வாகன கொள்வனவு நிறுத்தப்பட்டும் 2021 இல் அதிகரித்த இறக்குமதி செலவு

By Digital Desk 5

06 Jun, 2022 | 12:45 PM
image

(ரொபட் அன்டனி)

2021 ஆம் ஆண்டு நிலை 

       

டொலர் வந்த மூலங்கள்                        மில். டொலர்கள்

  • ஏற்றுமதி வருமானம்                       - 12502
  • சுற்றுலா டொலர் வருகை               - 267
  • தொழிலாளர் பணவனுப்பல்         - 5491
  • பிணைமுறி                                        - 17
  • நீண்டகால கடன்                              - 2418
  • வெளிநாட்டு முதலீடு                       - 567
  • இறக்குமதி செலவு                            - 20637

இலங்கையில் தற்போது இந்த டொலர் பற்றாக்குறை டொலர்  நெருக்கடி காரணமாக மக்கள் எதிர்கொண்டு வருகின்ற பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்து தீவிரமடைந்து செல்கின்றன.

எரிபொருள் எரிவாயுவுக்கான வரிசைகள் மற்றும்   அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பு உணவுப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பு, மின்சார வெட்டு  உள்ளிட்ட கடுமையான நெருக்கடிகள் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கின்றன. 

அதேபோன்று ஒக்டோபர் மாதமளவில் பாரியதொரு உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டு இருக்கிறது. 

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு மிகவும் ஒரு நெருக்கடியான காலப்பகுதியாக இலங்கைக்கு அமைந்திருக்கின்றது.  இறக்குமதி செலவு அதிகரித்து காணப்படுவதுடன் ஏற்றுமதி வருமானம் அந்தளவு உயர்வை காட்டவில்லை. 

அதேபோன்று ஏனைய வருமானம் மூலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  அதாவது உள்நாட்டில் அரச வருமானமும் குறைவடைந்துள்ளதுடன்   டொலர் வருகையும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு இ  வெளிநாட்டு வர்த்தகம் எந்த அளவில் இயங்கியிருக்கிறது என்பதை பார்க்க வேண்டிய தேவை காணப்படுகிறது.

2021 இல் ஏற்றுமதி இறக்குமதி நிலை 

நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டில் முழுமையாக வாகன இறக்குமதி தடை செய்யப்பட்ட நிலையிலும் கூட   இறக்குமதி செலவானது 28.5 வீதத்தால் அதிகரித்திருக்கிறது.

அதாவது 2021 ஆம் ஆண்டில் இறக்குமதி செலவு 20.6 பில்லியன் டொலர்களாக காணப்படுகிறது.  அதேபோன்று ஏற்றுமதி வருமானம்  12.5 பில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.   

அதன் அடிப்படையில் 2021ஆம் ஆண்டுக்கான வர்த்தக பற்றாக்குறையானது சுமார் 8 பில்லியன் டொலர்களாக பதிவாகி இருக்கின்றன.   

இதனை நிவர்த்திப்பதற்கான மூலங்கள் சாதகமாக அமையவில்லை. சுற்றுலாத்துறை ஊடாக 267 மில்லியன் டொலர் வருகையும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் ஊடாக 5.4 பில்லியன் டொலர்களும் இலங்கைக்கு வந்திருக்கின்றன. 

அதேபோன்று இலங்கைக்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகளாக 567 மில்லியன் டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.  நீண்ட கால கடன்கள் என்ற அடிப்படையில் 2.4 பில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வந்துள்ளன.          

இறக்குமதி செலவு அதிகரிப்பு 

இந்நிலையில் 2021  ஆம் ஆண்டில்   இறக்குமதி செலவு  செலவானது 20.5 பில்லியன் டொலர்களாக பதிவாகியிருக்கின்றது. 2020 ஆம் ஆண்டில் 16 பில்லியன் டொலர்கள் இறக்குமதிக்காக செலவாகியது.   

எனினும் 2021 ஆம் ஆண்டில் அது 20.5 பில்லியன்களை    தாண்டி இருக்கின்றது.  2019 ஆம் ஆண்டில் 20 பில்லியன் டொலர்கள் இறக்குமதி செலவாக பதிவாகி இருந்தது.

அந்த வருடத்தில் வாகன இறக்குமதி மேற்கொள்ளப்பட்டது.  2021  ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டிருந்த நிலையிலும் இறக்குமதி செலவு அதிகரித்திருக்கின்றது. 

2021 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களுக்காக 1.6 மில்லியன் டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளன.  அதேபோன்று அதில் முக்கியமாக பால்மா    உணவுப் பொருட்களுக்காக 317 மில்லியன் டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளன. 

