ஜனாதிபதியின் கையில் ரிமோட் உள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கமாட்டோம் - சம்பிக்க 

By Vishnu

09 Jun, 2022 | 09:44 PM
image

(நா.தனுஜா)

நாட்டை முன்னிறுத்திய தமது எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்யாததன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இருப்பினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கைகளில் 'ரிமோட்' (கட்டுப்பாட்டுக்கருவி) இருக்கின்ற தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும், மாறாக தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வுகாணவேண்டும் என்று விரும்புகின்ற அனைத்துத்தரப்பினருடனும் இணைந்து தீர்வை நோக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதே தமது எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படப்போவதாக 08 ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்திருந்த நிலையில், எதிர்வருங்கால நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் 09 ஆம் திகதி வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நான் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் கொழும்பில் போட்டியிட்டுப் பாராளுமன்றத்திற்குத் தெரிவானேன்.

ஜனாதிபதித்தேர்தலில் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்ததை அடுத்து நானும் புதியதொரு கூட்டணி உருவாக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தேன். குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சி உருவாக்கப்பட்டபோது நானும் ஏனைய கூட்டணிக்கட்சிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரமே அதில் இணைந்துகொண்டோம். அதன்படி நாம் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி அப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டோம். ஜாதிக ஹெல உறுமய என்ற கட்சி பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் என்றும் கருத்து மற்றும் கொள்கை முரண்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் இருதரப்பினரும் சுயாதீனமாகச் செயற்படவேண்டும் என்றும் அவ்வொப்பந்தத்தில் மிகத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி என்பவற்றின் கொள்கைகளுக்கு அப்பால், நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்தியதும் நாட்டிற்குப் பொருத்தமானதுமான கட்சியொன்று உருவாகவேண்டும் என்ற எமது எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே நாம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தோம். இருப்பினும் அந்த எதிர்பார்ப்பு உரியவாறு பூர்த்திசெய்யப்படவில்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.

ஆகவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படப்போவதில்லை என்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியிலிருந்து விலகுவதாகவும் கடிதம் மூலம் அறிவித்திருக்கின்றோம். எதிர்வருங்காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகள் மற்றும் அதன் தீர்மானங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு அடுத்தகட்டத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.

 தற்போதைய சூழ்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான கொள்கையொன்றின்கீழ் பொதுச்செயற்திட்டமொன்றைத் தயாரித்துக்கொள்ளவேண்டும்.

அடுத்ததாக அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்கள் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கண்காணிப்புக்குழுக்களின் உறுப்பினர்களாகப் பிரிக்கப்பட்டு, அமைச்சு நடவடிக்கைகளுக்கு ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் தமது பங்களிப்பை வழங்கும் நிலை உருவாக்கப்படவேண்டும்.

மத்திய வங்கி, சுங்கத்திணைக்களம், மின்சார சபை உள்ளிட்ட அரச கட்டமைப்புக்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ போன்றவர்களுக்கு நெருங்கியவர்களன்றி உரியவாறான தகைமையுடைய பொருத்தமான நபர்களையே நியமிக்கவேண்டும்.

அடுத்ததாக பாராளுமன்றத்தேர்தலுக்கு முன்னதாக அவசரமாக மேற்கொள்ளப்படவேண்டிய ஜனநாயக மறுசீரமைப்புக்கள் தொடர்பில் அனைத்துத்தரப்பினரும் பொது இணக்கப்பாடொன்றுக்கு வரவேண்டும்.

 எனினும் தற்போது அத்தகைய பொது இணக்கப்பாடோ அல்லது முறையான செயற்திட்டமோ இல்லாத நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கைகளில் 'ரிமோட்' (கட்டுப்பாட்டுக்கருவி) இருக்கின்ற அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க நாம் எவ்வகையிலும் தயாரில்லை.

மாறாக தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வுகாணவேண்டும் என்று விரும்புகின்ற அனைத்துத்தரப்பினருடனும் இணைந்து தீர்வை நோக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right