அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கருத்தை இலங்கை கத்தோலிக்க திருச்சபை முற்றாக நிராகரிப்பு   

By Vishnu

10 Jun, 2022 | 09:34 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

அலரி மாளிகைக்கு அருகிலும் காலிமுகத்திடலிலும் மே 9 ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க அருட் தந்தையர்களுமே காரணம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ள கருத்தை இலங்கை கத்தோலிக்க திருச்சபை முற்றாக நிராகரிக்கிறது.

கத்தோலிக்க திருச்சபை இனங்களுக்கிடையில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கே ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் முன்னின்று உழைத்துள்ளது என அருட் தந்தை சிறில் காமினி அடிகள் தெரிவித்தார்.

இனங்களுக்கிடையில் முறுகலை  ஏற்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எவ்வாறு திட்டமிட்டு உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதோ, அது போன்றே, கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவமும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.

மேலும், அதி உன்னத பாராளுமன்றில் தனக்குள்ள பாராளுமன்ற வரப்பிரசாதங்களை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தவறாகப் பயன்படுத்துகின்றமை கண்டிக்கத்தக்கது என அருட் தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற  ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

“உயிர்த்த ஞாயிறு தினக்  குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்படவிருந்த இன முறுகலை மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க அருட் தந்தையர்கள் தத்தம் பகுதி மக்களை அமைதிப்படுத்தினர். சமாதானத்தை முன்னிறுத்தி செயற்பட்டிருந்தனர்.

அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கும் , அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் மே 9 ஆம் திகதியன்று வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.

எனினும், மக்கள் புத்திசாலித்தனமாகவும், சமாதானத்துடனும் செயற்பட்டபோதிலும், அரசியல்வாதிகள்  வன்முறையை ஏற்படுத்தும் நாசகார செயற்பாட்டை கைவிடாது தொடர்ந்தும் செய்து வருகின்றனர்.

மக்கள் சாப்பிடுவதற்கு இல்லாமல் கஷ்டப்பட்டு உயிரை காப்பாற்றுவதற்கு போராடிவரும் தற்போதைய நிலையிலும், மோசமான அரசியலை நடத்துவது முட்டாள்தனமாகும்.

மே 9 வன்முறை சம்பவம் இடம்பெறும் என்பது குறித்து பொலிஸ் மா அதிபர் அறிந்திருக்கவில்லையா? புலனாய்வுத்துறையினருக்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லையா? அல்லது உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் நடப்பது பற்றி தகவல் தெரிந்திருந்தும் அதனை தடுக்காது செயற்பட்டது போன்று, மே 9 வன்முறைச் சம்பவத்தையும் தடுக்காமல் செயற்பட்டனரா? இல்லையென்றால், பொலிஸாருக்கும், இராணுவத்தினருக்கும் தங்களது கடமைகளை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதா? அவ்வாறு தடை விதித்தமை யாரென பல்வேறு வகையான கேள்விகள் எழுகின்றன.

இந்த வன்முறைச் சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு ஏன் எந்தவொரு முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. முயற்சிகள் எடுப்பதற்கு தடையாக இருந்தவர்கள் யார்?  இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றம் செய்தவர்கள் சட்டத்திற்கு முன் கொண்டுவந்து தண்டனை வழங்கப்பட வேண்டியது அவசியம்.

அலரி மாளிகைக்கு அருகிலும் காலிமுகத்திடலிலும் மே 9 ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க அருட் தந்தையர்களுமே காரணம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ள கருத்தை இலங்கை கத்தோலிக்க திருச்சபை முற்றாக நிராகரிக்கிறது” என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right