திருமணத்திற்குப் பின்னரும் பெண்கள் வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இத்தகைய தருணத்தில் அவர்களுக்கு பிரசவத்திற்கு பின்னர் வயிற்றுப்பகுதியில் ஏற்படும் தழும்புகள் பெரும்பாலனவர்களுக்கு மறைவதில்லை.

சிலர் இதற்காக மருத்துவர்களின் பரிந்துரையுடன் சில சிகிச்சைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். சிலர் இதற்காக எத்தகைய சிகிச்சையையும் மேற்கொள்வதில்லை.

ஆனால் பிரசவத்திற்குப் பின்னர் வயிற்று பகுதியில் ஏற்படும் தழும்புகள், அவர்களை உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தி, அவர்களின் மனித வளம் முழுமையாக வெளிப்படாத நிலை ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில் இத்தகைய தழும்புகளை மறைய செய்வதற்கு தற்போது நவீன முறையிலான லேசர் சிகிச்சைகள் அறிமுகமாகி நல்லதொரு பலனை வழங்கி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

பிரசவத்திற்குப் பிறகு பெரும்பாலான பெண்மணிகள் மருத்துவர்களை சந்தித்து வயிற்றுப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் Stretch Marks எனும் தழும்புகளை அகற்ற வேண்டும் அல்லது மறையச் செய்ய வேண்டும் என கேட்பார்கள்.

வேறு சில பெண்கள் மருத்துவர்களிடம் இதற்காக பிரத்யேக களிம்புகள், கிறீம்கள் போன்றவற்றை பயன்படுத்திய பிறகும் அவை மறையவில்லை என புகார் கூறுவார்கள்.

அப்பகுதியில் உள்ள தழும்புகளால் எம்மால் இயல்பாக அலுவலகத்தில் பணியாற்ற இயலவில்லை என்றும் விவரிப்பார்கள்.

பேறுகாலத்திற்கு பின்னரான வயிற்று பகுதியில் ஏற்படும் தழும்புகளை ரூப்ரா, ஆல்பா என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்துவர்.

சிலருக்கு பிரசவத்திற்குப் பின்னரும் வயிற்றுப்பகுதியில் அரிப்பு என்பது நீடித்துக் கொண்டிருக்கும். பெண்களின் பேறுகாலத்தின் போது வயிற்றில் இருக்கும் சிசுவின் எடை மூன்று கிலோ அளவிற்கு மேலிருந்தாலும் அல்லது வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருந்தாலும் பிரசவ தழும்புகள் அழுத்தமாக ஏற்படக்கூடும்.

பேறு காலத்தின் போது வயிற்றில் உள்ள சிசுக்களின் வளர்ச்சிக்காக வயிற்றின் மேல் பகுதியில் உள்ள தோல்களில் ஏற்படும் தளர்வு, சிலருக்கு மீண்டும் இயல்பான நிலைக்கு மாறிவிடும்.

சிலருக்கு தோலின் எலாஸ்டிக் தன்மை எனப்படும் சுருங்கி விரியும் தன்மை இயல்பான நிலையிலிருந்து சமச்சீரற்ற நிலைக்கு மாறி விடக்கூடும். இதன் காரணமாகவும் வயிற்றுப் பகுதியில் தழும்புகள் ஏற்படக்கூடும்.

இந்நிலையில் மருத்துவர்கள் இத்தகைய தழும்புகளை மறைய செய்வதற்காக விற்றமின் -இ செறிவூட்டப்பட்ட க்றீம்களை பயன்படுத்த அறிவுறுத்துவர்.

மிக சிலருக்கு இத்தகைய தழும்புகள் மனதளவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தினால், அவர்களுக்கு தோல் மருத்துவ நிபுணர்கள், லேசர் முறையிலான சிகிச்சையை அளித்து முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.

டொக்டர் தீப்தி.

தொகுப்பு அனுஷா.