சீரற்ற காலநிலை நாளையும் தொடரும் : 8 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை : பல பிரதேசங்களில் கனமழை பதிவு

By T Yuwaraj

31 May, 2022 | 09:45 PM
image

(எம்.மனோசித்ரா)

தென் மேற்கு பருவ பெயர்ச்சியின் காரணமாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை எதிர்வரும் ஓரிரு தினங்களுக்கு தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரவு முதல் பெய்த கடும் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள வீதிகள் நீரில் மூழ்கியதோடு , விவசாய நிலங்களும் வெள்ளத்தினால் முற்றாக பாதிப்படைந்துள்ளன.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 25 கடற்படை குழுக்கள்..! |  Virakesari.lk

இந்நிலையில் நாளைய தினமும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் , நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்திலும் இடைக்கிடை மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் மத்திய மலைப்பகுதிகளிலும் , வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை புதன்கிழமை மாலை 4.30 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

நதிகளின் நீர்மட்டம் உயர்வு

இன்று தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக களு கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் பெல்மடுல்லை, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயாகம, எலபத்த, பாலந்தநுவர மற்றும் புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலகப்பகுதிகளிலுள்ள தாழ் நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. கின் கங்கை, நில்வளா கங்கை, அத்தனுகலுஓயா உள்ளிட்டவற்றின் நீர் மட்டமும் உயர்வடைந்துள்ளது.

பல பகுதிகளிலும் 100 மி.மீ.க்கும் அதிக மழைவீழ்ச்சி

இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதற்கமைய காலி மாவட்டத்தின் யக்கலமுல்ல பிரதேசத்தில் 192 மி.மீ. , மீகஸ்தென்ன பிரதேசத்தில் 131 மி.மீ. , நெலுவ பிரதேசத்தில் 123 மி.மீ. என மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நீரில் மூழ்கிய வீதிகள்

கடும் மழை காரணமாக கொழும்பில் மாளிகாவத்தை , ஆமரவீதி , ராஜகிரிய - புத்கமுவ உள்ளிட்ட வீதிகளும் , கம்பஹா மாவட்டத்தில் கலஹிட்டயாவ, பட்டுவத்த, ராகம வீதிகளும் , காலியில் கோனாபீனுவல, அலுத்துவல, மீட்டியாகொட மற்றும் பட்டபொல பிரதேசங்களிலுள்ள வீதிகளும், காலி - பத்தேகம வீதி என்பன நீரில் மூழ்கின. இவை மாத்திரமின்றி அங்குலுகஹா பிரதேசத்திலுள்ள நெல் வயல் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதே போன்று நில்வளா கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்தமையால் மாத்தறை - ஹித்தெட்டிய குறுக்கு வீதி நீரில் மூழ்கியுள்ளது. இதே போன்று குடாஓயாவின் நீர் மட்டம் உயர்வடைந்தமையால் புளத்சிங்கள - மோல்கா பிரதான வீதியில் தம்பல மற்றும் எட்டம்பஸ் சந்தி பிரதேசத்தை அண்மித்த வீதிகளும் நீரில் மூழ்கின.

மீனவர்களுக்கான அறிவுறுத்தல்

நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக புத்தளத்திலிருந்து காங்கேசன் துறை ஊடாக திருகோணமலை வரையான கடற் பிராந்தியத்திலும் , காலியிருந்து பொத்துவில் வரையான கடற் பிராந்தியத்திலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோ மீற்றர் வரை உயர்வடையக் கூடும். இதே போன்று புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக பொத்துவில் வரையுள்ள கடற்பிராந்தியத்தில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என்பதால் மீனவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right