மரக்கறி வகை இறக்குமதிக்காக 384 மில்லியன் டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளன.  அதேபோன்று எரிபொருளுக்காக 2021 ஆம் ஆண்டில்   3.7 பில்லியன் டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளன.   

ஆடை கைத்தொழிலுக்கான மூலப்பொருட்கள் இறக்குமதிக்காக 3 பில்லியன் டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளன.  கட்டிடப் பொருட்கள் இறக்குமதிக்காக 1.2  பில்லியன் டொலர்களும் இயந்திரம் மற்றும் கருவிகள் இறக்குமதிக்காக  2.8 பில்லியன் டொலர்களும் போக்குவரத்து கருவிகளாக   400 மில்லியன் டொலர்களும் செலவு செய்யப் பட்டுள்ளன.

இதில் பார்க்கும்போது இலங்கை ஒரு சிறந்த வளம் உள்ள நாடு என்ற வகையில் பால்மா உற்பத்தியை இலங்கையில் மேற்கொள்ள முடியும். 

அதேபோன்று மரக்கறிகளை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியும்.  கடல் உணவுகளை இலங்கையில் பெற்றுக்கொள்ளமுடியும். 

சீனியை இலங்கையில் உற்பத்தி செய்யமுடியும்.  இவற்றை கொள்வனவு செய்வதற்கு இறக்குமதி செய்வதற்கு இந்தளவு தூரம் டொலர் செலவு செய்யப்படுகின்றமை ஒரு துரதிர்ஷ்டவசமான நிலைமையாக காணப்படுகின்றது. 

இதனூடாக உள்நாட்டில் முடியுமானவரை உற்பத்தியை  அதிகரிக்க வேண்டிய  அவசியம் உணர்த்தப்படுகிறது. இது தொடர்பாக  தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். 

ஏற்றுமதி வருமானம் 

ஏற்றுமதி வருமானத்தை பொறுத்தவரையில் 2021 ஆம் ஆண்டில் 12.5  பில்லியன் டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.    2020 ஆம் ஆண்டில் 10 பில்லியன் டொலர்களே கிடைத்தன.  அந்தவகையில் ஏற்றுமதி வருமானத்தில் ஒரு அதிகரிப்பு ஏற்பட்டு இருக்கின்றது. 

முக்கியமாக ஏற்றுமதி வருமானம் என்று கூறும்போது ஆடைக் கைத்தொழில் ஊடாக 5.4 பில்லியன் டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளன. 

அதேபோன்று ரப்பர் உற்பத்திகள் ஊடாக ஒரு பில்லியன் டொலரும்   தேயிலை உற்பத்திகள்  ஊடாக 1.3 பில்லியன் டொலர்களும் கிடைத்துள்ளன. 

அதேபோன்று தெங்கு உற்பத்திகள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்திகள் ஊடாகவும் இலங்கைக்கு டொலர் வருமானம் கிடைத்திருக்கிறது. 

இதில் முக்கியமாக ஆடைக் கைத்தொழில் துறையில் 5.4 பில்லியன் டொலர்கள் இலங்கை கிடைத்தாலும் அதன் மூலப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக கிட்டத்தட்ட மூன்று பில்லியன் டொலர்கள் செலவாகும் என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.  

இந்நிலையில் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கான நீண்டகால திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.  முக்கியமாக   ஏற்றுமதி உற்பத்திகளை அதிகரிக்க வேலைத்திட்டங்கள் அவசியமாகும்.   இது தொடர்பாக அரசாங்கம் மிக விரைவாக கவனம் செலுத்துவது முக்கியமாகும்.   

இலங்கையர்கள் அனுப்பும் 

டொலர்களில் வீழ்ச்சி 

அதேபோன்று வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் அனுப்புகின்ற டொலர்களில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது.   

2020ஆம் ஆண்டில் 7  பில்லியன் டொலர்கள் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பப்பட்டன.  ஆனால் 2021 ஆம் ஆண்டில் அது கணிசமாக குறைவடைந்து 5.4 பில்லியன் டொலர்களாக பதிவாகியிருக்கின்றது. இது மிகப்பெரிய ஒரு குறைவாக வீழ்ச்சியாக காணப்படுகின்றது. 

சுற்றுலாத்துறை வீழ்ச்சி 

சுற்றுலா துறையை பொறுத்தவரையில் 2021 ஆம் ஆண்டில் 267 மில்லியன் டொலர்கள் வருமானமாக கிடைத்திருக்கின்றன. 

