மறைந்த தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் 99 ஆவது ஜனனதின நினைவேந்தலும் நன்றி நவிலலும்

By Nanthini

10 Jun, 2022 | 12:32 PM
image

(மா. உஷாநந்தினி) 

மிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 99ஆவது ஜனன தின நினைவேந்தல் மற்றும் இலங்கை மக்களுக்கு நிவாரண உதவியளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி நவிலல் நிகழ்வானது கடந்த 3ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் விநோதன் கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற்றது.

மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உபதலைவர், முனைவர் சதீஷ்குமார் சிவலிங்கம்  தலைமையில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு. தே. செந்தில் வேலவர், முன்னாள் இந்து கலாசார அமைச்சர் திரு. பீ.பீ. தேவராஜ், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் கே.டி. குருசாமி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீட பேராசிரியர் அ. சர்வேஸ்வரன், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் திருமதி. உமாசந்திர பிரகாஷ், வைத்திய கலாநிதி திரு. அனுஷ்யந்தன் சிவபிரகாசம், சிரேஷ்ட ஊடகவியலாளரும் கவிஞருமான இளநெஞ்சன் முர்ஷீதீன், பிச்சை கிருஷ்ணா, கவிதாயினி ஷிமாரா அலி, நடிகை சாந்தி பானுஷா, தேசிய இளைஞர் சேவை மன்றம் - கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் திரு. தம்பிராசா ஈஸ்வரராஜா, கவிஞர் மௌலவி காத்தான்குடி பௌஸ் முதலானோர் கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து, மு. கருணாநிதியின் உருவப்படத்துக்கு பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சைவ மங்கையர் கழக மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.

திரு. செந்தில் வேலவர் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய பீ.பீ. தேவராஜ், 

"தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக திகழ்கிறது. தமிழக முதல்வர் மட்டுமன்றி, அம்மாநில அரச சபை அங்கத்தினர்கள், மாணவர்கள், பெண்கள் என பெருந்திரளானோர் இணைந்து நிதி திரட்டியதன் மூலம் இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளமையிட்டு மகிழ்கிறோம். 

அடக்கமும், எதிரியானாலும் அரவணைத்துப் போகும் குணமும் உடையவர், கலைஞர் எனும் கலைக்கடலின் வாரிசான மு.க. ஸ்டாலின். அவரதும், அவராட்சி நிர்வாகத்தில் தமிழக மாநிலம் கண்டுள்ள வளர்ச்சியையும் வியந்து பாராட்டுகிறேன்..." என்றார். 

நிகழ்வை தலைமையேற்ற திரு. சதீஷ்குமார் சிவலிங்கம், 

"எழுத்தாளராக, கவிஞராக, பேச்சாளராக, முத்தமிழ் அறிஞராக, மு. கருணாநிதி ஆற்றிய பணிகளை உலகெங்கும் வாழும் தமிழர்களால் என்றும் மறந்துவிட முடியாது. 

வள்ளுவர், இளங்கோ, பாரதி வாழ்ந்த காலத்தில் நாங்கள் பிறக்கவில்லை. ஆனால், நாங்கள் வாழும் இக்காலத்தில் கலைஞரை போன்ற தமிழ் மேதைகளை பார்த்திருக்கிறோம். அவர்களை போற்றுவதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு நமது தமிழ்ப் பாரம்பரியத்தை, பண்பாட்டை கடத்துகிறோம். 

80களில் வடக்கு, கிழக்கில் நடந்த யுத்தத்தின்போது அகதிகளாக தமிழகத்துக்கு சென்ற எமது மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தது முதல் இன்று வரை இரு நாடுகளுக்குமான தொடர்பு நீள்கிறது.

மு. கருணாநிதி பலரால் விமர்சிக்கப்படும் ஒருவராக இருப்பினும், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு 4 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) நிதியினை மிக தைரியமாக கொடுத்தபோது மனந்திறந்து பாராட்டியவர், கலைஞர்.

தற்போது தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள இந்த நிவாரண உதவிக்கு இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதற்கு அதிமுக, பா.ஜ.க, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சி என வேறு சில கட்சிகளும்  ஒத்துழைத்துள்ளன. 

முதல் முறையாக, உத்தியோகபூர்வமாக, ஒரு மாநில அரசு இன்னொரு நாட்டுக்கு நேரடியாக நிவாரணம் வழங்கியிருப்பதாக இதனை கருதலாம். எனினும், இந்த நிவாரண பொருட்களை மக்களுக்கு பங்கீடு செய்வதில் சில முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது...." என தெரிவித்துள்ளார். 

திருமதி. உமாசந்திர பிரகாஷ், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்ட காலமாய் தொப்புள்கொடி உறவு உள்ளதாக கூறினார். 

அத்துடன் "பூகோள ரீதியாக தென் தமிழகத்துக்கும் வட இலங்கைக்கும் இடையே மிக ஆழமான வரலாற்றுப் பின்புலம் உண்டு. அந்த வகையில் மு. கருணாநிதி அவர்கள் இலங்கை மக்களின் நலனுக்காக அக்கறையோடு செயற்பட்டவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 

2009இல் நான் வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றியபோது 2010ஆம் ஆண்டு தமிழகத்தில் கலைஞரின் தலைமையிலான 'செம்மொழி மாநாடு' உலகத் தமிழ் மாநாடாக நடைபெற்றது. அதில் நானும் கலந்துகொண்டு, கலைஞரை சந்தித்த பெருமையை பெற்றேன். 

அதன் பின்னரும் அவரோடு கடிதம் மூலமாக நற்தொடர்பினை பேணி வந்தமை எனக்கு பெருமையான விடயமே. இத்தினத்தில் அவரை நினைவுகூருவது ஈழத் தமிழர்களுக்கு பெருமையளிக்கிறது.  

