21ஆவது திருத்தம்: முஸ்லிம் எம்.பி.க்களின் கள்ள மௌனம்

By Digital Desk 5

12 Jun, 2022 | 03:51 PM
image

ஏ.எல்.நிப்றாஸ் 

இலங்கை அரசியலே, உத்தேச 21ஆவது திருத்தம் தொடர்பிலான வாதப்பிரதிவாதங்களால் கொந்தளித்துக் கொண்டிருக்க, முஸ்லிம் கட்சித் தலைவர்கள் மற்றும் எல்லாக் கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் முஸ்லிம் எம்.பி.க்கள் ஒருவித கள்ளமௌனத்தை கடைப்பிடித்து வருகின்றனர். இது அவர்களது வழக்கமான பாணிதான்!

பஸ்ஸில் எல்லா ஆசனங்களும் காலியாக இருக்கின்ற போது தமக்கு வசதியான, பாதுகாப்பான ஒரு இருக்கையை தேர்ந்தெடுக்காமல். நடைபாதையில் ஓரமாக நிற்பதும், பஸ் புறப்படும்போது மிதிபலகையில் தொற்றிக் கொண்டு பயணிப்பதோ அல்லது போன பஸ்ஸ_க்கு கை காட்டுவதோ அவர்களுக்குப் புதிதல்ல. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. 

முதலாவது விடயம் சமூகம் பற்றிய அக்கறையின்மை, சுயலாப அரசியலுக்கு முன்னுரிமை கொடுக்கின்றமை, எந்தப் பக்கம் தாவினால் நமக்கு என்ன கிடைக்கும் என்ற அவாவில் மதில்மேல் பூனையாக இருக்கும் மனப்பாங்கு, அரசியல் மற்றும் அரசியலமைப்பு திருத்தங்கள் பற்றிய ஆளமான அறிவும் தெளிவும் இல்லாமை ஆகியவை இவற்றுள் முக்கியமானவை. 

இலங்கை அரசியலைப் பொறுத்தமட்டில் இதுவும் ஒரு வகையில் நிலைமாறுகாலம் தான். புதிய பிரதமர் பதவியேற்றிருப்பது மட்டுமன்றி வித்தியாசமான அரசியல் போக்கும் அவதானிக்கப்படுகின்றது. எல்லாத் தரப்பிற்கும் எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுகின்ற இந்த தருணத்தில், முஸ்லிம் எம்.பிக்கள் 20பேரும் நினைத்தால் எத்தனையோ விடயங்களை ஆளும், எதிர் தரப்புக்களுடன் பேச முடியும். 

இது இவ்வாறிருக்க, இப்போது பேசுபொருளாகியுள்ள உத்தேச 21ஆவது திருத்தம் தொடர்பில் முஸ்லிம் கட்சிகள் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்முடைய கருத்தையோ நிலைப்பாட்டையோ உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. அரசாங்கமும் புதிய திருத்தம் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தவில்லை. இதற்கு முன்னர் ஒருபோதும் ஆட்சியாளர்கள் அதனைச் செய்ததும் இல்லை. 

இதில் உள்ளடங்கியுள்ள முன்மொழிவுகள், அதன் வீச்சுக்கள் எந்தளவுக்கு முஸ்லிம் சமூகத்தின் மீது தாக்கம் செலுத்தும்? அதனால் ஏற்படக் கூடிய சாதக, பாதகங்கள் என்ன? என்பதை தெளிவுபடுத்துவதற்கு முஸ்லிம் எம்.பி.க்களும் முன்வரவில்லை. அதற்கு ‘ஆதரவு’ அல்லது ‘எதிர்ப்பு’ தெரிவிப்பதற்கான தம்முடைய நிலைப்பாட்டை அறிவிப்பதற்கும் இன்னும் அவர்களுக்கு பொழுது விடியவில்லை. 

21ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கான உத்தேச திருத்தங்களுடனான வரைபு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் அது குறித்து கலந்தாராய முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

ஆளும் மற்றும் எதிர் தரப்புக்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள், அதிகாரமிழந்தவர்கள். வெளிநாடுகள் என்று ஒவ்வொரு தரப்பினரும் உத்தேச திருத்தத்தை வெவ்வேறு கண்ணாடியை போட்டுக் கொண்டு பார்க்கின்றனர்.  அந்தப் பின்னணியோடு இந்த திருத்ததத்தை மிக விரைவாக கொண்டு வருமாறு பல தரப்பினரும் அழுத்தம் கொடுக்கின்றனர். 

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குதலுக்கு மேலதிகமாக 19ஆவது திருத்தத்தின் உள்ளடக்கங்களை மீள அறிமுகம் செய்யும் ஒரு திருத்தமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை நோக்குகின்றார். எதிர்க்கட்சியும் இதனை அதேகோணத்திலேயே நோக்குகின்றது ஆயினும், ஏனைய உள்ளடக்கங்கள் குறித்து கொஞ்சம் நின்று நிதானிக்கின்றது. 

மஹிந்த ராஜபக்ஷ கட்டியெழுப்பிய சாம்ராஜ்யம் சரிந்தமைக்கும், அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டமைக்கும் 20ஆவது திருத்தமே மூல காரணமானது என்று அவர் இன்னும் நம்புவாராயின், மஹிந்த தரப்பும் 21இற்கு ஆதரவளிக்கும். சுதந்திரக் கட்சியும் அநேகமாக இந்த நிலைப்பாட்டுக்கே வந்து சேரும்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. உத்தேச திருத்த வரைபிலுள்ள முன்மொழிவுகளை அவர்கள் வழக்கம்போல கூர்ந்து நோக்குவதாக தெரிகின்றது. இறுதி வரைபு வெளியான பின்னரே முடிவு அறிவிக்கப்படும் சாத்தியமுள்ளது.

மறுபுறத்தில், மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியின் அதிகாரங்கள் முற்றாக குறைக்கப்படுவதை விரும்பவில்லை என்பதும் இங்கு கவனிப்பிற்குரியது, இவ்வாறு ஒவ்வொரு தரப்பும் இதனை வெவ்வேறு கோணத்தில் 21இனை நோக்குகின்றது. வெளிப்படை காரணங்களுக்கு புறம்பாக அதைவிடப் பாரதூரமான மறைமுகக் காரணங்களும் மேற்சொன்ன எல்லா தரப்பினரது நிலைப்பாட்டிலும் நிச்சயம் செல்வாக்குச் செலுத்தும். 

இலங்கைச் சூழலில் மக்கள் நலன் என்பது இரண்டாம் பட்சமே. நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார நெருக்கடி எல்லாம் புதிய திருத்தத்தின் ஊடாக தீர்த்து வைக்கப்பட்டு விடும் என்பது போன்ற மாயத் தோற்றமும் இதன் வழியிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.  

எது எவ்வாறிருப்பினும், இந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாக உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தை எல்லோரும் நோக்குகின்றனர். ஆனால், முஸ்லிம் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் மட்டும் இன்னும் தெளிவுற சமூகத்திற்கு விளக்கமளிக்கவும் இல்லை, தமது முடிவு என்னவாக இருக்கும் என்பதை அறிவிக்கவும் இல்லை. 

அவர்களில் ஓரு சிலரை ஊடகமொன்று வலிந்து தொடர்புகொண்டு விசாரித்த போது, ‘இறுதி வரைபு கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் கருத்துச் சொல்வோம்’ என்ற தொனியில் பதிலளித்துள்ளனர். 

இந்நிலையில்,  முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் என்ற அடைமொழியோடு அமைச்சர் நஸீர் அஹமட் வெளியிட்டுள்ள கருத்தில் ஒருதுளி நியாயம் இருந்தாலும், அவர் அந்த நியாயத்திற்காக அதனைச் சொன்னாரா என்பதில் சந்தேகமுள்ளது. 

