துமிந்த சில்வா விவகாரத்தில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்jது - சாலிய பீரிஸ் வரவேற்பு

By T Yuwaraj

01 Jun, 2022 | 09:15 PM
image

(நா.தனுஜா)

உயர்நீதிமன்றத்தினால் மரணதண்டனை உறுதிசெய்யப்பட்ட கைதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டபோது அதுகுறித்து சட்டத்தரணிகள் சங்கத்தினால் கண்டன அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. 

அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய விடயங்களையும், துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்துமாறு நேற்று  உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவையும் மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த முக்கிய விடயங்கள் வருமாறு:

சட்டவிரோதமான ஒன்றுகூடல் மற்றும் கொலைக்குற்றச்சாட்டுக்களுக்காக மேல்நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டு, பிரதம நீதியரசர் ப்ரியஸாத் டெப் தலைமையிலான உயர்நீதிமன்ற நீதியரசர் குழாமினால் அத்தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட கைதியான துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் ஏற்கனவே அவதானம் செலுத்தியிருந்தது.  

அரசியலமைப்பின் 34(1) ஆவது சரத்தின் பிரகாரம் பொதுமன்னிப்பு வழங்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ள போதிலும், அது சட்ட ரீதியான பரிசீலனைகளுக்கு அமைவானதாக இருப்பதுடன், குறித்த வழக்கை விசாரணை செய்து தீர்ப்பளித்த நீதிபதியிடம் ஜனாதிபதியினால் அறிக்கை கோரப்படவேண்டியது அவசியமாகும்.

அந்த அறிக்கை மேலதிக ஆலோசனைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படுவதுடன், அது நீதியமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட்டு, பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து அவரது பரிந்துரையும் பெற்றுக்கொள்ளப்படவேண்டும்.

அதுமாத்திரமன்றி குறித்த பொதுமன்னிப்பானது வழக்கை விசாரணை செய்து தீர்ப்பளித்த நீதிபதி, சட்டமா அதிபர் மற்றும் நீதியமைச்சர் ஆகியோரின் பரிந்துரைக்கு அமைவாக வழங்கப்பட்டதா? என்பதை அறிந்துகொள்வது பொதுமக்களின் உரிமையாகும். 

அதன்படி துமிந்த சில்வாவிற்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட விவகாரத்தில் மேற்படி தரப்பினரிடமிருந்து அறிக்கை பெறப்பட்டதா? என்பதைப் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்துமாறும், அவ்வாறு அறிக்கை பெறப்பட்டிருப்பின் அவர்கள் துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு பரிந்துரைத்தார்களா? அல்லது பொதுமன்னிப்பு வழங்கவேண்டாம் என்று பரிந்துரைத்திருந்தார்களா? என்பதை வெளிப்படுத்துமாறும் கடிதமொன்றின் மூலம் சட்டத்தரணிகள் சங்கம் கோரியிருந்தது.

பொதுமன்னிப்பு வழங்குவதற்குரிய தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும், அந்தத் தீர்மானம் நீதிமன்ற அபிப்பிராயத்திற்கு அமைவாகவே மேற்கொள்ளப்படவேண்டும். மாறாக அந்த அதிகாரம் தன்னிச்சையான முறையிலும், தெரிவுசெய்யப்பட்ட அடிப்படைகளிலும் பயன்படுத்தப்படக்கூடாது.

பொதுமன்னிப்பு வழங்குவதற்காகக் குறித்த கைதி ஏன் தெரிவுசெய்யப்பட்டார் என்பதை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாதவாறான பொதுமன்னிப்பு வழங்கல் சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியிருந்தன என்பதை சட்டத்தரணிகள் சங்கம் நினைவில் வைத்திருப்பதுடன், அத்தகைய சந்தர்ப்பங்களில் இப்போது செயற்படுவதைப்போன்றே சட்டத்தரணிகள் சங்கம் உறுதியான நிலைப்பாட்டுடன் செயற்பட்டது.

அரசியலமைப்பின் 34 ஆவது சரத்திற்கு அமைவாக வழங்கப்படும் அனைத்துப் பொதுமன்னிப்புக்களும் 34(1) ஆவது சரத்தின் பிரகாரம் அப்பொதுமன்னிப்பை வழங்குவதற்கான அவசியம் என்னவென்பதை நன்கு பரிசீலனை செய்த பின்னரே வழங்கப்படவேண்டும். அதன்படி அரசியலமைப்பின் 34(1) ஆவது சரத்தின்கீழ் பொதுமன்னிப்பு வழங்கப்படுவதற்காக துமிந்த சில்வா எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார்?, அப்பொதுமன்னிப்பை வழங்கும்போது எந்தெந்த விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட்டன? என்பது குறித்து தெளிவுபடுத்தப்பபடவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் உயர்நீதிமன்றத்தினால் நேற்று முன்தினம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு குறித்து சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரால் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவு வருமாறு:

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மனைவி, அவரது மகள் மற்றும் சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனு மீதான விசாரணைகளை அடுத்து துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்துமாறு நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சுரசேன, யசந்த கோதாகொட மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் குழாம் பிறப்பித்துள்ள உத்தரவு வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த உத்தரவாகும் என்று பதிவிட்டுள்ளார்.

No photo description available.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right