இது 2020 ஆம் ஆண்டில் 682 மில்லியன் டொலர்களாக காணப்பட்டது.  2019 ஆம் ஆண்டில் 3.8 பில்லியன்கள் கிடைத்தன.  2018-ஆம் ஆண்டில் 4.4 பில்லியன் டொலர்கள் கிடைத்தன. 

இதனுடன் இந்த கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி காரணமாக இந்த சுற்றுலாத் துறை  வருமானம் எந்தளவு தூரம் குறைவடைந்து இருக்கின்றது என்பதை அவதானிக்க முடிகிறது. 

வெளிநாட்டு கையிருப்பை பொறுத்தவரையில் 2021ஆம் ஆண்டு முடிவடையும் போது 3.1 பில்லியன் டொலர்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில் திரவத்தன்மையானது குறைவாகவே இருந்திருக்கலாம்.   2020ஆம் ஆண்டில் அது அதனைவிட ஒரு அதிகமான நிலைமையை நிலைமை காணப்பட்டது. 

தற்போது இரண்டு 2022ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு மிக மோசமான நிலைமையில் காணப்படுகின்றது. 

மேலும் 2021 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி பெறுமதியானது   84.5 பில்லியன் டொலர்களாக பதிவாகியிருக்கின்றது. 

2020 ஆம் ஆண்டில் 81 பில்லியன் டொலர்களாகவும் 2019 ஆம் ஆண்டில் 83.9 பில்லியன் டொலர்கள் ஆகவும் மொத்த தேசிய உற்பத்தியின் பெறுமதி காணப்படுகிறது.

அதாவது ரூபாவில் கூறுவதாயின் 2020 ஆம் ஆண்டு இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியின் பெறுமதியானது 17 ட்ரில்லியன் ரூபாவாக காணப்படுகிறது. 

அதேபோன்று இலங்கையின்   உள்நாட்டு வெளிநாட்டு மொத்த கடன் தொகையானது  2021 ஆம் ஆண்டின் இறுதியில் 17.5 ட்ரில்லியன் ரூபாவாக காணப்படுகிறது. 

இது மொத்த தேசிய உற்பத்தியிடன்   ஒப்பிட்டு பார்க்கையில் 104.6 வீதமாக பதிவாகின்றது.  இதில் 60 வீதமானவை உள்நாட்டு கடன்களாகவும் 38 வீதமானவை வெளிநாட்டு கடன்களாகவும் காணப்படுகின்றன. 

2021 ஆம் ஆண்டில் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பை வெளிக்காட்டி இருக்கிறது.  அதேபோன்று இறக்குமதி செலவும் கடுமையான ஒரு அதிகரிப்பை வெளிக்காட்டி நிற்கின்றது. 

முக்கியமாக வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டிருந்த சூழலிலும் கூட இறக்குமதி செலவானது 28 வீதத்தால் அதிகரித்திருக்கின்றது.

எப்படியிருப்பினும் ஏற்றுமதி  வருமானத்தை அதிகரித்து இறக்குமதி செலவைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதற்கு ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்ட உற்பத்திகள் அதிகரிக்கப்படுவது அவசியமாகும். 

அதேபோன்று இறக்குமதி செலவை கட்டுப்படுத்துவதற்கு உள்நாட்டில் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும்.  முக்கியமாக மரக்கறி வகைகள், உணவு வகைகள் போன்றவற்றை உள்நாட்டில் அதிகமாக உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பது  மிக அவசியமாகும். 

அதுமட்டுமன்றி சுற்றுலாத்துறை ஊடான  வருமானத்தை அதிகரித்துக் கொள்வதுடன்   வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்புகின்ற அந்நிய செலாவணியை அதிகரிக்கவும்  நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில்  நிலைமையை சமாளிக்கலாம்.  இதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்படவேண்டும். 

அதனூடாகவே எதிர்காலத்தை நோக்கி பயணிக்க முடியும்.  அன்மையில் இதுதொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தற்போதைய நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்கள் சர்வதேச நாடுகளை அணுகி உதவிகளைப்பெற்று தீர்வுகாண முடியும். 

ஆனால் நீண்ட காலமாக இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டுமாயின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். 

அது மிக முக்கியமான பொருத்தமான பின்பற்றப்பட வேண்டிய ஒரு விடயமாகவே காணப்படுகின்றது. எனவே ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கவும்  இறக்குமதி செலவை கட்டுப்படுத்தவும்   திட்டமிட்ட ரீதியில் தற்போது இருந்து வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும். 

அப்போதுதான் அடுத்த சில வருடங்களில் இன்று ஏற்பட்ட நிலைமை ஏற்படாமல் இருப்பதை உறுதிபடுத்த முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்