ஆர். ஜே. பாலாஜியின் 'வீட்ல விசேஷம்' ஓடியோ வெளியீடு

Published By: Digital Desk 5

11 Jun, 2022 | 12:35 PM
image

ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'வீட்ல விசேஷம்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

'மூக்குத்தி அம்மன்' படத்தை தொடர்ந்து இயக்குநர்கள் ஆர். ஜே. பாலாஜி மற்றும் என். ஜே. சரவணன் இணைந்து இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் 'வீட்ல விசேஷம்'. 

இதில் ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'சூரரைப்போற்று' பட புகழ் நடிகை அபர்ணா முரளி நடித்திருக்கிறார். 

இவர்களுடன் மூத்த நடிகர் சத்யராஜ் மற்றும் ஊர்வசி அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்திருக்கிறார். 

பே வ்யூ பிராஜக்ட்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

இவ்விழாவில் மூத்த இயக்குநர்கள் பி வாசு, கே. எஸ். ரவிக்குமார், சுந்தர். சி, தயாரிப்பாளர் போனி கபூர், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தயாரிப்பாளர் லட்சுமணன் ஆகியோருடன் படக்குழுவினரும் பங்குபற்றினர்.

இவ்விழாவில் பேசிய சுந்தர் சி, '' வீட்ல விசேஷம் என்ற திரைப்படம் ஹிந்தியில் வெளியான 'பதாய் ஹோ' எனும் படத்தின் தமிழ் ரீமேக். இந்தப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்குவதற்கு நானும் முயற்சி செய்தேன். 

ஆனால் போனி கபூர் இந்த திரைப்படத்தை ஆர் ஜே பாலாஜி மூலமாக தமிழில் நேரடியாக தயாரித்திருக்கிறார். 

ஆர். ஜே. பாலாஜியை நான் 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் அறிமுகப்படுத்தும்போது, இவர் இந்த அளவுக்கு பெரிய நட்சத்திர நடிகராக வருவார் என அவதானித்ததைவிட அவரிடம் இருக்கும் திறமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் நினைத்தேன். 

ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நடிகை ஹன்சிகா உடன் நடித்த பிறகு, என்னிடம் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என சொன்னார். 

அப்போது அவரிடம் நான் ஒரு விடயத்தை கூறினேன். '' நீங்க நல்லா நடிக்கிறதுக்கு நாளாகும். இப்போ நல்லா பேசினா மட்டும் போதும்'' என சொன்னேன். அவரும் அதை உணர்ந்து  பேசி நடித்தார்.

பொதுவாக திரை உலகில் என்னுடைய தொழில் முறையிலான குரு என்றால் அது மறைந்த மணிவண்ணன் அவர்கள் தான் திரையுலகத்தில் சொந்த வாழ்க்கையில் குரு என்றால் அது புரட்சித் தமிழன் சத்யராஜ் தான். 

இவர்களைத்தான் பின்பற்றி திரையுலகில் வெற்றி பெற்று வருகிறேன். இந்தப் படத்தை ஆர் ஜே பாலாஜி ஹிந்தியை விட சிறப்பாக இயக்கியிருக்கிறார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 

இதற்கு காரணம் கமல் சாரால் சிறந்த நடிகை என பாராட்டை பெற்ற ஊர்வசி அழுத்தமான வேடத்தில் நடித்திருப்பதால். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right