இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் இடைக்­கால நிர்­வாகக் குழு உறுப்­பி­ன­ராக விளை­யாட்­டுத்­துறை அமைச்சின் மேல­திக செய­லாளர் சமன் பண்­டா­ரவை நிய­மிப்­ப­தற்கு விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தீர்­மா­னித்­துள்ளார்.


இந்த நிய­ம­னத்தின் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்­திற்கும் விளை­யாட்­டுத்­துறை அமைச்­சுக்கும் இடை­யி­லான உற­வு­களை ஏற்­ப­டுத்த எண்­ணி­யுள்­ள­தாக விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தெரி­வித்தார்.


விளை­யாட்­டுத்­துறை அமைச்சின் கேட்­போர்­கூ­டத்தில் நேற்­று­முன்­தினம் மாலை நடை­பெற்ற செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போதே அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.


அவர் அங்கு மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

 ‘‘முன்னாள் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் நவீன் திசா­நா­யக்­க­வினால் நிய­மிக்­கப்­பட்ட இலங்கை கிரிக்கெட் இடைக்­கால நிர்­வாக சபைக்குப் பதி­லாக புதி­ய­தொரு இடைக்­கால சபையை என்னால் நிய­மித்­தி­ருக்க முடியும்.

எனினும் இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் நிர்­வா­கிகள் தெரி­வுக்­கான தேர்தல் நெருங்­கு­வதால் பல பிரச்­சி­னைகள் உரு­வாக வாய்ப்­பி­ருந்­ததால் இந்த எண்­ணத்தைக் கைவிட்டேன். மேலும் இடைக்­கால நிர்­வாக சபை உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­பட்­ட­போது விளை­யாட்­டுத்­துறை அமைச்சு அதி­காரி ஒருவர் நிய­மிக்­கப்­ப­டா­மை பெருங்­கு­றை­யா­கவே நான் கரு­து­கின்றேன்.

இதன் கார­ண­மாக கிரிக்கெட் இடைக்­கால சபைக்கும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கும் இடையில் எவ்வித உறவுகளும் இல்லாமல் போனது டன் பிரச்சினைகளே வலுக்கத் தொடங்கின’’ என அமைச்சர் தெரிவித்தார்.