நாட்டின் தற்போதைய நிலைக்கு எமக்கு அதிகாரத்தை வழங்கியவர்களும் பொறுப்புக்கூற வேண்டும் - பஷில்

By T Yuwaraj

09 Jun, 2022 | 09:38 PM
image

(எம்.மனோசித்ரா)

அரச நிர்வாகத்திலிருந்து விலகியுள்ள போதிலும் எனது அரசியல் செயற்பாடுகள் தொடரும். தேவையயேற்படின் கட்சியின் அரசியல் செய்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும். பொறுத்தமானவர்களை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கு வாய்ப்பளிப்பதற்காகவே நான் பதவி விலகினேன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Articles Tagged Under: நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ | Virakesari.lk

தன்னை இலக்காகக் கொண்டே 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் , அதனை தான் எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு அனைவரும் பொறுப்பு கூற வேண்டும் என்ற அடிப்படையில் , எம்மவர்களுக்கு அதிகாரத்தை வழங்கிய மக்களும் அதில் உள்ளடங்குவர்என்றும் பஷில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள தலைமையகத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரச நிர்வாகத்தில் ஈடுபடப்போவதில்லை

பொறுத்தமான ஒருவரை தேசிய பட்டியல் ஊடாக நியமிப்பதற்கு வாய்ப்பளித்து நான் எனது பதவியை இராஜிநாமா செய்துள்ளேன்.

ஜனாதிபதி மற்றும் தற்போதைய பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக்கு இந்த நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்பதற்கான சவாலை வெற்றிக் கொள்ள வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அரச நிர்வாகம் மற்றும் அரசியல் ஆகிய இரண்டும் இரு வேறுபட்டவை என்பதே எனது நிலைப்பாடாகும். அதற்கமைய இன்றிலிருந்து  எவ்வித அரச நிர்வாக செயற்பாடுகளிலும் ஈடுபடப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ளேன். 

ஆனால் அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலப்போவதில்லை. தேவையேற்படின் கட்சியின் அரசியல் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

பாராளுமன்றத்திற்கு உரித்தானவனல்ல

கேள்வி : 21 நிறைவேற்றப்பட்டு உங்களது பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படும் என்பதன் காரணமாகவா முன்னரே பதவி விலகுகின்றீர்கள்?

பதில் : நிதி அமைச்சினை ஏற்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே பாராளுமன்ற உறுப்பினரானேன். தற்போது அந்த பொறுப்பு இல்லாத நிலையில் நான் பாராளுமன்றத்திற்கு உரித்தானவன் அல்ல என்று எண்ணுகின்றேன். அமைச்சு பதவியை துறந்து நிறைவேற்று துறையிலிருந்து விலகியதையடுத்து , அரசியலமைப்பு துறையிலிருந்தும் விலக வேண்டும் என்பதற்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளேன்.

தம்மிக பெரேரா

கேள்வி : உங்களுக்கு பதில் தம்மிக பெரேரா நியமிக்கப்படுவாரா?

பதில் : அது பற்றி எனக்கு தெரியாது. நியமிக்கும் உரிமை முற்று முழுதாக கட்சிக்குரியது. அனைவரும் எதிர்பார்ப்பது முறைமை மாற்றத்தையே ஆகும். மாறாக ஆள் மாற்றத்தை அல்ல. எனினும் நாம் இதுவரையிலும் அதனையே செய்து வந்துள்ளோம். எதிர்காலத்திலாவது முறைமையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றேன்.

மக்களின் எதிர்பார்ப்புக்களை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை

கேள்வி : நீங்கள் பதவியேற்கும் போது மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. அந்த வகையில் நாட்டு;க்கு ஏதேனும் நன்மை செய்துள்ளதாக எண்ணுகின்றீர்களா?

பதில் : நாட்டுக்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளேன். எனினும் மக்களின் எதிர்பார்ப்புக்களை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. நான் மீண்டும் நாட்டுக்கு வருவதற்கான பிரதான இரு காரணிகள் உள்ளன. அவற்றில் ஒன்று ஊழல் மோசடி வழக்காகும். இரண்டாவது மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு நான் பொறுப்பு கூற வேண்டும் என்று குற்றஞ்சுமத்தப்பட்டதாகும்.

