அமைச்சுப்பதவிகளை வழங்கி 21 ஆவது திருத்தத்தினை நிறைவேற்றிக்கொள்ள  : 21 இல் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் அதிகரிப்பு - ஹர்ஷ டி சில்வா

By Vishnu

29 May, 2022 | 03:23 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் காணப்படுவதை விட , தனக்கான அதிகாரங்களை 21 ஆவது திருத்தத்தின் ஊடாகவே மேலும் அதிகரித்துக் கொள்ளும் நடவடிக்கைகளையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுத்துள்ளார்.

அமைச்சுப்பதவிகளை வழங்கி 21 ஆவது திருத்தத்தினை நிறைவேற்றிக்கொள்ள தற்போது முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

உரத்தினை இறக்குமதி செய்வதற்கு சுமார் 350 மில்லியன் டொலர் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இதற்கான டொலர் கிடைக்கப் பெற்றாலும் உரம் கிடைக்காது.

உரத்தினை இறக்குமதி செய்ய முடியாத ஏற்பட்டால் நெற் பயிர் செய்கைக்கு என்ன ஆகும்? எனவே அரிசி தட்டுப்பாடு ஏற்படுமாயின் அதனை இறக்குமதி செய்வதற்கான டொலரைப் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல் காணப்படுகிறது.

அனைவரும் அரசியல் தேவைகளுக்காகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றர். 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் எனக் கூறி என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? ஜனாதிபதி தொடர்ந்தும் அதே இடத்திலேயே இருந்து கொண்டு , 19 இல் காணப்பட்டதை விட அதிகாரத்தை மேலும் அதிகரித்துக் கொள்ளவுள்ளதாகவே தோன்றுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தவறான தீர்மானங்களின் காரணமாகவே நாடு வங்குரோத்து நிலைமையை அடைந்துள்ளது என்பதை முழு உலகமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா இதனை சர்வதேச ஊடகமொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனாலும் அதே முறையிலேயே நாம் முன்னோக்கிச் செல்கின்றோம். இவ்வாறு எதனையும் செய்ய முடியாது.

இதனை முழுமையாக தூய்மைப்படுத்த வேண்டும். ஒரே தடவையில் எதனையும் செய்ய முடியாது என்பது தெளிவாகிறது. அதற்கு குறிப்பிட்டவொரு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

மேலும் 50 பேருக்கு அமைச்சுக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அமைச்சுப்பதவிகளை வழங்கி அதன் ஊடாக 21 ஆவது திருத்தத்தினை  நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கு இயன்றவரை முயற்சி செய்வோம். அனைவரும் ஒன்றிணைந்து மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்ற முயற்சிப்போம்.

அரசியல் நோக்கங்களுக்காகவும் , தனிப்பட்ட தேவைகளுக்காகவும் அமைச்சுப்பதவிகளை ஏற்பதில் பிரயோசனமில்லை. அவ்வாறிருந்திருந்தால் இன்று நான் நிதி அமைச்சராகியிருப்பேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right