வாக்குமூலங்களில் ஹிஜாஸ் தொடர்பில் எதுவும் கூறவில்லை : குறுக்கு விசாரணைகளில் ஒப்புக்கொண்டார் அரச தரப்பின் பிரதான சாட்சியாளர் 

Published By: Vishnu

10 Jun, 2022 | 09:37 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அடிப்படைவாதப்போதனைகளை செய்ததாக சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக சி.ஐ.டியினருக்கு வழங்கிய வாக்குமூலத்திலோ, நீதிவானுக்கு வழங்கிய இரகசிய வாக்குமூலத்திலோ தான் எதனையும் தெரிவிக்கவில்லையென அரச தரப்பின் பிரதான சாட்சியாளர் மொஹமட் மலிக் நீதிமன்றில் ஒப்புக்கொண்டார்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, புத்தளம் அல்-சுஹைரியா அரபுக்கல்லூரியின் அதிபர் ஷகீல் கான் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தொடர்ந்துள்ள வழக்கில் குறுக்கு விசாரணைகளின்போது ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்திரதிஸ்ஸவின் கேள்விகளுக்கு பதிலளித்து பிரதான சாட்சியாளர் மேற்படி விடயத்தை ஒப்புக்கொண்டார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவைப் பெயர் குறிப்பிட்டோ அல்லது அவரது ஆள் அடையாளங்களைக் குறிப்பிட்டோ எந்தவிதமான வாக்குமூலங்களையும் தான் வழங்கவில்லை என்பதை இதன்போது அவர் ஒப்புக்கொண்டார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை புத்தளம் மேல்நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அரபுக்கல்லூரியின் அதிபர் ஷகீல் கான் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்காக நளின் இந்திரதிஸ்ஸ தலைமையிலான குழுவினரும், அதிபருக்காக சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள தலைமையிலான குழுவினரும் மன்றில் ஆஜராகினர்.

வழக்குத்தொடுனர் சட்டமா அதிபர் சார்பில் வழக்கை நெறிப்படுத்தும் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம முன்னிலையானார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை (10) அரசதரப்பின் பிரதான சாட்சியாளரிடம் குறுக்கு விசாரணைகள் தொடர்ந்தன. சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்காக ஆஜரான நளின் இந்திரதிஸ்ஸ குறுக்கு விசாரணகளைத் தொடர்ந்தார்.

இதன்போது புத்தளம் அல் சுஹைரியா அரபுக்கல்லூரிக்கு வருகைதந்து அடிப்படைவாதத்தைப் போதித்தாக பிரதான சாட்சியாளர் குறிப்பிட்ட சற்றுப் பருமனான வெள்ளைநிறத் தோற்றமுடைய சிறிதளவு தாடிவைத்த நபர் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்திரதிஸ்ஸ குறுக்குக்கேள்விகளை ஆரம்பித்தார்.

அவரது கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதான சாட்சியாளர் தனது வீட்டில்வைத்து சி.ஜ.டி அதிகாரிகள் பெற்றுக்கொண்ட வாக்குமூலத்திலோ, பின்னர் சி.ஜ.டிக்கு சென்று தான் வழங்கிய வாக்குமூலத்திலோ அல்லது கோட்டை நீதிவான் நீதிமன்றில் வழங்கிய இரகசிய வாக்குமூலத்திலோ அது தொடர்பில் எதனையும் கூறவில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