அதற்கமைய குறித்த வழக்குகளிலிருந்து நான் விடுவிக்கப்பட்டுள்ளேன். மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் பதவியில் அமர்த்த வேண்டிய பொறுப்பு காணப்பட்டது. அதனையும் நிறைவேற்றியுள்ளேன். இவற்றை விடுத்து நிதி அமைச்சராக வேண்டும் என்றோ , பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற எண்ணத்திலோ நாட்டுக்கு வரவில்லை.

எனது முயற்சியே உதவிகள் கிடைக்க காரணம்

கேள்வி : நாடு தற்போது அடைந்துள்ள பின்னடைவிற்கு நீங்கள் தான் பொறுப்பு கூற வேண்டும் என்பது மக்களின் நிலைப்படாகவுள்ளது?

பதில் : ஆரம்ப காலம் முதலே கடன் பெறுவதும் , அதனை மீள செலுத்துவதுமே நாடு தற்போதுள்ள நிலைமைக்கு காரணமாகும். இந்நிலைமையிலிருந்து நாட்டை மீட்க வேண்டும் என்பதே எனது இலக்காகக் காணப்பட்டது.

கேள்வி : அவ்வாறெனில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க மாட்டீர்களா?

பதில் : நான் வரும் போது எரிபொருள் நெருக்கடி காணப்படவில்லையா? தற்போது நாட்டுக்கு கிடைக்கப் பெறும் சில உதவிகளும் என்னால் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளினாலேயே ஆகும். நான் பதவியேற்கும் போது 7 பில்லியன் டொலர் இருப்பு காணப்படவில்லை. ஒரு வருடத்திற்கு கையிருப்பு பூச்சி நிலைமையை அடைந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. என்னால் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் மூலமாகவே தற்போது எரிபொருள் மற்றும் உரம் உள்ளிட்டவை கடன் திட்டத்தின் ஊடாக கிடைக்கப் பெறுகின்றன.

கேள்வி : சர்வதேச நாணயத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதை காலம் தாழ்த்தியமைக்கான காரணம் என்ன?

பதில் : நான் நிதி அமைச்சராக பதவியேற்ற பின்னரே முதன் முதலாக சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதம் அனுப்பி வைத்தேன். அதற்கமையவே ஜூலையில் ஊழியர் மட்ட குழு நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளது.

கேள்வி : சர்வதேச நாணய நிதியத்மை முன்னரே நாடியிருக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளாரே?

பதில் : ஜனாதிபதி அவ்வாறு கூறவில்லை. சர்வதேச நாணய நிதியம் முன்னரே எமக்கு உதவியிருக்கலாம் என்று தான் கூறியுள்ளார். ஊழியர் மட்ட பேச்சுவார்த்தைகளில் மேலும் பல நிபந்தனைகள் விதிக்கப்படலாம். அவற்றை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கப்பெறும் உதவிகளும் நெருக்கடிகளை தீர்க்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனவே தான் சுற்றுலாத்துறை, வெளிநாட்டுப்பணியாளர் மற்றும் ஏற்றுமதி என்பவற்றின் மூலமான வருமானத்தை பெற நடவடிக்கை எடுத்தேன்.

வருடாந்தம் செல்வதைப் போன்று அமெரிக்கா செல்வேன்

கேள்வி : தற்போது அமெரிக்கா செல்ல தீர்மானித்துள்ளீர்களா?

பதில் : ஆம். நான் வருடா வருடம் அமெரிக்கா சென்று வருகின்றேன். எனது குடும்பத்தார் அங்குள்ளனர்.

ஏனையோருக்கு என்னை போல் பதவி விலக அதிகாரமில்லை

கேள்வி : ராஜபக்ஷாக்கள் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகவுள்ளது. இருவர் பதவி விலகியுள்ள போதிலும் , ஜனாதிபதி அதற்கு மறப்பு தெரிவித்துள்ளமை குறித்து ?

பதில் : நான் ஏனைய ராஜபக்ஷாக்களைப் போன்றவன் அல்ல. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 69 இலட்சம் விருப்பு வாக்குகளுடனும் , மஹிந்த ராஜபக்ஷ இரண்டரை இலட்சம் விருப்பு வாக்குகளுடனும் வெற்றி பெற்றனர். ஆனால் நான் மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவன் அல்ல. எனவே என்னைப் போன்று பதவி விலகும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. மக்கள் வழங்கி ஆணையை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.

