கார்வண்ணன்
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவ முன்வர வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்புக்கு எதிர்மறையான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த ராஜபக்ஷவினரைப் பாதுகாக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கையை, புலம்பெயர் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது என, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் வலியுறுத்தியிருக்கிறார்.
அதற்கு முன்னதாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், வெளியிட்ட அறிக்கையிலும், இதேபோன்ற கருத்து வலியுறுத்தப்பட்டிருந்தது.
இவர்கள் இருவரும், போரின் இறுதிக்காலகட்டத்தில், போர் நிறுத்தத்தை ஏற்படுத்துதல், சரணடைதல், பாதுகாப்பாக மக்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட விடயங்களில், சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட்டவர்கள். இலங்கை அரசுடனும், பேச்சுக்களை நடத்தியவர்கள்.
ஆனால் அவர்களால் அத்தருணத்தில் எதையும் சாதிக்க முடியவில்லை.
அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக அரசியல் செய்த அவர்கள், இருவருமே தற்போது அதில் இல்லை.
ஆனாலும், தமிழர்களின் பிரச்சினைகள் ஏதும் தீர்க்கப்படாதுள்ள நிலையில், புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு உதவக் கூடாது என்ற ஒத்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
பொருளாதார நெருக்கடி மோசமடையப் போகிறது என்ற அறிகுறிகள் வெளிப்பட்ட போது, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை வழங்குங்கள், புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை கொண்டு வந்து கொட்டுவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரனும், சாணக்கியனும் கூறியிருந்தனர்.
ஆனாலும், கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் அவர்கள், புலம்பெயர் தமிழர்களை உதவுங்கள் என்று விடுத்த கோரிக்கைக்கும் அங்கிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை.
புலம்பெயர் தமிழர்கள், அரசாங்கத்துக்கு உதவும் வகையில், அரசாங்கத்தின் நாணயமாற்றுப் பொறிமுறைகளின் ஊடாக, வெளிநாட்டு நாணயங்களை அனுப்பவில்லையே தவிர, அவர்கள் அண்மைக்காலத்தில் பெருமளவு நிதியை இலங்கையில் கொட்டியிருக்கிறார்கள்.
பொருளாதார நெருக்கடி மோசமடைந்து, டொலர் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களின் மதிப்பு அதிகரித்த பின்னர், மிகப் பெரியளவில், வெளிநாட்டு நிதி இலங்கையில் குவிந்திருக்கிறது.
ஆனால் அது சட்டவிரோத வழிகளில், கொண்டு வரப்பட்டது. அது டொலராக வந்திருந்தால் அரசாங்கத்துக்கு கை கொடுத்திருக்கும்.
வெளிநாட்டில் இருந்தவர்கள், தங்களின் உறவுகளுக்கு உதவுவதற்கும், இங்கு சொத்துக்களை வாங்கிக் குவிப்பதற்கும், உண்டியல் மூலம் பெருமளவு பணத்தை அனுப்பியிருந்தனர்.
வெளிநாடுகளில் கனடிமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை இலங்கையில் முதலீடு செய்வது அண்மையில் ஒரு வழக்கமாகவே மாறியிருக்கிறது.
புலம்பெயர் தமிழர்கள், தங்களுக்கென பெரிய காணி, சொகுசு வீடு அல்லது பிரமாண்டமான வீட்டைக் கட்டி வைத்திருப்பது இப்போது ஒரு, புதிய கலாசாரமாக மாறியிருக்கிறது.
இவை இல்லாதவர்கள் அங்கு சற்று குறைவானவர்களாக மதிக்கப்படும் போக்கும் உருவாகி வருகிறது. இவை திட்டமிடப்படாத முதலீடுகள், கையிலுள்ள பணத்தைக் கொண்டு காணியை வாங்கி விடுவதும், கடைகளை கட்டி விடுவதும் வழக்கமாகியிருக்கிறது.
வடக்கில் தேடுவாரின்றிக் கிடக்கும் ஏராளமான கடைகளுக்குப் பின்னால், உள்ள உண்மை இது.
இந்த திட்டமிடப்படாத முதலீடுகளால், இலங்கைக்கோ, இங்குள்ள உறவுகளுக்கோ எந்த நன்மையும் இல்லை. கட்டுமானப் பணிகளுக்காக ஏற்படும் செலவினம் தான் பொருளாதாரத்துக்கு அளிக்கப்படும் பங்களிப்பாக இருக்கும்.
அதேவேளை, இந்த திட்டமிடப்படாத வெளிநாட்டு முதலீடுகளால், உள்நாட்டில், நிலங்களின் விலைகள் அதிகரித்துள்ளதும், உள்நாட்டு உழைப்பை நம்பியிருப்பவர்களால் அவற்றை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதும், பாதகமான விளைவாகும்.
இவ்வாறான ஒரு சூழலிலேயே, அண்மைய பொருளாதார நெருக்கடி, புலம்பெயர் தமிழர்கள், தாங்கள் உழைத்த குறைந்தளவு பணத்தை, பெரியளவு முதலீடாக இலங்கையில் மாற்றிக் கொள்வதற்கு வாய்ப்புக் கிட்டியது.
