அருண் விஜய் நடிக்கும் 'யானை' பட முன்னோட்டம் வெளியீடு

By Digital Desk 5

31 May, 2022 | 10:22 PM
image

நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் 'யானை' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

'ஸ்பீட் ஸ்கிரிப்ட் ஸ்டார்' இயக்குநர் ஹரி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதியதிரைபடம் 'யானை'. இதில் நடிகர் அருண் விஜய் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். 

இவர்களுடன் தலைவாசல் விஜய், யோகி பாபு, புகழ், ஓ. ஏ. கே. சுந்தர், சஞ்சீவ், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். 

கிராமிய பின்னணியிலான எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் சக்திவேல் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். 

இந்த திரைப்படத்தை கே. கே. ஆர். சினிமாஸ் எனும் நிறுவனம் தமிழகம் முழுவதும் ஜூன் மாதம் 17ஆம் திகதியன்று வெளியிடுகிறது.

இப்படத்தின் பணிகள் நிறைவடைந்து ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில் இத் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. இதில் அருண் விஜய் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' ஒரு குடும்பத்தை தன் தோளில் சுமக்கின்ற நாயகன் ஒரு புள்ளியில் அது தேவையற்ற சுமை என இறக்கிவைக்க நினைக்க, அது தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. 

இதன் விளைவாக ஏற்படும் விறுவிறுப்பான சம்பவங்கள் தான் படத்தின் கதை. படத்தில் வில்லன்கள் என்று யாரும் இல்லை. 

கதாபாத்திரங்களுக்கு ஏற்படும் சூழல்கள் தான் வில்லன்கள். இந்தப்படத்தில் ஆக்ஷன், காதல், சென்டிமென்ட், கொமடி என அனைத்து கொமர்ஷல் அம்சங்களும் இடம் பெற்றிருக்கிறது. 

அருண் விஜய், ஏழு நிமிட அளவிற்கான சண்டைக் காட்சியை ஒரே ஷாட்டில் நடித்து அசத்தி இருக்கிறார். இது ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்படும்.''என்றார்.

நேற்று வெளியான ‘யானை’ படத்தின் முன்னோட்டம் இது வரை இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right