அந்த வாக்குமூலங்களில் வழக்கின் முதலாவது பிரதிவாதியின் பெயரைக்கூட அவர் குறிப்பிடவில்லை  என்பதை ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் வழக்கின் முதலாவது பிரதிவாதியின் பெயரைக்கொண்டோ அல்லது அவரது அங்க அடையாளங்களைக்கொண்டோ எந்தவொரு வாக்குமூலத்தையும் பிரதான சாட்சியாளர் வழங்கியிருக்காத நிலையில் விசாரணையாளர்களான சி.ஜ.டியினர் தொலைபேசியில் அச்சுப்பிரதிகள் ஊடாகவும், புகைப்படங்களைக்காட்டியும் வாக்குமூலம்பெற முற்பட்டுள்ளமை ஜனாதிபதி நளின் இந்திரதிஸ்ஸவினால் நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இவ்வாறான நிலையில் அரச தரப்பின் பிரதான சாட்சியாளர் சி.ஜ.டியின் தேவைக்காக எவ்வித அடிப்படைகளும் இல்லாத பொய்களை சாட்சியாக முன்வைப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்திரதிஸ்ஸ குறிப்பிட்டார்.

எனினும் தான் பொய் உரைப்பதாகக் கூறிய விடயத்தை மட்டும் பிரதான சாட்சியாளர் மறுத்தார். இந்நிலையில் இரண்டாவது பிரதிவாதிக்காக மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள இதனையடுத்து குறுக்கு விசாரணைகளை ஆரம்பித்தார்.

அரசதரப்பின் பிரதான சாட்சியாளர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலத்தில் கூறிய முன்னுக்குப்பின் முரணான விடயங்களை சுட்டிக்காட்ட அவ்வாக்குமூலத்தின் மூலப்பிரதியை சாட்சியாளருக்குக் காண்பிக்குமாறு அவர் கோரினார்.

மன்றில் ஆஜராகியிருந்த சி.ஐ.டியின் பொலிஸ் பரிசோதகர் துஷார தான் கொண்டுவந்திருந்த சில விடயங்களைக் காண்பித்தபோதிலும், அவ்வாக்குமூலம் அதில் இருக்கவில்லை.

இந்நிலையில் நீதிபதி நிதி அபர்ணா சுவந்துருகொட சி.ஐ.டியினரின் நடவடிக்கைகள் தொடர்பில் கடும் அதிருப்தி தெரிவித்து, அவர்களை எச்சரித்தார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா குறித்த வழக்கு விசாரணைகள் சி.ஐ.டியினரின் செயற்பாடுகள் காரணமாக தொடர்ச்சியாக இவ்வாறு இழுத்தடிக்கப்படுவதாகவும், அதன் பிரதிபலன் பூரண கட்டமைப்பினையும் பாதிப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

கடந்த தவணையின்போதும் சி.ஐ.டியினர் மூல ஆவணமொன்றினை எடுத்துவராததன் காரணமாகக் குறுக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்ததை ஞாபகப்படுத்திய நீதிபதி, இம்முறை வழக்கின்போதும் சி.ஐ.டியினர் அதே தவறைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

வழக்கு விசாரணைக்கு வரும்போது மூல ஆவணத்தை எடுத்துவரவேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட சி.ஐ.டியினருக்கு இல்லையா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, சி.ஐ.டியினரை விட சாதாரண பொலிஸார் திறமையாக செயற்படுவதாகக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மூல ஆவணத்தைக் கொண்டுவராமையை மையப்படுத்தி நே;றறு மன்றில் ஆஜரான சி.ஐ.டி பொலிஸ் பரிசோதகர் துஷாரவிற்கு எதிராக பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிபதி குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தின் பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன் அடுத்த தவணைக்கு வரும்போது வழக்குடன் தொடர்புபட்ட அனைத்து மூல ஆவணங்களையும் கண்டிப்பாக எடுத்துவரவேண்டும் எனவும் மன்றில் ஆஜரான சி.ஐ.டி அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

நேற்றைய குறுக்கு விசாரணைகளின் நிறைவில் சாட்சிக்கூண்டிலிருந்து நீதிபதியிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்த அரசதரப்பு பிரதான சாட்சியாளர் மொஹமட் மலிக் மினுவங்கொடையிலுள்ள தனது வீட்டிற்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பை மீளப்பெற உத்தரவிடுமாறு கோரினார். அப்பாதுகாப்பு நடைமுறை காரணமாக தனது இயல்பு வாழ்க்கையைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து அரசின் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம மன்றில் விடயங்களை முன்வைத்து சாட்சியாளர் தனது பாதுகாப்பை தானே பார்த்துக்கொள்வதாகக் குறிப்பிடும் நிலையில், அவரது இயல்பு வாழ்க்கையைக் கருத்திற்கொண்டு சாட்சியாளர் கோரும் உத்தரவை வழங்குவது தொடர்பில் ஆட்சேபனை இல்லையெனக் குறிப்பிட்டார்.

