(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாட்டினை எட்டும் வரை அத்தியாவசிய பொருட்கள், கொள்வனவு, எரிபொருளுக்கான கடன் மற்றும் கடன் மீள் செலுத்தலை ஒத்தி வைத்தல் உள்ளிட்டவற்றில் இந்தியாவின் தொடர் ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொடா ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை டில்லியில் இடம்பெற்றது. 

இந்த சந்திப்பின் போதே அவர் இவ்விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

இதன் போது இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு டில்லி வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடன் பொருளாதார சீர்திருத்த திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதி செய்யப்படும் வரை இலங்கைக்கான இணைப்பு நிதி உதவிகள் தேவைப்படுவதாக உயர்ஸ்தானிகர் மொரகொட நிதி அமைச்சர் சீதாராமனிடம் தெரிவித்தார்.

இலங்கையில் நிலவும் நெருக்கடியான இந்த சூழலில், அத்தியாவசிய பொருட்கள், எரிபொருளுக்கான கடன்கள் மற்றும் கொடுப்பனவுகளின் இருப்பு போன்ற பல வடிவங்களில் இந்தியா வழங்கும் உதவிகளை அதிகரிப்பது மற்றும் மறுசீரமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இதன் போது இருதரப்பு அவதானம் செலுத்தப்பட்டது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பொருளாதார உதவிகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக நிறுவப்பட்ட உத்தியோகபூர்வ பொறிமுறையானது தொடர வேண்டும் என்று இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

உணவு மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான கடன் வரிகள், நாணய பரிமாற்றம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைத்தல் உட்பட, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவினால் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மதிப்பீடு செய்து, முன்னோக்கி செல்லும் வழி குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் நடுப்பகுதியில் இடம்பெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான கடன்கள் உள்ளிட்ட விடயங்களில் இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் உதவிகளுக்கு உயர்ஸ்தானிகர்  நன்றி தெரிவித்தார். 

ஏப்ரல் மாதம் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத் தொடர்பில் இலங்கை தொடர்பில் கரிசனையை வெளிப்படும்மியமைக்கும் உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்தார்.