இந்திய அரசு, குறிப்பாக, தமிழக அரசு இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ள நிவாரண உதவியானது, 'இந்த இக்கட்டான நிலையிலும் எங்களுக்காக சிந்திக்க சிலர் உள்ளனர்' என்ற எண்ணத்தை கொடுக்கிறது. இதுவே பிரச்சினையிலிருந்து நாம் மீண்டெழ மிகப்பெரும் சக்தியை தருகிறது. 

காலத்தின் தேவை கருதி உதவியளித்த தமிழக முதல்வருக்கு நன்றி! 

உங்களது மேலும் பல உதவிகள் இதுபோன்ற பணிகளினூடாக எதிர்காலத்தில் கிடைக்க வேண்டும்.." என்ற கோரிக்கையை முன்வைத்து, கலைஞர் பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன் கூறுகையில், 

"தமிழகத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒருதாய் பிள்ளைகளாக பழகுகின்ற பண்பை விதைத்தவர் கலைஞர். அவரது புதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில், பேராசிரியர் காதர் மொஹிதீன் தலைமையில், அகில இந்திய முஸ்லிம் லீக் பங்காளிக் கட்சியாக திகழ்கிறது. அக்கட்சியின் அங்கத்தினரும் இந்த நிதியுதவிக்கு பங்காற்றியுள்ளனர்.

தமிழகத்தில் யாசகர் ஒருவர் ஆயிரக்கணக்கில் பணத்தை திரட்டி நிதியுதவி செய்தமையும், முன்னர் ஒரு சிறுமி தான் உண்டியலில் சேர்த்த பணத்தை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கியமையும், இந்நாட்டில் சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்க்க தூண்டுவதாய் இருக்கிறது. எமது மக்களுக்கு பாதுகாப்பு அரணாக தமிழ்நாட்டு மக்கள் உள்ளனர் என்கிற செய்தியும் இங்கே தொக்கி நிற்கிறது..." என தெரிவித்தார்.

திரு. அ.சர்வேஸ்வரன் "தமிழ்ப்பற்று நிறைந்த கலைஞருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன், தமிழை வாழ வைப்பதே ஆகும். 

நிவாரண உதவியை இன பேதமின்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்குமாக வழங்கும்படி இலங்கைத் தமிழர்கள் சார்பில்  கேட்டுக்கொண்ட போது 'இதுதான் தமிழர்களின் கலாசாரம்' என நெகிழ்ந்தார், தமிழக முதல்வர். 

'நானும் உண்ணவேண்டும் மற்றவரும் உண்ண வேண்டும்' என்கிற தமிழ் மக்களின் இந்த உணர்வை பெரும்பான்மை மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்...

இன்று நாம் சந்திக்கும் இந்த நெருக்கடி நிலைக்கும், பிற நாடுகளிடம் இலங்கை உதவி கோருவதற்கும் காரணம், சுதந்திரம் பெற்றதிலிருந்து அரசு விட்ட தவறுகள், தூர நோக்கு இல்லாத இனவாத அரசியல், பொருத்தமற்ற சட்ட கட்டமைப்புக்கள், சமஷ்டி முறை பின்பற்றப்படாமை, அரசியலமைப்புகளில் காணப்பட்ட குழறுபடிகளே ஆகும்.." என்றார். 

திரு. கே.டி. குருசாமி, தமிழக அரசுக்கு மட்டுமன்றி, இலங்கைக்கு பல்வேறு உதவிகளை மேற்கொண்டுவரும் இந்திய மத்திய அரசுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்தார். 

இந்நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க 'மொய் விருந்து' வைத்து நிதி திரட்டிய தமிழகத்தின், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தேநீர் கடைக்காரரின் மனிதாபிமானத்தை பாராட்டினார்.  

"8 வருடங்களுக்கு மேல் தொண்டை புற்றுநோயுடன் போராடி வந்தவர் கலைஞர். நோய் காரணமாக அவர் எழுதுவதை நிறுத்திக்கொள்ளவில்லை. பொதுச் சேவையிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளவில்லை... 

நோயோடு நாட்களை கழித்தபோதும், ஓய்ந்து போகாமல் மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்...." என கலைஞரின் மனவலிமையையும் போராட்ட குணத்தையும் கூறி வியந்தார், வைத்திய கலாநிதி திரு. அனுஷ்யந்தன் சிவபிரகாசம்.

கலைஞரின் தமிழ்ப்பற்று, தேசப்பற்று, ஆளுமைப் பண்புகளை மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பயன்மிகு செயற்பாடுகள் குறித்து நிகழ்வில் பங்கேற்ற பிரமுகர்கள் தங்கள் நிறைவான கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

நிவாரண உதவிக்கு பங்களிப்பு நல்கியவர்களது சேவை மனப்பான்மையை போற்றினர். அதேவேளை தமிழகத்தின் திரைத்துறையை சேர்ந்த பலர் இலங்கை மக்களுக்கான நிவாரண உதவி விடயத்தில் மௌனம் காத்தது ஏன் என்ற கேள்வியை நிகழ்ச்சித் தொகுப்பாளர் திரு. பெ. சீத்தாராமன் (இலங்கை வானொலி) முன்வைத்திருந்தார். 

தொடர்ந்து இளநெஞ்சன் முர்ஷீதீன், கவிதாயினி ஷிமாரா அலி, மௌலவி காத்தான்குடி பௌஸ் ஆகியோர் கவி வாழ்த்து வழங்கினர். இறுதி நிகழ்வாக, திரு. தம்பிராசா ஈஸ்வரராஜாவின் நன்றியுரை இடம்பெற்றது. 

படங்கள்: எஸ்.எம். சுரேந்திரன் 

 

 

 

  

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right