எமது ஆட்சியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர காணி உரிமை உறுதிப்படுத்தப்படும் - எதிர்க்கட்சி தலைவர் சஜித்

By Vishnu

12 Jun, 2022 | 02:31 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர காணி உரிமை நிச்சயம் பெற்றுக் கொடுக்கப்படும்.

அவர்கள் தமது சொந்த இடங்களில் வாழ்வதற்கான உரிமை எமது ஆட்சியில் உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புவக்பிட்டிய பென்ட்ரிக் தோட்ட மக்களுக்கான குடிநீர் கட்டமைப்பை கையளிக்கும் நிகழ்வு 11 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர காணி உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்கு எவரும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இதனை நாம் நிச்சயம் பெற்றுக் கொடுப்போம். பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது , அடிப்படை வசதிகளை எவ்வாறு மேம்படுத்துவது உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் பெருந்தோட்ட மக்களுடன் சமூக ஒப்பந்தத்திற்குச் செல்வோம்.

அவர்கள் தமது சொந்த இடங்களில் வாழ்வதற்கான உரிமை எமது ஆட்சியில் உறுதிப்படுத்தப்படும். ஏனைய மக்களைப் போன்று பெருந்தோட்ட மக்களும் முன்னேற்றமடைய வேண்டும். பொறுப்பினை ஏற்பதற்கு நாம் தயாராக உள்ளோம்.

ஆனால் அதனை 40 - 50 உறுப்பினர்களைக் கொண்டு செய்ய முடியாது. 113 உறுப்பினர்களேனும் வேண்டும். அதனை விடுத்து நாட்டை நாசமாக்கிய பொதுஜன பெரமுனவிடம் சென்று எமக்காக கைகளை உயர்த்துக்கள் என்று கேட்டுக் கொண்டிருக்க முடியாது.

நாம் பொறுப்பினை ஏற்று 5 ஆண்டுகளில் நாட்டை அபிவிருத்தி செய்வோம். தற்போது சிலர் 6 - 7 மாதங்களில் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

எனினும் 2019 மற்றும் 2020 இல் ஏமாற்றமடைந்ததைப் போன்று இனி மக்கள் ஏமாறா மாட்டார்கள். எனவே அவர்கள் எதிர்பார்க்கும் புதிய தலைவரை தெரிவு செய்யும் வாய்ப்பினை வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right