அரசியலும் கல்வித் தகைமையும்

08 Jun, 2022 | 01:34 PM
image

கடந்த வாரம் கடும் மழையின் போது கம்பஹா மாவட்டத்தில் உள்ள பாடசாலையொன்றில் மாணவர்கள் மண்டபத்தின் கூரை கடுமையாக ஒழுகிக்கொண்டிருக்க குடையைப் பிடித்துக்கொண்டு க.பொ.த. சாதாரணதர பரீட்சையை எழுதிக்கொண்டிருப்பதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பதிவுசெய்யப்பட்டதை பலரும் பார்த்திருப்பீர்கள். மேசையில் தாள்கள் நனைந்தபடி கிடந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த முக்கியமான பரீட்சையை அந்த மாணவர்கள் எத்தகைய மனநிலையில் அன்று எழுதிக்கொண்டிருந்திருப்பார்கள் என்று நினைத்துப்பாருங்கள். படங்களை பார்க்கும்போது பெரும் பரிதாபமாக இருந்தது.பரீட்சை எழுதிய மாணவர்கள் அந்த படங்களை அனேகமாக எடுத்திருக்கமுடியாது.

அங்கு கடமையில் இருந்த மேற்பார்வையாளர்கள் அல்லது பாடசாலை அதிகாரிகள்தான் அவற்றை எடுத்து சமூக ஊடகங்களில் பரவச்செய்திருக்கவேண்டும். அது இப்போது பிரச்சினையாகி பரீட்சை ஆணையாளர் அந்த பாடசாலை அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். அந்த மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்கு வேறு இடங்களை அதிபர் நிச்சயம் ஏற்பாடு செய்திருக்கவேண்டும்.

கம்பஹா மாவட்டம் ஒரு பின்தங்கிய மாவட்டம் அல்ல.கொழும்புக்கு அடுத்ததாக முன்னேறிய ஒரு மாவட்டமாகும். அங்கு பாடசாலை மண்டபங்களின் நிலை இந்தளவு பரிதாபகரமாக இருக்கிறதென்றால் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளின் நிலையை ஒரு கணம் எண்ணிப்பாருங்கள்.

டுவிட்டர் சமூக ஊடகத்தில் இந்த படங்களைப் பார்த்த முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஷ உடனடியாக ஒரு பதிவைச் செய்திருந்தார்.

“பல பாடசாலைகள் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்டவையாக இருக்கின்றன.ஆனால்,பூரணத்துவம் வாய்ந்த கூரையொன்று இல்லாமல் இருப்பது ஏற்றபுடையதல்ல.ஒரு தேசம் என்ற வகையில் எமது முன்னுரிமைகளை மறுமதிப்பீடு செய்து எமது சிறார்களின் சிறப்பான எதிர்காலத்தை நாம் உறுதிசெய்யவேண்டும்.கல்விச் சீர்திருத்தம் மாத்திரமல்ல, அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தமும் எமக்கு இன்று அவசியமாகிறது” என்று அவர் அதில் கூறியிருந்தார்.

அவரது பதிவுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் பிரதிபலிப்பை வெளியிட்டார்கள்.அதில் ஒருவர், “வேற்றுக்கிரகத்தில் இருந்து நேற்றைய தினம்தான் நீங்கள் இலங்கையில் வந்து தரையிறங்கினீர்களா?” என்று அவரிடம் நையாண்டியாக கேள்வியெழுப்பியதையும் காணக்கூடியதாக இருந்தது.

தற்போது லண்டனில் இருக்கும் இலங்கையின் மூத்த பத்திரிகையாளரான நெவில் டி சில்வா கொழும்பு ஆங்கில வாரப்பத்திரிகையொன்றில் தனது பத்தியில் நாமலின் பதிவு பற்றி குறிப்பிட்டிருந்தார்.அதாவது சில பாடசாலைகளுக்கு பூரணத்துவம்வாய்ந்த கூரை இல்லையென்று நாமல் கவலைப்படுகிறார்.கூரை மாத்திரமல்ல வேறு பிரச்சினைகளும் இருக்கின்றன.

