எனது புண்ணியத்தாலேயே ரணில் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்துள்ளார் : அவர் 3 வேளையும் உணவு உட்கொள்ள வேண்டும் - பொன்சேகா 

By T Yuwaraj

07 Jun, 2022 | 09:59 PM
image

(இராஜதுரை ஹஷான் ,எம்.ஆர்.எம்.வசீம்)

எனது புண்ணியத்தினாலேயே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க  இன்று பிரதமர் ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் அரசியலமைப்பு திருத்தம் குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது.

Articles Tagged Under: சரத் பொன்சேகா | Virakesari.lk

அரசியலமைப்பு திருத்தம்  மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைளுக்கு தீர்வாகாது,மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் கலாசார மாற்றத்தை இந்த பாராளுமன்றில் எதிர்பார்க்க முடியாது ஏனெனில் 50 சதவீதமானோர் முறையற்றவர்களாகவே உள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது நாட்டின் நடப்பு நிலைவரம் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில் 

நாட்டின் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து செல்கிறதே தவிர பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறும் என்பதற்கான சாத்தியம் தென்படவில்லை.பிற தரப்பினரிடமிருந்து கடன் பெறுவதை தற்போது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஒரு  தரப்பினர் கருதுகிறார்கள்.பில்லியன் கணக்கில் கடன் கிடைத்தவுடன் அதனை பெருமையாக குறிப்பிடுவதை கேட்டுக்கொண்டிருக்கையில் கவலையாகவும்,வெட்கமாகவும் உள்ளது.

சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் தற்போது பரவலாக பேசப்படுகிறது.நாணய நிதியத்தின் வரி அதிகரிப்பு கொள்கையினை செயற்படுத்தியே பொருளாதார நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும். தூரநோக்குடன் சிந்திக்கையில் அதுவும் சரி என்றே தென்படுகிறது.நாணய பறிமாற்றத்தின் ஊடாக நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதை உறுதியாக நம்புகிறேன்.

அரசியல்வாதிகள்,அரச சேவையாளர்களின் முறையற்ற செயற்பாடுகள் தற்போதைய நிலைக்கு மூல காரணியாக உள்ளது.ஊழல் மோசடி நாட்டில் வியாபித்துள்ளதை தடுக்க  எவ்வித நடவடிக்கையும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.அரச சேவையில் அரசியல்வாதிகளின் தலையீடு இன்றும் உள்ளது.

மூன்று வேளை உணவு உட்கொள்ளலை இரண்டு வேளையாக மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளமை கவலைக்குரியது.பிரதமர் மூன்று வேளையும் உணவு உட்கொள்ள வேண்டும் இல்லாவிடின் எதிர்வரும் காலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.நாட்டில் பெரும்பாலானவர்கள் இரண்டு வேளை உணவை தான் உட்கொள்கிறார்கள் என்பதை பிரதமர் அறியவில்லை.பிரதமரின் கருத்துப்படி இவர்கள் ஒரு நாளைக்கு ஒருவேளை உணவை தான் உட்கொள்ள வேண்டும்.

விவசாயிகளை பலப்படுத்தி தேசிய விவசாயத்தை மேம்படுத்த அரசாங்கம் துரிதகரமான திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.வெளிநாடுகளில் இருந்து உணவு பொருட்களை இறக்குமதி செய்து நாட்டு மக்களின்உணவு  தேவையை ஒருபோதும்  பூர்த்தி செய்ய முடியாது.விவசாயத்தை மேம்படுத்த திட்டங்களை செயற்படுத்தாமல்,உணவு உட்கொள்ளலை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தியாவில் இருந்து ஒரு பில்லியன் கிடைக்கப் பெற்றதும்  புகழ்பாடபடுகிறது.ஒருவாரத்திற்கு பின்னர் பிறிதொரு தரப்பினரிடமிருந்து ஒரு பில்லியன் பெற அவதானம் செலுத்தப்படுகிறது.நாடு தற்போது நாளாந்த சுற்று முறையில் செயற்படுகிறது.எந்த நாட்டில் யாசகம் பெற்று முன்னோக்கி  செல்லும் தன்மையில் அரசாங்கம் செயற்படுகிறது.

எனது புண்ணியத்தினால் தான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க  பிரதமர் ஆசனத்தில் தற்போது அமர்ந்துள்ளார்.பிரதமராக இவர் பதவியேற்க மூன்று மணித்தியாலங்களுக்கு  முன்னர் ஜனாதிபதி என்னிடம் குறிப்பிட்டார் பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு, அப்போது நான் நான்கு நிபந்தனைகளை விதித்தேன், நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவித்தால் பிரதமர்பதவியை ஏற்க தயார் என குறிப்பிட்டேன்.

மக்களின் உயிர்வாழும் தரம் தற்போது இல்லாமல் போய்விட்டது.வாழ்க்கை செலவு நாளாந்தம் உயர்வடைகிறது.எரிவாயு தற்போது ஆடம்பர பொருளாகி விட்டது.அதிக விலைக்கு வாங்கும் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் தரம் குறைவடைந்துள்ளது.

சொந்த வீடு வழங்குவதாக குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தில் மக்கள் தமது உழைப்பில் கூட வீடு வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.நாட்டில் சட்டம் முறையாக செயற்படுவதில்லை.பாதாள குழுவினரது செயற்பாடு பகிரங்கமாக இடம்பெறுகிறது.மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள்.

நாட்டின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணும் அமைச்சரவையை அரசாங்கம் நியமிக்கவில்லை.பல மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் அமைச்சரவையில் உள்ளார்கள்.காலையில் இருந்த இரவு வரை களியாட்ட விடுதியில் பொழுதை கழித்தவர்கள் அமைச்சரவையின் உறுப்பினர்களாக உள்ளார்கள்.ஆகவே அரசாங்கம் தவறை திருத்திக்கொள்ள வேண்டும்.அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்  நிறைவுப் பெற்றுள்ளது என அரசாங்கம் குறிப்பிடுகிறது.மக்கள் மனங்களில் போராட்டம் உள்ளது.போராட்டத்திற்கு ஒட்டுமொத்த மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

 நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ள  போது அரசியமைப்பு திருத்தம் குறித்து தற்போது அவதானம் செலுத்தப்படுகிறது.திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நிறுவன மட்டத்தில் மாற்றங்கள் ஏற்படும்.இதனால் மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா,நாட்டு மக்கள் கோரும் அரசியல் கலாசார மாற்றத்தை இந்த பாராளுமன்றில் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது,ஏனெனில் 50 சதவீதமானவர்கள் முறையற்ற வியாபாரிகளாகவும்,மோசடியாளர்களாகவும் தவறான அரசியல் கலாசார பின்னணியை கொண்டவர்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right