வவுனியா நகரில்  வர்த்தக நிலையத்திற்கு முன்பாக   தலை சிதறிய நிலையில் ஆணொருவரின்  சடலம் ஒன்று நேற்று (27) மீட்கப்பட்டுள்ளது. 

வவுனியா பஐார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தின் முன்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணியளவில்  தலை சிதறிய நிலையில் வீதியின் நடைபாதையில் ஒருவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதனை அவதானித்த மக்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில்  விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்த நிலையில், குறித்த நபர் வர்த்தக நிலையத்தின் மேற்பகுதியில் விடுதி அமைந்துள்ள மூன்றாம் மாடி கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்துகொண்ட குறித்த நபர் இந்தியா நாட்டை சேர்ந்த 36 வயதுடைய சன்டிப் மலிக் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். 

இவர் விடுதியில் தங்கியிருந்து நகைவேலை செய்பவர் என்பதும் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்  குறித்த நபர் மாடியிலிருந்து விழுந்து இறந்துள்ள நிலையில் இது கொலையா தற்கொலையா, அல்லது தவறி வீழ்ந்து இறந்துள்ளாரா என்ற கோணங்களில் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.