21 ஆவது திருத்த சட்டம் குறித்த முழுமையான அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்

By Vishnu

05 Jun, 2022 | 09:02 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உத்தேச அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூலத்தின் முழுமையான அறிக்கையினை நீதி,சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி தலைமையில் இடம் பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

அமைச்சரவையின் அங்கிகாரத்தை பெற்று நாளைய தினமே 21ஆவது திருத்த வரைபினை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிட்டு ஒருவார காலத்திற்குள் வரைபினை பாராளுமன்றிற்கு சமர்ப்பிக்க நீதியமைச்சர் எதிர்பார்த்துள்ளதாக நீதியமைச்சின் தரப்பில் குறிப்பிடப்பட்டது.

21ஆவது திருத்த வரைபினை இறுதிப்படுத்தும் வகையிலான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் இடம் பெற்றது.

வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்,நீதியமைச்சர்,ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் சகல கட்சி தலைவர்களும் இணக்கப்பாட்டிற்கு வந்த 4 திருத்த யோசனைகளை முழுமையாக செயற்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நீதி,சிறைச்சாலைகள் விவகாரம்,மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ கடந்த மாதம் 24 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபினை சமர்ப்பித்தார்.

சமர்ப்பிக்கப்பட்ட 21ஆவது திருத்தம் தொடர்பில் சகல அரசியல் கட்சிகளினலும் நிலைப்பாடுகளை பெற்று,திருத்தங்களை உள்ளடக்கிய வகையில் முழுமையான வரைபினை மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டதை தொடர்ந்து சகல கட்சிகளினதும், அரசியல் மற்றும் சிவில் அமைப்பினதும் கோரிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமையாளர் பாராளுமன்றில் பதவி வகித்தலுக்கு தகுதியற்றவர், முப்படைகளின் தளபதி என்ற ரீதியில் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சினை வகிக்கலாம் (10ஆவது பாராளுமன்றில் ஜனாதிபதி எவ்வித அமைச்சு பதவிகளையும் வகிக்க முடியாது),

ஜனாதிபதி தனது விருப்பத்திற்கமைய பிரதமரை பதவி நீக்க முடியாது. பிரதமரை பதவி நீக்க வேண்டுமாயின் ஜனாதிபதி ஒரு யோசனையை பாராளுமன்றிற்கு சமர்ப்பிக்க வேண்டும்,அந்த யோசனை பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றும் பட்சத்தில் ஜனாதிபதி பிரதமரை பதவி நீக்க முடியும்,

அத்துடன் அமைச்சு விடயதானங்களில் ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனைக்கமைய செயற்பட வேண்டும்.10ஆவது பாராளுமன்றத்தில் ஜனாதிபதி பிரதமரின் பரிந்துரைக்கமைய அமைச்சு விடயதானங்களை தீர்மானிக்க வேண்டும் என்ற நான்கு பிரதான விடயங்களுக்கு சகல கட்சி தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றம் கூடிய தினத்திலிருந்து இரண்டரை வருடகாலத்திற்கு பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் உள்ள ஏற்பாடு 21ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 19ஆவது திருத்தத்திலும், 20ஆவது திருத்தத்திலும் உள்ளடக்கப்படாத ஒருசில விடயங்கள் 21ஆவது திருத்த வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மத்திய வங்கியின் ஆளுநர், அமைச்சின் செயலாளர்கள் ஆகியோரிகளின் நியமனத்தின் போது ஜனாதிபதி அரசியலமைப்பு சபையின் ஆலோசனைகளை கோர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதை அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் இரத்து செய்யப்பட்டு அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் திருத்தங்களுடன் 21ஆவது திருத்தமாக நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார்.நீதியமைச்சர் சமர்ப்பித்துள்ள 21ஆவது திருத்தத்தில் 19ஆவது திருத்திற்கு அப்பாற்பட்ட புதிய விடயங்கள் ஏதும் உள்ளடக்கப்படவில்லை,19 மைனஸ் தான்  21ஆவத திருத்தத்தில் காணப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார பிரதமர் தலைமையில் இடம் பெற்றகட்சி தலைவர் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் சமர்ப்பித்த 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபு தற்போது உயர்நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது. 21ஆவது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றின் நிலைப்பாடு ஓரிரு வாரங்களில் பாராளுமன்றிற்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதியமைச்சர் சமர்ப்பிக்கும் 21ஆவது திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைக்கப் பெற்றால் அது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும்.அதனை தொடர்ந்து ஒரு வாரகாலத்திற்குள் திருத்த வரைபு பாராளுமன்றிற்கு சமர்ப்பிக்கப்படும். 21ஆவது திருத்த வரைபு பாராளுமன்றிற்கு சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து ஒருவார காலத்திற்குள் திருத்த வரைபினை இலங்கை பிரஜைகள் எவரும் உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right