10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சொந்தப் பிணைகளில் வீடு திரும்பிய ஜோன்ஸ்டன்

Published By: Digital Desk 4

09 Jun, 2022 | 09:24 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

'மைனா கோ கம', 'கோட்டா கோ கம' மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பிலான விவகாரத்தில் கைது செய்ய  பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த  முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் இன்று ( 9)  மாலை சரணடைந்தார்.  

இன்று (9) இரவு 8 மணிக்கு முன்னர் கோட்டை நீதிவான் நீதிமன்றில் சரணடையுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம்  அவருக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று மாலை 6.30 மணியலவில் மஹரகமையில் உள்ள,  கோட்டை நீதிவான் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சரணடைந்துள்ளார். 

அவ்வாறு சரணடைந்ததை தொடர்ந்து அவரை 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சொந்த பிணைகளில் செல்ல நீதிவான் அனுமதித்துள்ளதுடன்,  அடுத்த வழக்குத் தவணையின் போது மன்றில் ஆஜராகுமாறு  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு  அறிவித்துள்ளார்.  

தன்னை கைதுசெய்வதை தடுக்கக் கோரி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அம்மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித ராஜகருணா, தம்மிக கனேபொல ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழாம் முன் பரிசீலிக்கப்பட்ட போது,  இன்று இரவு 8 மணி வரையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைக் கைதுசெய்வதற்கான பிடியாணையை செயற்படுத்தவேண்டாம் என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அத்துடன் தன்னைக் கைதுசெய்வதைத் தடுத்து உத்தரவு பிறப்பிக்கக்கோரி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்வைத்துள்ள ரிட் மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பொன்றினை வழங்கும் வரை அவர் தொடர்பில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கவேண்டாமென மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் கோட்டை நீதிவானுக்கு உத்தரவிட்டது.

நேற்று ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ. ரிட்/200/2022 எனும் ரிட் மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மனுதாரரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா மன்றில் ஆஜராகி ஜோன்ஸ்டன் சார்பில் வாதங்களை முன்வைத்தார்.

'எனது சேவை பெறுநரை சந்தேகநபராகப் பெயரிட்டு, அவரைக் கைதுசெய்ய பிரதிவாதிகள் தரப்பு முன்னெடுத்த முயற்சிகள் முற்றிலும் சட்டவிரோதமானவையாகும்.

 'கோட்டா கோ கம', 'மைனா கோ கம' போராட்டங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் இரகசிய பொலிஸார் கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆரம்பத்திலேயே அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த அறிக்கைகளில் எனது சேவை பெறுனர் குறித்த தாக்குதல்களுடன் தொடர்புபட்டதாக எந்த விடயங்களும் முன்வைக்கப்படவில்லை.

அவ்வாறான பின்னணியிலேயே இரகசிய பொலிஸார் எனது சேவை பெறுனருக்கு எதிராக வெளிநாட்டுப்பயணத்தடை உத்தரவைப் பெற்றனர். 

அதன் பின்னர் சதி செய்தமை, சட்டவிரோத ஒன்றுகூடல், அச்சுறுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இரகசிய பொலிஸார் நீதிமன்றுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

தாக்குதல் நடாத்தப்பட்ட தினம் அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் எனது சேவை பெறுனரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆற்றிய உரை தொடர்பில் உளவள நிபுணர்களான நீல் பெர்னாண்டோ, குணதாஸ பெரேரா ஆகியோரின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இது பூரணமான தவறான செயற்பாடாகும். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றமொன்றை இழைத்திருப்பதாகத் தவறாகச் சித்தரித்து நீதிமன்றைத் தவறாக வழிநடத்தி பொலிஸார் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள்.

சம்பவ தினம் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அலரி மாளிகையில் ஆற்றிய உரை எவ்விதமான வன்முறைகளையும் தூண்டும் வசனங்களை உள்ளடக்கியிருக்கவில்லை. அங்கு அவர் ஆற்றிய உரையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இராஜினாமா செய்யவேண்டாம் என்றே அழுத்தம் வழங்கினார். 

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி கோரியிருந்ததாக எனது சேவை பெறுனர் அவரது உரையில் குறிப்பிட்டார். அந்த உரையில் அவர் ஜனாதிபதியை விமர்சித்தார்.

இந்தப் பிரச்சினையைக் கலந்துரையாடித் தீர்க்குமாறு எனது சேவை பெறுனர் ஜனாதிபதியிடம் கோரிக்கைவிடுத்தார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவரது உரையில் 'மோதல் (சட்டன)' எனும் சொற்பிரயோகம் ஊடாக குறிப்பிட்டது ஜனாதிபதியுடன் மோதலை ஆகும்.

அவரது உரையில் தாக்குதல் நடத்துங்கள், கொலை செய்யுங்கள் போன்ற எந்தவொரு வசனமும் உள்ளடங்கவில்லை.