ஏனைய தேசிய பட்டியல் உறுப்பினர்களும் பதவி விலக தயார்

கேள்வி : உங்களது இந்த பதவி விலகல் நிரந்தரமானதா?

பதில் : மக்கள் இதனை நிரந்தரமாக்கினால் அது அவ்வாறே இருக்கும். அவ்வாறின்றி மக்கள் மீண்டும் அழைத்தால் அதற்கும் தயார். மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அழைத்ததைப் போன்று என்னையும் அழைப்பர் என்று நான் எண்ணவில்லை. எவ்வாறிருப்பினும் பதவி விலகல் குறித்து எனக்கு எவ்வித கவலையும் இல்லை. பதவி விலகுமாறு எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை. மாறாக பதவி விலக வேண்டாம் என்ற கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டன. என்னைப் போன்று ஏனைய தேசிய பட்டியல் உறுப்பினர்களும் பதவி விலகி புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்கு தயாராகவே உள்ளனர்.

21 ஐ எதிர்க்கின்றேன்

கேள்வி : 21 ஆவது திருத்த்திற்கு பொதுஜன பெரமுன ஆதரவாக வாக்களிக்குமா?

பதில் : 21 ஐ தனிப்பட்ட ரீதியில் நான் எதிர்க்கின்றேன். எனினும் பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கப்படுவதை வரவேற்கின்றேன். சுயாதீன ஆணைக்குழு உள்ளிட்ட விடயங்களையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

உலகலாவிய ரீதியிலுள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்

கேள்வி : இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து?

பதில் : என்னை இலக்காகக் கொண்டு இதனை உள்ளடக்கியமையும் நான் பதவி விலகுவதற்கு ஒரு காரணமாகும். உலகின் 3 நாடுகளில் இரட்டை குடியுரிமையுடையோர் பிரதமர்களாகவும் உள்ளனர். உலகலாவிய ரீதியிலுள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை குடியுரிமை வழங்கப்பட வேண்டும். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்த நடைமுறை காணப்படுகிறது. நிறைவேற்றதிகார முறைமை நீக்கப்பட வேண்டும். எனினும் கட்சி ரீதியில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்படவில்லை. அத்தோடு தேர்தல் முறைமையிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

எந்தவொரு தேர்தலுக்கும் தயார்

கேள்வி : இனிவரும் தேர்தல்களில் போட்டியிடும் தீர்மானம் உள்ளதா?

பதில் : எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதற்கு பொதுஜன பெரமுன தயாராகவே உள்ளது.

மக்களும் பொறுப்பு கூற வேண்டும்

கேள்வி : நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு பொறுப்பு கூற வேண்டியது யார்?

பதில் : ஆரம்ப காலம் முதலே கடன் மேல் கடன் பெற்ற அனைவரும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.ஏதேனுமொரு வகையில் நானும் இதன் பங்காளியாகவுள்ளேன். அதற்கமைய அனைவரும் பொறுப்பு கூற வேண்டியவர்களே.

கேள்வி ; அவ்வாறெனில் சாதாரண மக்களும் பொறுப்பு கூற வேண்டும் என்கிறீர்களா?

பதில் : மக்களுக்கு நான் எந்த சந்தர்ப்பத்திலும் எதிர்பார்ப்புக்களை வழங்கவில்லை. அவர்களிடம் பந்தைக் கைமாற்றவும் இல்லை. எனினும் எம்மவர்களுக்கு அதிகாரத்தை வழற்கியமைககாக மக்களும் பொறுப்பு கூற வேண்டும்.

கேள்வி : நீங்கள் பதவி விலகியுள்ள நிலையில் தேசிய பட்டியல் உறுப்பினராக யார் நியமிக்கப்படுவார்?

பதில் : சிறந்த இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புக்களை வழங்க நாம் தயாராகவே உள்ளோம். அதற்கமைய கோட்டா கோ கம ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் தகுதியான எவரேனும் எனது இடத்திற்கு வர தயார் எனில் கட்சி அதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்

கேள்வி : உங்களுக்கு சூட்டப்பட்டுள்ள புதிய பெயர் சிறந்ததா?

பதில் :எவ்வாறான பெயர் சூட்டப்பட்டாலும் நான் யார் மீதும் கோபம் கொள்ளப்போவதில்லை. அந்தப் பாடலையே எனது தொலைபேசி அழைப்பிற்கான ஒலியாகவும் வைத்திருக்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right