அவர்கள், இந்தக் காலகட்டத்தில் திட்டமிடப்படாத முதலீடுகளில் பெருமளவு நிதியைக் கொட்டியிருக்கிறார்கள். பொருளாதார நெருக்கடியின் தாக்கம், ஒப்பீட்டளவில் தெற்கை விட, வடக்கில் குறைவாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
அதேவேளை, திட்டமிட்ட முதலீடுகளை செய்வதென்பது, புலம்பெயர் தமிழர்களின் ஒட்டுமொத்த முயற்சியால் தான் நடக்க கூடியது. அவ்வாறான எந்த முயற்சிகளும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. அதற்கான பேச்சுக்களும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.
ஏதோ புலம்பெயர் தமிழர்கள் கொண்டு வந்து கொட்டத் தயாராக இருக்கின்றனர் என்பது போல, சுமந்திரன், சாணக்கியன் மட்டுமன்றி, கஜேந்திரகுமார், சந்திரகாந்தன் போன்றவர்களின் கருத்துக்களும் அமைந்திருக்கின்றன.
முதலீட்டுக்கு வாய்ப்பான சூழல், வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற நிலைமை, முதலீட்டுக்கான பாதுகாப்பு ஆகியன இல்லாமல், புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்ல, யாருமே இங்கு முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள்.
இலங்கையில் எந்த துறையில் முதலீடு செய்வதானாலும், எரிபொருள், போக்குவரத்து, என்பன முக்கியம். எரிபொருள் நெருக்கடிச் சூழலில், முதலீடு செய்வது குறித்து யாரும் சிந்திக்கமாட்டார்கள்.
அதேவேளை, வங்கிகளில் தற்போது செய்யப்படும் முதலீடுகள் அல்லது வைப்புகளின் எதிர்காலம் குறித்த கேள்வியும் இருக்கிறது.
வெளிநாட்டு நாணய நெருக்கடி தற்போது உள்நாட்டு நாணய நெருக்கடியாகவும் மாறியிருக்கிறது. இதனைச் சமாக்க ஒரு ட்ரில்லியன் ரூபாவை அச்சிட வேண்டியிருப்பதாக பிரதமர் ரணில் கூறியிருக்கிறார்.
இவ்வாறான பின்னணியில், கடந்த பல வாரங்களாக வங்கிகளில் பாதுகாப்புக்காக வைத்திருந்த நகைகளை பலர் மீட்டிருக்கிறார்கள். தங்களின் நீண்டகால வைப்புகளையும் பலர் மீளப் பெறத் தொடங்கியுள்ளனர்.
தங்களின் வைப்புகள் பாதுகாப்பானதா என்ற கவலை அதிகளவில் உள்நாட்டு மக்களிடமே உள்ள நிலையில், புலம்பெயர் தமிழர்கள், தங்களின் பணத்தை இங்கு முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பார்களா?
தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ள விவகாரத்தை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் கூட, அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்க கூடிய நிலையில் அவர்கள் இல்லை என்பதே உண்மை.
இப்போது இன்னொரு புதிய பிரச்சினை முளைத்திருக்கிறது. மே 31ஆம் திகதிக்குப் பின்னர் வெளிநாட்டு விமான சேவைகள் முடங்கலாம் என்ற அச்சம் தோன்றியிருக்கிறது.
இலங்கைக்கு வரும், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு நாளொன்றுக்கு 5 இலட்சம் லீற்றர் எரிபொருள் தேவைப்படுகிறது.
ஆனால் 31ஆம் திகதிக்குப் பின்னர் அதனைப் பெறுவது கடினமானதாக இருக்கும் என்றும் இதனால் கட்டுநாயக்க, மத்தல விமான நிலையங்கள் முடங்கும் என்றும் கூறப்படுகிறது.
வரும் விடுமுறைக்காலத்தில், இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள புலம்பெயர் தமிழர்களுக்கு இது அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
இங்கு விமான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால், சென்னை, மாலைதீவு, டுபாய் போன்ற இடங்களில் எரிபொருளை நிரப்புவதற்காக விமானங்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால், இது விமானங்களின் பயணிகள் மற்றும் பொருட்களின் அதிகபட்ச காவும் திறனைப் பாதிக்கும். அது விமானக் கட்டணங்களை அதிகரிக்க வழிவகுக்கும்.
இந்த நெருக்கடி புதிதாக பல சிக்கல்களை ஏற்படுத்தும். ஏற்கனவே படுத்துப்போன சுற்றுலாத் துறையை இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப் போகிறது.
கடந்த வாரம் ஓமான் அரசு அவசியமான காரணங்கள் ஏதுமின்றி, இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று தமது நாட்டவர்களுக்கு அறிவித்திருக்கிறது.
இலங்கையின் பொருளாதாரச் சூழலை மட்டுமன்றி அரசியல் மற்றும் பாதுகாப்பற்ற சூழலை காரணம் காட்டியே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பல நாடுகள் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள்- பொருளாதாரத்தை மட்டுமன்றி நாட்டின் பாதுகாப்பையும் சீரழித்து விட்டனர்.
இவ்வாறான நிலையில் புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு தங்களின் சேமிப்பை இங்கு கொட்ட முன்வருவார்கள்?
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM