சிரியாவில் ரஷியா நடத்திய வான்வழி தாக்குதலில் ’200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவின் வான்வழி தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆர்வலர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலை அடிப்படையாக கொண்டு, ’200 பொதுமக்கள் உயிரிழந்தனர்’ என்று சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 29ஆம் திகதி வரையில் 5 இடங்களில் ரஷ்யா 25 க்கும் மேற்பட்ட தாக்குதலை நடத்தி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். 

மற்றுமொரு பக்கத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்தி வருகிறது. 

இருப்பினும் சிரியா அதிபருக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்களை ரஷ்யா குறிவைக்கிறது என்று மேற்கத்திய நாடுகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. 

பாரீஸ் தாக்குதலை அடுத்து சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ரஷ்யாவின் வான்வழி தாக்குதலில் 200 பொதுமக்கள் உயிரிழந்து உள்ளனர் என்று கூறிஉள்ள மன்னிப்பு சபை “சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு மதிப்பு அளிப்பதில் ரஷ்யா தோல்வி அடைந்துவிட்டது,” என்று கூறியுள்ளது.

 இருப்பினும் ரஷியா தொடர்ந்து இதனை மறுத்து வருகிறது, தகவல் போரின் ஒருபகுதியாக இத்தகைய கூற்றுக்கள் உள்ளது. 

சிரியா அதிபர் அல் ஆசாத் கோரிக்கையை ஏற்று, அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் பிற குழுக்களுக்கு எதிரான தாக்குதலை தொடங்குவதாக ரஷ்யா செப்டம்பர் 31ஆம் திகதி அறிவித்தது.  

சிரியாவில் ஹோம்ஸ், ஹமா, இட்லிப், லதாகியா மற்றும் அலிப்போ பகுதிகளில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதல்களை ஆய்வு செய்து உள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கையில் தெரிவித்து உள்ளது. 

தாக்குதல் தொடர்பாக அப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்களிடம் தொலைபேசி மூலம் விசாரித்ததாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. 

நவம்பர் 29ஆம் திகதி இட்லிப் மாகாணத்தில் ரஷியா வீசிய ஏவுகணையானது வியாபார கடை தொகுதியை தாக்கியது. இதில் பொதுமக்கள் 49 பேர் பலியாகினர் மற்றும் பலர் காயம் அடைந்தனர் என்று மன்னிப்பு சபை கூறியுள்ளது. மேலும் ரஷியாவின் தாக்குதல்களை பட்டியலிட்டுள்ளது.