ரஷ்ய விமான விவகாரம் : சட்ட மா அதிபர் சார்பில் இன்று சிறப்பு வாதங்கள்

By T Yuwaraj

05 Jun, 2022 | 09:05 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

ரஷ்யாவின் 'ஏரோபுளோட்  (Aeroflot Airbus A330)  எயார் பஸ் ஏ 330' விமானம் இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து ,கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,  அது குறித்த முறைப்பாட்டை நகர்த்தல் பத்திரம் ஊடாக இன்று ( 6) விசாரணைக்கு அழைத்து  சட்ட மா அதிபர் ஊடாக சிறப்பு வாதங்களை முன் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

சட்ட மா அதிபருடன் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில், இன்று சட்ட மா அதிபர் சார்பில்  சிறப்பு வாதங்கள் கொழும்பு வணிக மேல் நீதிமன்றில் முன் வைக்கப்படவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு விஷேட வாதங்களை முன் வைத்து, விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை விலக்கிக்கொள்ள  திட்டமிடப்பட்டுள்ளது.

 எவ்வாறாயினும்  ஏற்கனவே கடந்த 3 ஆம் திகதி வெள்ளியன்றும், இந்த முறைப்பாட்டின் இரண்டாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும்  விமான சேவை நிறுவனத்தின் பயண கட்டுப்பாட்டாளருக்காக ஆஜரான  அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் சுமதி தர்மவர்தன  வாதங்களை முன் வைத்திருந்த நிலையில்,   அந்த தடையை நீக்குவதா,இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 8 ஆம் திகதி  விசாரணைகளை முன்னெடுப்பதாக   வனிக மேல் நீதிமன்றம்  அறிவித்திருந்தது.

அயர்லாந்தில் உள்ள செலஷ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடெட்  நிறுவனம் (  Celestial Aviation Trading Limited ) தாக்கல் செய்த முறைப்பாடொன்றினை விசாரித்த கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் அம்மனுவின்   முதல்  பிரதிவாதியான  ஏரோபுளொட் ரஷ்ய விமான சேவை நிறுவனத்திற்கு  ( Aeroflot Russian Airlines)  கடந்த 2 ஆம் திகதி  தடையுத்தரவொன்றினை பிறப்பித்தது.

அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள  ரஷ்யாவின் ஏரோபுளோட்  எயார் பஸ் ஏ 330 விமானத்திற்கு நாட்டிலிருந்து வெளியேற கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க உத்தரவிட்டிருந்தார். இந்த தடையுத்தரவு எதிர்வரும் 16ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என நீதிபதி அறிவித்தார்.

அயர்லாந்தில் உள்ள செலஸ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடெட், ஏரோபுளோட் ரஷியன் ஏர்லைன்ஸுக்கு எதிராக, இரு தரப்பினருக்கு இடையேயான குத்தகை ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியமைக்காக  இவ்வாறு முறைப்பாட்டு மனுவை தாக்கல் செய்து  இந்த தடை உத்தரவைப் பெற்றுக்கொண்டிருந்தது.

 இந் நிலையில் இந்த முறைப்பாட்டு மனு தொடர்பில், ரஷ்ய விமான சேவை நிறுவனம் சார்பில்  சட்டத்தரணி   கலாநிதி லசந்த ஹெட்டி ஆரச்சி ஆஜராவதுடன்  மனுதாரரான அயர்லாந்து நிறுவனம் சார்பில் சட்டத்தரணி  அனுர டி சில்வாவுடன் ஜனாதிபதி சட்டத்தரணி  அவிந்ர ரொட்ரிகோ ஆஜராகின்றார்.

 சட்ட மா அதிபர் சார்பில் அரசின் மேலதிக சொலிசிடர் ஜெனரால் சுமதி தர்மவர்தன தலைமையிலான  சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மஹேன் கொபல்லாவ,  பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ரஜீவ் குணதிலக உள்ளிட்ட குழுவினர் ஆஜராகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right