நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு 'அகிலன்' என பெயரிடப்பட்டு, அதன் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

'பூலோகம்' படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'அகிலன்'.

இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். 

முக்கிய வேடத்தில் நடிகை தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். இவர்களுடன் 'காப்பான்' பட புகழ் நடிகர் சிராக் ஜானி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

விவேகானந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த பாடத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

'அகிலன்' படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது. விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும் என அறிவித்திருக்கும் படக்குழுவினர், படப்பிடிப்பு நிறைவடைந்ததை பிரத்யேக காணொளியாக இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். 

ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி இருப்பதாலும், 'அகிலன்' திரைப்படத்தில் 'இந்திய பெருங்கடலின் அரசன்' என குறிப்பிடப்பட்டிருப்பதாலும் ரசிகர்களிடையே இந்த திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.