வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களால் அனுப்பப்படும் பணம் அநாவசிய செலவுகளுக்காக பயன்படுத்தப்பட மாட்டாது - அரசாங்கம் உறுதி

By Vishnu

07 Jun, 2022 | 02:58 PM
image

(எம்.மனோசித்ரா)

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பணம் அநாவசிய செலவுகளுக்காக பயன்படுத்தப்படா மாட்டாது என்று உறுதியளிக்கின்றோம்.

இவ்வாறு அனுப்பப்படும் பணம் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் கொள்வனவிற்காகவே பயன்படுத்தப்படும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு 07 ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பணம் உரிய முறையில் பயன்படுத்தப்படுமா என்ற சந்தேகம் அவர்கள் மத்தியில் காணப்படுகிறது.

இந்த பணத்தில் இரும்பு கம்பிகள் கொள்வனவு செய்யப்படுமா அல்லது உலங்கு வானூர்திகளுக்கான எரிபொருள் பெற்றுக் கொள்ளப்படுமா போன்ற சந்தேகங்கள் காணப்படுகின்றமை இயல்பானதாகும்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. மாறாக மக்களுக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கே முன்னுரிமையளிக்கப்படும்.

உலக உணவு தட்டுப்பாடு மாத்திரமின்றி விவசாயத்துறை தொடர்பில் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களும் இந்த நெருக்களில் தாக்கம் செலுத்துகின்றன என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

எவ்வாறிருப்பினும் தற்போது நாட்டை நெருக்கடிகளிலிருந்து மீளக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

தோல்வியடைந்தவனாக வெளியேற மாட்டேன் எனக் கூறியதிலிருந்து தான் தோல்வியடைந்துள்ளமையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதற்காக மருந்துகள் , உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இன்றி மக்கள் இறக்கும் வரை வெளிநாடு வாழ் இலங்கையர்கள் பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றார்களா?

ராஜபக்ஷாக்கள் வெளியேறும் வரை நாட்டுக்கு பணம் அனுப்பப் போவதில்லை என்று வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் கூறுவார்களாயின் இவ்வாறான நிலைமையே ஏற்படும்.

மக்களின் உயிர் வாழ்வதற்கான உரிமைக்கே முன்னுரிமையளிக்க வேண்டும். இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right