ஏதாவது ஒரு தேவையை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.

பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கடலுணவால் இந்த உணவு நெருக்கடியை தீர்க்க முடியாது. உலர் மீன் இலங்கை மக்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. ஆனால் மற்ற நாடுகளில் உள்ளவர்கள் அப்படி இல்லை. நம் நாட்டில் கடற்பாசி தேவை இல்லை என்பது வேறு விஷயம். நம் நாட்டில் எத்தனையோ வகையான காய்கறிகள் உள்ளன. அதனால் கடல்பாசிக்கான தேவை நமக்கில்லை.

இலங்கையைச் சுற்றிலும் கடல் உள்ளது. கடற்பாசி அறுவடை செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கினால், அதனை இங்கேயும் அறிமுகப்படுத்தலாம். அப்போது மக்கள் ஒரே உணவில் இருந்து விலகி வெவ்வேறு உணவுகளுக்குப் பழகலாம்.

அத்தோடு மீன் உருண்டைகள் மற்றும் மீன் எண்ணெய் போன்ற பொருட்களை தயாரித்து சந்தைக்கு அறிமுகப்படுத்தலாம்.

இலங்கை ஒரு தீவு. நமக்கு நல்ல சூரிய ஒளி கிடைக்கும். எனவே, இந்த தாவரங்கள் நல்ல பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்டுள்ளன. எங்களிடம் அதிகளவு கடற்பாசி உள்ளது. காரணம், சூரியனால் நமது நாடு நன்மை அடைகிறது. குளிர்காலத்தில், சில கடற்பாசி இனங்கள் எப்போதாவது மட்டுமே காணப்படுகின்றன. 

ஆனால் கடல் நாளுக்கு நாள் மாசுபடுவதை நாம் அறிவோம். குப்பையை எந்த நேரத்திலும் கடலில் வீசுவதற்கு மக்கள் ஆசைப்படுகின்றனர். மீன் தொழில்துறை மட்டத்திலும், அவர்கள் தங்கள் கழிவுகளை கடலில் வீசுகிறார்கள். கடலில் குப்பை கொட்டினால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. கடல் நீரானது கடல்நீரில் இருந்து சத்துக்களை உறிஞ்சுவது போல, கடலில் வீசப்படும் கன உலோகங்கள் மற்றும் எண்ணெய்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களையும் சேர்க்கிறது.

நம்மைப் போன்ற நாடுகள் கடற்பாசியிலிருந்து நல்ல உணவை உருவாக்க முடியும். ஆனால் கடல் மாசு காரணமாக அது சாத்தியமில்லை. அதற்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தலாம். நாம் வரலாற்று ரீதியாக உணவிலும் மருத்துவத்திலும் கடற்பாசியைப் பயன்படுத்தி வருகிறோம். அப்போது கடல் அவ்வளவு மாசுபடவில்லை.

ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகளில் கடற்பாசி முக்கிய உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த தொழில்நுட்பம் அவர்களிடம் உள்ளது. கடற்பாசி என்பது நமது உணவு நெருக்கடிக்கு தீர்வாகும். ஆனால், நிச்சயமாக, அதற்கான தொழில்நுட்பம் நமக்குத் தேவை. குறிப்பாக கடல்நீரில் உள்ள நச்சுப் பொருட்களிலிருந்து தாவரங்களை சுத்திகரிக்க.

உரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் நாம் கடலிலிருந்து நமக்கு கிடைக்கும் கடல் உணவுகளை சர்வதேச சந்தைக்கு அனுப்பலாம். சர்வதேச சந்தையில் உள்ள தேவையை உணர்ந்து அதற்கேற்றாற்போல நமது உற்பத்தியை உருவாக்கலாம். காலாகாலமாக மீன் பிடித்து வந்தாலும் கடல் இன்னும் அள்ளி அள்ளித்தான் தந்துகொண்டிருக்கிறது. இதனை புரிந்து கடல் வளத்தை டொலராக்க ஏதும் திட்டத்தை கொண்டுவரலாம்.

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு இது உடனடி தீர்வாக அமையாவிட்டாலும்கூட தொடர்ந்து முயற்சிக்கும் பட்சத்தில் நிரந்தர டொலர் வருகைக்கான தீர்வாக இது அமையலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right