எனவே அந்த உரையில் வன்முறையைத் தூண்டக்கூடிய, ஒருவரைக் கோபப்படுத்தக்கூடிய எந்தவொரு சொற்பிரயோகமும் இடம்பெறவில்லை. அவரது உரை வெறுமனே அரசியல் கருத்துக்களை மாத்திரமே உள்ளடக்கியிருந்தது. 

அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமையான கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் எல்லோருக்கும் சமமானது.

அவ்வாறெனில் எனது சேவை பெறுனர் அமைதிப்போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடாத்தத் தூண்டினார் எனக் குற்றம் சுமத்துவது எப்படி? குற்றம் சுமத்துவது எப்படியிருப்பினும் நியாயமான சந்தேகத்தைக்கூட எழுப்பமுடியாது.

இவ்வாறான நிலையில் பிடியாணை ஒன்றுடன் அல்லது பிடியாணை இல்லாமல் எனது சேவை பெறுனரைக் கைதுசெய்ய சட்டமா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் சட்டத்தின் அடிப்படை சித்தாந்தங்களுக்கு எதிரானது' என வாதங்களை முன்வைத்தார்.

இதனையடுத்து இந்த ரிட் மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தின் பணிப்பாளர், சட்டமா அதிபர் உள்ளிட்டோர் சார்பில் மன்றில் ஆஜரான மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் விகும் டி ஆப்ரூ இந்த ரிட் மனுவை முன்கொண்டுசெல்ல எந்தவிதமான சட்டப்பின்னணியும் இல்லையென வாதங்களை முன்வைத்தார். 

'கனம் நீதிபதிகளே, இந்த மனுதாரரை கைதுசெய்யுமாறு நேற்று கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

தனது சேவை பெறுனரைக் கைதுசெய்ய சாட்சிகள் இல்லையென மனுதாரர் தரப்பு சட்டத்தரணி வாதிடுகின்றார். எனினும் அந்த விடயங்களை அவர் நீதிவான் நீதிமன்றிலேயே முன்வைக்கவேண்டும்.

அவருக்கு நீதிமன்றில் சரணடைந்து பிடியாணையை மீளப்பெறவைக்கமுடியும். அதேபோன்று நீதிவானின் உத்தரவு தவறானது எனில் மேல்நீதிமன்றுக்கு மீளாய்வு மனுவொன்றினைத் தாக்கல்செய்ய அவருக்கு சந்தர்ப்பம் உள்ளது.

அந்த சட்டரீதியிலான நடைமுறைகளைப் பின்பற்றாது மனுதாரரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேரடியாக ரிட் மனுவொன்றில் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றைப் பயன்படுத்தி நிவாரணம்பெற முயற்சிப்பது தவறான முன்னுதாரணமாக அமையலாம். 

இந்த வழக்கைப் பொறுத்தவரை சட்டமா அதிபர் தேவையற்ற தலையீடுகளைச் செய்யவில்லை. விசாரணை செய்து போதுமான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டால் மட்டுமே மனுதாரரை சந்தேகநபராகப் பெயரிட சட்டமா அதிபர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

எனவே இந்த மனுவின் ஊடாக சட்டமா அதிபர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கின்றேன். 'நாம் மோதலுக்குத் தயார்', 'ஜனாதிபதிக்கு முடியாவிட்டால் அதனை எங்களிடம் கையளியுங்கள்', 'இதனை நாம் சுத்தம் செய்கிறோம்', 'நாம் பொறுத்தது போதும்' போன்ற வசனங்களை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது உரையில் பயன்படுத்தியுள்ளார். 

அவர் அந்த உரையில் தேர்தலொன்றின் போது ஏற்படும் மோதலைக் குறிப்பிடவில்லை. 'தீர்த்துவிடுவோம்' என அவர் குறிப்பிடுவது போராட்டத்தை முடிவிற்குக்கொண்டுவருவதையே ஆகும். இவை விவாதத்துக்குரிய கருத்துக்களாகும். இந்த விடயங்களை நீதிவான் நீதிமன்றில் மட்டுமே சவாலுக்குட்படுத்த முடியும். ரிட் மனுவொன்றின் ஊடாக இவ்வாறான விடயங்களை சவாலுக்குட்படுத்த முடியாது. இந்த வசனங்களின் குற்றவியல் தன்மை அல்லது குற்றவியல் பொறுப்பினை நீதிவான் நீதிமன்றம் மட்டுமே தீர்மானிக்கமுடியும். எனவே இந்த ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்காது கோருகின்றேன்' என வாதிட்டார். 

இதனையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரியன்ஸி அரசகுலரத்ன, சரத் ஜனமான்ன ஆகியோரும் மன்றில் இதனையொத்த வாதங்களை முன்வைத்தனர். 

இதனையடுத்தே விடயங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று இரவு 8 மணிக்குள் கோட்டை நீதிமன்றில் சரணடைய உத்தரவிட்டு குறித்த மனு மீதான மேலதிக பரிசீலனைகளை எதிர்வரும் ஜுன் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11