இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகார மோசடின் பிரதான சூத்திரதாரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாக இருக்கலாம் என்கின்ற சந்தேகம் எமக்குள்ளது. ஏனெனில் கோப் குழுவின் அறிக்கையினை தவிர்ப்பதற்கு அவர் பல்வேறு அழுத்தங்க‍ளை  பிரயோகித்தார் என்று  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம். பி. தெரிவித்தார்.

பலமிக்க பாராளுமன்றம் பற்றி அடிக்கடி குறிப்பிடும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோப்குழுவின் அறிக்கைகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே அறிக்கையினை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி அத்திணைக்களத்தின் ஆலோசனைக்கமைவாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வும் அக்கட்சி வலியுறுத்தியது.     

பத்தரமுல்லையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகைலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடகையில்,

நாட்டின் பொது நிதி நடவடிக்கையில் பொதுமக்களின் பங்கு முக்கியமானது. பொது மக்களின் உழைப்பில் ஒரு பகுதி திறைசேரி நிதியில் சேர்கிறது. எனவே திறைசேரி நிதியினை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.  இருந்தபோதிலும் அவ்வாறான பொது நிதி பல சந்தர்ப்பங்களில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பொது நிதி திருட்டு நடவடிக்கைகளினால்தான் ஜனவரி எட்டாம் திகதி மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். ஆகையினால் பொது நிதியில் இடம்பெறும் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு உள்ளது. எனினும் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராக செயற்படுவதனை அவதானிக்க முடிகிறது. 

எனினும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சூடு தணிய முன்னரே பொது நிதியினை கொள்ளையடிக்க ஆரமபித்து விட்டனர். மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தில் 169 கோடி ரூபா மோசடி இடம்பெற்றிருந்தாலும் அது நாட்டின் பொருளாதரத்தில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மோசடி கடந்த வருடம் பெப்ரவரி மாதம்  27 ஆம் திகதி இடம்பெற்றது. ‍அது தொடர்பில் மார்ச்  மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நாம் குறிப்பிட்டோம். எனினும் அப்போது அது தொடர்பில் அரசாங்கம் கரிசனை காட்டவில்லை. மத்திய வங்கியின் ஆளுனரை தற்காலிகமாவது இடைநிறுத்தி விசாரணைகளை மேற்கொண்டிருக்கலாம். அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை. 

இருந்தபோதிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கு சார்பான மூன்று சட்டத்தரணிகளை நியமித்து அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டார். அந்த விசாரணையின் மூலம் மத்திய வங்கியின் பிணை முறியில் இடம்பெற்ற மோசடிகளை மூடி மறைப்பதற்கே அவர் முயற்சித்தார். 

மேலும் மத்திய வங்கியின் பிணைகளை ஏலம் மூலம் விற்பனை செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் குறிப்பிட்டுள்ளதாக கோப் அறிக்கையில் உள்ளது. மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மார்ச் மாதம் 17 ஆம் திகதி பிணை முறி தொடர்பில் ஏலம்விடும் முறையை கடைப்பிடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டார். அத்தீர்மானத்தை அவர் எவ்வாறு எடுத்தார்? பிரதமர் என்பதற்காக அவர் விடும் கட்டளைகள் இறை ஆணையாக அமைந்து விடப்போவதில்லை.  உரிய வழிமுறைகளைப் பின்பற்றியே தீர்மானம் எடுக்க வேண்டும். ஆகவே மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தில் அவரின் செயற்பாடுகளை நோக்கும்போது குறித்த கொடுக்கல் வாங்கலின் பிரதான ஏற்பாட்டாளர் பிரதமராக இருக்கலாம் என்கின்ற சந்தேகம் எமக்குள்ளது.   

ஆகவே குறித்த  மோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அவர் ஒருபோதும் விலகியிருக்க முடியாது. பிணைமுறி தொடர்பில் புதிய வழிமுறைகளைக் கையாள்வதானால் அதற்கு ஒரு வதிமுறை உள்ளது. அதனைப் பின்பற்ற வேண்டும்.

மேலும் கோப் குழு விசாரணைகளை முன்னெடுத்தபோது பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. எமது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி அக்குழுவின் தலைவராக இருந்தமையினால் அவர் எவ்விதமான அழுதங்களுக்கும் தலைசாய்க்காது உரிய முறையில் பணிகளை முன்னெடுத்தார்.  

கொள்கை திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் மத்திய வங்கி தற்போது பிரமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழுள்ளது. எனவே பிணை முறி கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மோசடி தொடர்பாக அவர் உரிய நடவடிக்கை எடுப்பதிலிருந்து விலகியிருக்க முடியாது.

கோப் குழுவின் அறிக்கைக்கிணங்க அவர் எடுக்கவுள்ள நடவடிக்கையை நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். மேலும் பொதுநிதியினை கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சூறையாடப்பட்ட நிதி மீளப்பெறப்பட வேண்டும். கட்சி என்ற ரீதியில் அது தொடர்பில் நாம் மிகுந்த கரிசனை காட்டவுள்ளோம்.

இன்று கோப் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சில எம்.பி.களின் நடவடிக்கை வித்தியாசமாக இருந்தது. திருட்டையும் திருடர்களையும் ஒரு பக்கம் தள்ளிவிட்டு குறித்த திருட்டை வெளிப்படுத்திய ஊடகங்கள்மீது விரல்  நீட்டுகின்றனர். நெடுஞ்சாலை கொடுக்கல் வாங்கல், அனல் மின்நிலை கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் இடம்பெற்றுள்ள மோசடிகள் வெளியாவதை தடுப்பதற்கே ஊடகங்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கன்றனர்.

எனவே கோப் குழுவின் அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி அத்திணைக்களத்தின் ஆலோசனைக்கமைவாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் கோப் குழு 30 அறிக்கைகளை சமர்ப்பித்த போதும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனை இந்த அரசாங்கமும் கடைப்பிடிக்காமல் உரிய தீர்வு முன்வைக்க வேண்டும். 

  பொது நிதியை கொள்ளையடித்துக்கொண்டு வெ ளி நாடுகளுக்கு சென்றுள்ளவர்களை சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நாட்டுக்கு அழைத்து வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.