உலக சூழல் தினம் 2022 ஐ முன்னிட்டு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியம் (UNDP) மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து பிரண்டிக்ஸ் இனால் ரம்புக்கனையில் 10 ஏக்கர் பகுதி மீள் வனாந்தரச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

புவிப் பாதுகாப்பு தொடர்பில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தும் பிரண்டிக்ஸ், தனது நிலைபேறாண்மை செயற்பாடுகளின் பிரகாரம் ரம்புக்கனையில் அமைந்துள்ள Brandix Essentials தொழிற்சாலைக்கு அண்மித்த காணிப் பகுதியில் 3000 காயா மரங்களை நாட்டியிருந்தது.

இந்த நிகழ்வில் நிஷாந்த எதிரிசிங்க - வன பாதுகாவலர், வன பாதுகாப்பு திணைக்களம், சம்பத் ரணசிங்க, UNDP இன் திட்ட ஒருங்கிணைப்பாளர் (எரிசக்தி மற்றும் கழிவு) மற்றும் பிரண்டிக்ஸ் இன் குழும பொறியியல் தலைவர், அஹமட் இல்திமாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மக்கள், சமூகங்கள் போன்றவற்றில் அக்கறை கொண்டுள்ள நிறுவனம் எனும் வகையில், தனது சகல செயற்பாடுகளிலும் புவியின் நலன் தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், நிலைபேறாண்மையை பேணும் நோக்குடன் பிரண்டிக்ஸ் இயங்குகின்றது. 

மனித செயல்பாடு அல்லது இயற்கை பேரிடர் காரணமாக பொதுவாக இழந்த தாவரங்களை மீண்டும் வளர்ப்பதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கையான, மீள் வனாந்தரச் செய்கை நமது சுற்றுப்புறங்களில் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது.

இது காபன் குறைப்பு செயற்பாடுகளினூடாக சூழலில் காணப்படும் காபனீரொட்சைட் வாயுச் செறிவை குறைத்து நாம் சுவாசிக்கும் காற்றை மீளுருவாக்க அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. மேலும் இது, வனஜீவராசிகள் சஞ்சாரம் மற்றும் மண் வளம் மேம்படுத்தல் போன்றவற்றுக்கும் மிகவும் முக்கியமானது.