இந்தியாவின் நன்கொடைகளை பெற்றுக்கொள்ளும் அரசு இந்திய வம்சாவளி மக்களை புறக்கணிக்கிறது - வடிவேல் சுரேஷ் 

By Vishnu

08 Jun, 2022 | 08:45 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

பதுளை மாவட்டத்தில் நிர்மாணிப்பதற்கு மதிப்பிடப்பட்டிருந்த 16 கலாசார நிலையங்களுக்குமான வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

இது தேசிய அநியாயம் என்பதுடன் மலையக மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாகும். அத்துடன் இந்திய அரசாங்கத்தின் நன்கொடைகளை பெற்றுக்கொள்ளும் அரசாங்கம் இந்திய வம்சாவளி மக்களை புறக்கணித்து வருகின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 08 ஆம் திகதி புதன்கிழமை இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது பதுளை மாவட்டத்தில் 16 கலாசார நிலையங்கள் நிர்மாணிப்பதற்கும் பணி நிறுத்தப்பட்டிருப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அளித் பதில் பொய்யானது என சுட்டிக்காட்டி தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

பதுளை மாவட்டத்தில் தோட்டப்புற பிரதேசங்களை உள்ளடக்கும் வகையில் 16 கலாசார நிலையங்களை நிர்மாணிப்பதற்காக 2019ஆம் ஆண்டில் அங்கீகாரம் வழங்கி, அதற்காக அன்று தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரான தற்போதைய பிரதமர் 100மில்லியன் ரூபா ஒதுக்கி இருந்தாார்.

இந்த 16 கலாசார நிலையங்களுக்குமான காணிகளை ஒதுக்கி, அதற்கு அடிக்கல் நாட்டி வேலை ஆரம்பிக்கப்பட்டது. அதற்கான காணிகளை நானே பெற்றுக்கொண்டேன்.

அதற்கான முற்பணமும் செலுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் ஏதோ ஒரு காரணத்துக்காக அந்த வேலைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

தோட்ட மக்களுக்கு இந்த கலாசாரம் தேவையில்லை என்றே அரச அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ இந்த வேலைத்திட்டத்தை நிறுத்தியது தேசிய குற்றமாகும். மக்களின் நிதி அநியாயமாக்கப்பட்டிருக்கின்றது.

மலையக மக்களுக்கு செய்திருக்கும் பாரிய துராேகமாகும். இந்த அநியாயத்தை ஏன் செய்தார்கள் என்பது தொடர்பில் சரியான பதிலை சபைக்கு தெரிவிக்கவேண்டும். இந்த கலாசார நிர்மாணம் தொடர்பாக அதிகாரிகள் பொய்யான தகவல்களை வழங்கி இருக்கின்றது.

 மலையக மக்களை தொடர்ந்தும் இந்த அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது. இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நன்கொடைகளை பெற்றுக்கொண்டு, இந்திய வம்சாவளி மக்களை புற க்கணிக்கின்றார்கள்.

அந்த மக்கள் இந்த நாட்டை நேசிப்பவர்கள். அவர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. அப்படியான மக்களை ஏன் வஞ்சிக்கின்றீர்கள் கொமிஷன் காரணமாகவே இந்த வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டிருக்கின்றது. இது பாரிய அநியாயமாகும் என்றார்.

அதற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளிக்கையில், அதிகாரிகள் வழங்கிய பதிலையே நான் சமர்ப்பிக்கின்றேன்.

இன.மத அடிப்படையில் நாங்கள் ஒருபோதும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டதில்லை. அத்துடன் அதிகாரிகள் இந்த வேலைத்திட்டத்தில் மோசடி செய்திருந்தால், அவர்களை கோப் குழுவுக்கு அழைத்து விசாரணை செய்ய முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right