'தோல்வியடைந்தவராக வெளியேற மாட்டேன்' என்ற ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் விளக்கம்

By Vishnu

07 Jun, 2022 | 02:53 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது இலகுவான விடயமல்ல. எவ்வாறிருப்பினும் அந்த சவாலை ஏற்று நாட்டில் முன்னர் காணப்பட்டதைப் போன்று வழமையான சூழலை ஏற்படுத்தாமல் பதவி விலகப் போவதில்லை என்பதையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

சர்வதேச ஊடகமான புலும்பேர்க்கிற்கு வழங்கிய நேர்காணலில், 'தோல்வியடைந்தவராக வெளியேற மாட்டேன்' என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

அவரது இந்த நிலைப்பாடு தொடர்பில் 07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,

எந்தவொரு நாட்டிலும் ஆட்சியாளர்களினால் வெற்றி கொள்ளக் கூடியதும் , வெற்றி கொள்ள முடியாததும் என இரு காரணிகள் உள்ளன.

கொவிட் தொற்றினால் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியே ஜனாதிபதியின் தோல்விக்கான காரணியாக அமைந்தது.

உற்பத்திகள் குறைவடைந்ததையடுத்து எமது பொருளாதாரம் மறை பெருமானத்தில் 3 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. இது அவரால் கட்டுப்படுத்தப்படக் கூடிய விடயம் அல்ல.

இதன் காரணமாக வெளிநாட்டு கடன்களை மீள செலுத்த முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. எனவே தான் கடன்மீள் செலுத்தல் காலத்தில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

கடன் மீள் செலுத்தலை மறுசீரமைத்தல் என்பது சாதாரண விடயமல்ல. வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளைக் கூடிய பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

எனவே தான் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பினைப் பெற்று இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.

அதற்கமையவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நாட்டை வழமைக்கு கொண்டு வராமல் தான் பதவி விலகப் போவதில்லை என்பதையே அவர் தெரிவித்துள்ளார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right