இதனையடுத்து பிரதான சாட்சியாளர் மலிக்குக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பு இனிமேல் அவசியமற்றது என நீதிமன்றப் பதிவாளர் ஊடாக மினுவங்கொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள், குறுக்கு விசாரணைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம், 23 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள் ஊடாகவோ, தவறான பிரதி நிதித்துவம் ஊடாகவோ பல்வேறு மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வண்ணம்  எதிர் உணர்வுகளை தூண்டும் விதமாக சொற் பொழிவினை நடாத்தியமை, அதற்காக சதி செய்தமை தொடர்பில்  பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து கூறப்படும் அச்சட்டத்தின்  3 (அ) பிரிவின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன்  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில், ' இஸ்ரேலியர்கள் கைப்பற்றியிருப்பது, எமது பள்ளிவாசல்கள். இலங்கையில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல்  நடத்தினாலேயே அவர்கள் அச்சப்படுவர்.' என  கூறி இஸ்ரேல் - பலஸ்தீன் யுத்த வீடியோக்களை கண்பித்தமை ஊடாக  மதக் குழுக்கள் இடையே மோதல் நிலைமையை ஏற்படுத்தும் வண்ணம் உணர்வுகளை தூண்டியதாக  பயங்கரவாத தடை சட்டத்தின்  2 (1) எச் பிரிவுடன் இணைத்து நோக்கப்படும் அச்சட்டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உதவி ஒத்தாசை புரிந்ததாக  சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்கரவாத தடை சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 இதனைவிட,  பலஸ்தீன் - இஸ்ரேல் தொடர்பிலான யுத்த வீடியோ காட்சிகளை காண்பித்து  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்  கூறியதாக கூறப்படும் வசனங்கள் ஊடாக  வெறுப்புணர்வுகளை விதைத்தாக குற்றம் சுமத்தி சிவில் அரசியல் உரிமைகள் குறித்தான சர்வதேச இணைக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம்  உறுப்புரையுடன் இணைத்து பார்க்கப்படும் அச்சட்டத்தின் 3 (3) ஆம் உறுப்புரையின்  கீழ்  குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகவும், அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் மத்ரஸா அதிபர்   சலீம் கான் மொஹம்மட் சகீலுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தல் : ஐக்கிய தேசியக்...

2023-03-26 20:43:26
news-image

சட்டவிரோத மணல் அகழ்வுகளால் நிலக் கண்ணி...

2023-03-26 20:42:59
news-image

மட்டக்களப்பு வாவியொன்றில் பெண்ணின் சடலம் மீட்பு

2023-03-26 20:40:31
news-image

கடல் தொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர்...

2023-03-26 20:39:51
news-image

பால் தேநீரின் விலை நாளை முதல்...

2023-03-26 18:19:23
news-image

யாழ். பல்கலை ஊடகக் கற்கைகள் துறைக்கு...

2023-03-26 18:12:21
news-image

2022இல் எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை...

2023-03-26 17:45:52
news-image

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த...

2023-03-26 16:46:29
news-image

தாயை கொலை செய்த மகன் 8...

2023-03-26 16:27:09
news-image

மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றும் செயற்பாடு ...

2023-03-26 15:45:23
news-image

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள்...

2023-03-26 16:05:17
news-image

போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர்...

2023-03-26 14:39:26