நடிகர் நானி நடிக்கும் 'அடடே சுந்தரா' முன்னோட்ட வெளியீடு

Published By: Digital Desk 5

04 Jun, 2022 | 01:43 PM
image

தெலுங்கின் முன்னணி நடிகர் நானி கதையின் நாயகனாகவும், மலையாள நடிகை நஸ்ரியா கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. 

படத்தைப் பற்றி நடிகர் நானி பேசுகையில், "ஷ்யாம் சிங்கார ராய் போன்ற எக்சன் படங்களில் நடித்துவிட்டு, ‘அடடே சுந்தரா’ போன்ற நகைச்சுவையும், காதலும் கலந்த திரைக்கதையில் நடிப்பது பொருத்தமான தெரிவு என நினைக்கிறேன். ரசிகர்களுக்கும் நிச்சயம் இது பிடிக்கும். படத்தின் கதை, தெலுங்கு, தமிழ், மலையாளம் என மொழி கடந்து அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. படத்தின் உணர்வுபூர்வமான திரைக்கதை, அனைத்துவித ரசிகர்களையும் கவரும். பாடசாலைகளும், கல்லூரிகளும் திறக்கப்படும் ஜுன் மாதத்தில் 10 ஆம திகதியன்று அடடே சுந்தரா வெளியாவது சிறப்பு. இந்த திரைப்படம் நல்லதொரு படமாளிகை அனுபவத்தை குடும்பத்துடன் சென்று காண்பவர்களுக்கு வழங்கும்.” என்றார்.

படத்தின் நாயகி நஸ்ரியா பேசுகையில்,'' காதல் கதைக்கு ஊக்கமும், ஆதரவும் அளித்து வரும் தமிழ் ரசிகர்கள் ‘அடடே சுந்தரா’ படத்திற்கும் ஆதரவு வழங்க வேண்டும். .'' என்றார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனத்தின் சார்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஜூன் 10-ஆம் திகதியன்று ‘அடடே சுந்தரா’ வெளியாகிறது. 

தெலுங்கு இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நானி, நஸ்ரியா, நரேஷ், அழகம்பெருமாள், நதியா, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

நகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விவேக் சாஹர் இசையமைத்திருக்கிறார். நகைச்சுவைக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தயாராகியிருக்கும் ‘அடடே சுந்தரா’ படத்தின் தமிழ் பதிப்பின் முன்னோட்டம் வெளியாகி, இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

முன்னோட்டத்தில் மாற்று மதத்தைச் சேர்ந்த காதலர்கள் தங்களின் காதலை எப்படி பெற்றோர்களின் சம்மதத்துடன் கலப்பு திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதைப் பற்றியதாக இருப்பதால் ரசிகர்களிடையே அடடே சுந்தரா வைக் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

இதனிடையே நடிகர் நானி தமிழில் வெளியான ‘வெப்பம்’ மற்றும் ‘ஆஹா கல்யாணம்’ போன்ற படங்களில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் என்பதும், நடிகை நஸ்ரியா ,‘நேரம்’,‘ ராஜா ராணி’, ‘ நையாண்டி’ என பல படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் என்பதும், நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் முதன்முதலாக இணைந்து காதல் கதையில் நடித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right