தனது தந்தையாரும் சிறிய தந்தையாரும் நிதியமைச்சர்களாக சமர்ப்பித்த கடந்த இரு வரவு-செலவுத்திட்டங்களையும் அவர் உன்னிப்பாக அவதானிப்பாரேயானால் பெருமளவு நிதியொதுக்கீடுகள் எங்கு போய்ச்சேர்ந்தன என்பதை விளங்கிக்கொள்ளக்கூடியதாயிருக்கும் என்று டி சில்வா சுட்டிக்காட்டினார்.

நாமலை தவிர, வேறு அரசியல்வாதிகள் ஒரு கையால் குடைபிடித்துக்கொண்டு மறுகையால் பரீட்சை எழுதிய இந்த மாணவர்களின் அவலம் குறித்து கவலை வெளியிட்டதை ஊடகங்களில் காணக்கூடியதாக இருக்கவில்லை.

அதைப் பற்றியும் டி சில்வா குறிப்பிட்டிருந்தார்.அதாவது “எமது மக்கள் பிரதிநிதிகளில் சிலருக்கு அதுவும் குறிப்பாக பொதுப்பரீட்சைகளுக்கு ஒருபோதுமே தோற்றாதவர்களுக்கு இந்த மாணவர்களின் பரிதாபநிலை பெரிய பிரச்சினையாக தோன்றாமல் இருக்கலாம்” என்று அவர் எழுதியிருந்தார்.

பரீட்சைகளின் அருமை அரசியல்வாதிகளில் பலருக்கு புரியாது என்பதே அவரின் ஆதங்கமாக இருக்கவேண்டும்.பல்கலைக்கழக கல்வியாளர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் பத்திரிகையாளர் மகாநாடொன்றில் தற்போதைய எமது 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 95 பேர் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என்று கூறியதையும் சில்வா மேற்கோள் காட்டினார்.

அரசியல்வாதிகளில் அதிகப்பெரும்பான்மையானவர்களின் பொறுப்பற்ற போக்குகள் குறித்து விமர்சிக்கும்போது பலரும் அவர்களின் கல்வித்தரத்தின் நிலை பற்றி எள்ளிநகையாடுவது வழமையாகப் போய்விட்டது. அதற்கு அவர்களைத் தவிர வேறு யாரையும் குறைகூற முடியாது.ஏனென்றால் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுகின்ற விடயத்தை புரிந்துகொள்ளாமல் எதற்கு கை உயர்த்துகிறோம் என்று தெரியாமல் சிலர் உயர்த்திவிட்டு வருகிறார்கள்.

மக்கள் பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்படும் அரசியல்வாதிகளின் கல்வித்தகைமை பற்றிய சர்ச்சை நீண்டகாலமாகவே இருந்துவருகிறது.தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்திக் கூட அவர்களின் கல்வி தகைமைகளை அறிந்துகொள்வது சிரமமாகும்.

பாராளுமன்ற உறுப்பினர்களில் சகலரையும் ஒரே மாதிரி எடை போடுவதாக இதை நோக்கலாகாது. இன்றைய பாராளுமன்றத்தில் இருப்பவர்களில் 94 பேர் சாதாரணதர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என்றும் 25 பேரே பட்டம் பெற்றவர்கள் என்றும் அண்மையில் பத்திரிகையில் வெளியான குறிப்பில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது.

அரசியல்வாதிகளின் கல்வித்தகைமை பற்றி பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பப்பட்டபோது மக்களின் தீர்ப்பு அவமதிக்கப்படுவதாக அமைச்சர்களே ஆவேசமடைந்துபேசிய சில சந்தர்ப்பங்கள் உண்டு.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க அரசியல்வாதிகளின் கல்வித்தகைமை குறித்து முன்னைய பாராளுமன்றம் ஒன்றில் கேள்வி கிளப்பியபோது அதற்கு தெளிவான பதிலைக் கூறுவதைத் தவிர்த்து அமைச்சர்கள் சிலர் இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவும் உலகின் முதல் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவும் பெரிய கல்வித்தகைமைகளைக் கொண்டவர்களல்ல என்றாலும் நாட்டை சிறப்பாக நிருவகித்தனர் என்று மழுப்பலாக பதில் கூறினர்.

கல்வித்தகைமைகளை வைத்து மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில்லை எனாறாலும் கூட கல்வித்தகைமையுடையவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பது ஆரோக்கியமானதல்லவா? இதை ஜீரணிக்கமுடியாமல் பாராளுமன்றத்தில் எமது அரசியல்வாதிகள் தங்களை ஒரு பொருந்தாத்தன்மைக்கு உட்படுத்தி ஆத்திரப்படுவார்கள்.

அதேவேளை படித்தமேதைகள் ஆட்சியதிகாரத்தில் இருந்தபோது நாடு ஒன்றும் சிறப்பாக நிருவகிக்கப்பட்டதாகவோ மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாகவோ இல்லை என்ற உண்மையும் எம்முன்னால் விரிந்துகிடக்கிறது.

சேர்.பொன்னம்பலம் இராமநாதன் சர்வஜனவாக்குரிமையை எதிர்த்தார் என்று கூறப்படுகிறது.படித்தவர்களுக்கு மாத்திரமே வாக்குரிமை வழங்கப்படவேண்டும் அல்லாவிட்டால் பாராளுமன்றத்தில் காடையர்கூட்டம் தான் ஆட்சிசெய்யும் என்று அவர் கூறியதாக அறிகிறோம்.அவரின் நிலைப்பாடு ஜனநாயக விரோதமானதாக தோன்றலாம்.

ஆனால் சுமார் 90 வருடங்களாக சர்வஜனவாக்குரிமையை அனுபவிக்கும் இலங்கையர்களாகிய எம்மால் தெரிவுசெய்யப்பட்டுவருகின்ற பாராளுமன்றங்களின் தரத்தின் வீழ்ச்சியை நோக்கும்போது சேர் பொன். இராமநாதனில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கவேண்டியிருக்கிறது.

போதைப்பொருளுக்கும் கசிப்புக்கும் அடிமையானவர்கள் பின்னர் அவற்றை விற்பனை செய்வதை தொழிலாகக்கொண்டு பெரும்பணம் சம்பாதித்து இப்போது பாராளுமன்றத்திற்குள்ளும் பிரவேசித்துவிட்டார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஒரு தடவை பாடசாலை மாணவர்கள் மத்தியில் உரையாற்றியபோது கூறியது நினைவுக்கு வருகிறது.

குற்றச்செயல்களுக்காக கைதுசெய்யப்படுமபோதுதான் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை நாம் முதலில் அறிகிறோம்.அவர்கள் பாராளுமன்றத்தில் இருப்பதே எமக்கு தெரிவதில்லை.

எமது தெற்காசிய நாடுகளில் ஒன்றான பூட்டானில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் பட்டதாரிகளாக, குறைந்தபட்சம் இளங்கலைமாணியாக இருக்கவேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருக்கிறது. பூட்டானில் உள்ள பல்கலைக்கழகங்களில் அல்லது அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் அல்லது அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பெற்றதாக இப்பட்டங்கள் இருக்கவேண்டும். பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் இத்தகைய சட்டத்தை இயற்றுவதில் அக்கறை காட்டவில்லை.

உண்மையில் உலகில் எந்தவிதமான கல்வித்தகைமையும் இல்லாமல் உயர்பதவிகளை அடையக்கூடிய ஒரே துறையாக அரசியலே விளங்குகிறது.பழிபாவத்துக்கு அஞ்சாமல் பாதகங்கள் செய்பவர்கள் பலர் இன்று அரசியலில் கோலோச்சுகிறார்கள்.

அலுவலக சிற்றூழியராக கடைநிலை உத்தியோகத்துக்கு கூட க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்திருக்கவேண்டியது அவசியம். ஆனால் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்பவர்களிடம் குறைந்தபட்சம் பாலர் பாடசாலைக்குத் தானும் சென்றிருக்கவேண்டும் என்று கேட்கப்படுவதில்லையே.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right