(ரொபட் அன்டனி) 

தேசிய அரசாங்கத்தில் பங்கெடுத்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு சம உரிமை உள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க மதிக்கவேண்டியது அவசியமாகும்.   தேசிய அரசாங்கத்தின்  நீடிப்புக்கு இது உதவியாக இருக்கும்.   தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே நாங்கள்  அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ளோம் என்று   சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும்  இராஜாங்க அமைச்சருமான  டிலான் பெரெரா தெரிவித்தார். 

தேசிய அரசாங்கத்துக்குள் பிரச்சினைகள் இருப்பதாக  கூறப்பட்டாலும் அரசாங்கம்    சிதறிப்போகாது. ஒருசிலர் எதிர்பார்ப்பதைப்போன்று  தேசிய அரசாங்கம் கவிழ்ந்துவிடாது என்றும்  டிலான் பெரெரா குறிப்பிட்டார்.  

தேசிய அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நெருக்கடிகள்  தொடர்பில் வினவியபோதே அமைச்சர் இநத விடயத்தை குறிப்பிட்டார்.   

அவர் இந்த விடயம் குறித்து  மேலும் குறிப்பிடுகையில்  

ஒருசிலர் விபரிப்பதைப்போன்று தேசிய அரசாங்கத்துக்குள் பாரிய பிரச்சினைகள் இல்லை.  பொதுவாக கடந்த காலங்களில் அரசாங்கத்தில் காணப்பட்ட  பிரச்சினைகளே  இந்த அரசாங்கத்திலும் காணப்படுகின்றன. 

ஆனால் தற்போது இரண்டு கட்சிகள்  அரசாங்கத்தை நடத்துவதால்     இவ்வாறான பிரச்சினைகள்  மிகப்பெரிய பிரச்சினைகள் போன்று காணப்படுகின்றன.   ஆனால் அதற்காக  அரசாங்கம்  கவிழ்ந்துவிடும் என்று யாரும் எதிர்பார்க்கக்கூடாது. 

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே நாங்கள்  அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ளோம்.   நீண்டகாலத்துக்கு பின்னர்  தேசிய பி்ரச்சினைக்கு  அதிகாரப் பகிர்வு  ஊடாக தீர்வுகாண்பதற்கு பாரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.  அந்த சந்தர்ப்பத்தை நாங்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.  

இதேவளை   ஒரு விடயத்தை  தெளிவாக குறிப்பிடுகின்றோம்.    அதாவது  தேசிய அரசாங்கத்தில் பங்கெடுத்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு சம உரிமை உள்ளதாக பிரதமர் ரணில் மதிக்கவேண்டியது அவசியமாகும்.   தேசிய அரசாங்கத்தின்  நீடிப்புக்கு இது உதவியாக இருக்கும்.   

அதாவது சிறிலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் வெறுமனே பங்கெடுக்கவில்லை.     இந்த அரசாங்கத்தில் எங்களுக்கும் சம உரிமை இருக்கின்றது.   அந்த சம உரி்மையை  ஐக்கிய தேசிய கட்சியும்   பிரதமரும் மதிக்கவேண்டும்.  

தொடர்ச்சியாக சுதந்திரக் கட்சியை   மதிக்காமல் பயணிக்க முடியாது.  எனினும்  ஜனாதிபதி   தற்போது  சிகப்பு அட்டையை காட்ட நேரிடும் என்று  கூறியுள்ளார். இதனை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகும்  .  

மேலும்  வடக்கில் இடம்பெற்ற   அசம்பாவிதத்தை  யாரும் இனவாத கண்கொண்டு பார்க்கக்கூடாது.  வடக்கில் மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராக   போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும்  ஹர்த்தாலும் நடத்தப்படவேண்டும். 

ஆனால் அந்த சம்பவத்தை  இனவாத கண்கொண்டு பார்க்கக்கூடாது.    அவ்வாறான சம்பவங்கள் தெற்கிலும் இடம்பெறுகின்றன.     எனினும் துரதிஷ்டவசமாக வடக்கின் சில அரசியல்வாதிகள் இந்த   அசம்பாவிதத்தை  இனவாதக் கண்கொண்டு பார்க்க முற்படுகின்றார்கள்.  இது துரதிஷ்டவசமானதாகும் என்றார்.