அத்துடன், முஸ்லிம் சமூகத்தால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் தலைவாhகவோ, சமூகத்தின் குரலாகவோ தன்னை முன்னிறுத்தாதவர் என்ற அடிப்படையில் அவரது கருத்து, முஸ்லிம் அரசியல்வாதிகளின் பொதுவான நிலைப்பாடாக கருதப்பட முடியாது. 

அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டு, பதவியை அனுபவித்துக் கொண்டிருந்த முஸ்லிம் எம்.பி.க்கள் எல்லோரும் இப்படித்தான் ஆட்சியாளர்களுக்கு முட்டுக் கொடுத்தார்கள். தான் வகித்த பதவிக்காக, பெற்றுக் கொண்ட வெகுமதிக்காக, தான் சார்ந்திருந்த கட்சிக்காக யாப்புத் திருத்தங்களை, சட்டமூலங்களை ஆதரித்த அல்லது எதிர்த்த முஸ்லிம் எம்.பி.க்கள்தான் 99 சதவீதம் உள்ளனர். இதனை யாரும் மறுக்கவியலாது. 

அரசியலமைப்பில் நிறைவேற்றப்பட்ட 18ஆவது, 19ஆவது மற்றும் 20ஆவது திருத்தங்கள் மற்றும் பல்வேறுபட்ட முக்கிய சட்டத் திருத்தங்கள் இதற்கு நல்ல உதாரணங்களாகும்;. 18 இற்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பி.க்களே 3 தடவை ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கான ஏற்பாட்டை நீக்க வேண்டும் என்று பின்னாளில் கூறித் திரிந்தார்கள். 

19ஆவது திருத்தத்தை ஆதரவளித்தவர்களில் பல முஸ்லிம் எம்.பி.க்கள் அதற்கு எதிர்மறையான 20ஆவது திருத்தத்திற்கும் கையை உயர்;த்தினர். அதுமட்டுமன்றி, 20இனை எதிர்த்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அத்திருத்தத்தின் ஒரு உபபிரிவுக்கு மட்டும் ஆதரவளித்திருந்தார். இப்படியான புதினம் எல்லாம் முஸ்லிம் அரசியலில் மட்டும்தான் நடக்கின்றது. 

ஒரு வரைபை படித்தறிந்து, அதன் நன்மை தீமைகளை முழுமையாக விளங்கிக் கொண்டு சமூகம் சார்பாக நின்று முடிவுகளை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றது. அப்படிச் செய்யாத மக்கள் பிரதிநிதிகளை நடுச் சந்தியில் நிறுத்தி தோலுரிக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு இருக்கின்றது. துரதிர்~;டமாக முஸ்லிம்களிடையே இவை இரண்டுமே இல்லை. 

பாராளுமன்றுக்கு வரும் சட்டமூலத்தை அல்லது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ‘டீல்’ பேசி ஆதரவளிப்போர், ஏன் என்று தெரியாமல் கூட்டத்தோடு கோவிந்தா போடுவோர், ‘அவர் உயர்த்தினார் நானும் உயர்த்தினேன்’ என்று சொல்கின்ற அரசியல்வாதிகளும், பிறகு ‘அது தவறான முடிவு’ என்று செல்கின்ற தலைவர்களும், முன்னர் ஆதரித்த திருத்தத்திற்கு எதிரான திருத்தத்தையும் பின்னர் ஆதரிக்க வெட்கப்படாத எம்.பி.க்களும் முஸ்லிம் அரசியலில் நிரம்பி வழிகின்றனர். 

இந்த போக்கு மாற வேண்டும். மௌனம் கலைக்க வேண்டும். முஸ்லிம் தலைவர்கள் மற்றும் எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த காலங்களைப் போலவே, 21ஆவது திருத்தத்தையும் முட்டாள்தனமாக கடந்து செல்ல நினைக்கக் கூடாது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right