“மலையக மக்களின் மாண்பையும் அவர்களின் வளர்ச்சியை குறிக்கும் வகையில் நிலை பெற்ற சமூகமாக மாறிவரும் இன்றைய காலகட்டத்திலும், மலையக தமிழர்கள் நகர்புறம் நோக்கிய நகர்வுகள் அதிகரிக்கும் இச்சூழலிலும், லண்டனில் 11 ஆம் திகதி சனிக்கிழைமை நடைபெற்ற மலையக இலக்கிய மாநாட்டில் “மலையக அரசியல் தலைவர்களும் தளபதிகளும்” என்ற நூலை வெளியிட்டு வைத்தது மலையக சமூகத்திற்கு கிடைத்த மிகப் பெரும் வரப்பிரசாதமாகும்.” என்று முன்னாள் இந்து சமய பண்பாட்டு அமைச்சரும், சமூக நிலைமாற்று மன்றத்தின் தலைவரும் இலங்கை கோபியோ அமைப்பின் ஸ்தாபக தலைவருமான பி.பி. தேவராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நேற்று லண்டனில் வெளியிடப்பட்ட “மலையக அரசியல் தலைவர்களும் தளபதிகளும்” என்ற நூல் நமது மக்களின் ஒரு வரலாற்று ஆவணமாகும்.
இந்த நூல் மலையகத் தலைவர்கள் பற்றியது மட்டுமன்றி மலையகத் தமிழர்களின் வரலாற்றின் முக்கியமான காலகட்டமான 1950 களின் இறுதியில் சி.வி. வேலுப்பிள்ளை எழுதிய கட்டுரைகள் ஆகும்.
சுதந்திர இலங்கையில் இந்திய வம்சாவளி மக்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்ட சமயத்தில் பிரஜாவுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளாகும்.
இத் தொகுதியிலுள்ள 26 கட்டுரைகளும் தனிப்பட்ட ஒரு சிலரின் வாழ்வை பற்றிய கட்டுரை என்று மட்டும் கருத முடியாது. மலையக மக்கள் வரலாற்றின் முக்கிய காலகட்டத்தை இக்கட்டுரைகள் பிரதிபலிக்கின்றன.
நமது மக்களின் குடியுரிமை பிரச்சினைகள் முற்றாக நீக்கப்பட்டு இலங்கையின் நான்கு பிரதான சமூகங்களின் ஒன்றாக நாம் வளர்ச்சியடைந்துள்ளோம்.
இலண்டன் அருங்காட்சியகத்திலும், இலங்கை தேசிய சுவடிகள் காப்பாளர் திணைக்களத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டு, சி.வி. வேலுப்பிள்ளை 64 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரைகளைத் தேடி தொகுத்து “மலையக அரசியல் தலைவர்களும் தளபதிகளும்” என்ற நூலை வெளியிட்டுள்ளார்கள்.
இந்த அரிய பணிக்காக மு. நித்தியாநந்தன், எச்.எச்.விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். மலையக தொழிற்சங்கவாதிகள், ஆசிரியர், மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டவர்கள், மலையக சமூகத்தில் அக்கறை உள்ள அனைவரும் இந்த நூலை அவசியம் வாசிக்கும்படி வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இந்நூலை அச்சிட்டு அனுசரனை வழங்கிய சென்னை டாக்டர் எம். ஜி. ஆர் ஜானகி கல்லூரி முதல்வர் குமார் ராஜேந்திரன் அவர்களுக்கு எனது வாழ்த்தையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன். மற்றும் தன் நண்பர்களான சக்கரவர்த்தி பதிப்பாளர் ஒளிவண்ணன் மற்றும் பலருடன் இணைந்து மூன்று கொள்கலன்களில் இலங்கை மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை அனுப்பியமைக்காகவும் இச்சந்தர்ப்பத்தில் எம் மக்கள் சார்பாக எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மலையக கவிஞரும் எழுத்தாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான 1947-1952 சி. வி. வேலுப்பிள்ளை 64 வருடங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான மலையக அரசியல் தலைவர்களும் தளபதிகளும் என்ற நூலின் முதல் பிரதியை தொகுப்பாசிரியர் எச் எச் விக்கிரமசிங்க முன்னாள் இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சரும், சமூக நிலைமாற்று மன்றத்தின் தலைவரும் கோபியோ அமைப்பின் ஸ்தாபக தலைவருமான பி. பி. தேவராஜ் அவர்களிடம் வழங்கிய போது எடுத்த படம்.
பி. பி. தேவராஜ் அவர்கள் பற்றி சி. வி. வேலுப்பிள்ளை 1958 ல் எழுதிய கட்டுரையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. லண்டனில் நேற்று நடைபெற்ற மலையக இலக்கிய மாநாட்டில் பிரதான நிகழ்வாக இந்நூல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM